தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் இன்று (26.08.2026) த ஞ்சையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், பி. தென்னவன், க. விடுதலைச்சுடர், மா. மணிமாறன், க. செம்மலர், வெற்றித்தமிழன், இரா. வேல்சாமி, வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன், கதிர்நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்
வடலூர் வள்ளலார் பெருவெளி சிதைப்புத் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கிறோம்! பெருவெளியைப் பழைய நிலைக்குச் சீரமைக்க வேண்டும்!
வடலூரில் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் அருட்பிரகாச வள்ளலார் அமைத்த “வள்ளலார் பெருவெளி” நிலத்தைச் சிதைக்கும் நோக்கில், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சற்றொப்ப 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பன்னாட்டு மையம்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தை பெருவெளிக்குள் நடத்தாமல் வெளியே நடத்த வேண்டுமெனக் கோரியும், பெருவெளியைப் பாதுகாப்பதற்காகவும் பார்வதிபுரம் கிராம மக்களுடன் இணைந்து நமது வள்ளலார் பணியகமும், தெய்வத் தமிழ்ப் பேரவையும் தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தன.
இந்நிலையில், மக்களின் இடைவிடாத போராட்டங்களின் தொடர்ச்சியாகவும், கடந்த தி.மு.க. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும், தற்போது அமையப்பெற்றுள்ள த.வெ.க. அரசு வடலூர் பன்னாட்டு மையக் கட்டுமானத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளதை இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் முழுமனதாக வரவேற்கிறது.
- ஆயினும், வள்ளலார் பெருவெளியின் எந்தப் பகுதியிலும் எவ்வித அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதைச் சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
- பெருவெளியைப் பாதுகாக்க அறவழியில் போராடிய பார்வதிபுரம் மக்கள், வள்ளலார் பணியக அன்பர்கள் மீது முந்தைய அரசால் போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
- கட்டுமானப் பணிகளுக்காகப் பெருவெளியில் தோண்டப்பட்ட ஆழமான குழிகள் அனைத்தையும் உடனடியாக மூடி, வள்ளலார் பெருவெளியை அதன் முழுமையான இயற்கை மற்றும் ஆன்மிகப் புனிதப் பழைய நிலைக்குச் சீரமைத்துத் தர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
===============================
த
ப