புனிதமான குடிகாரன்
சுராவின் முன்னுரை
ஆஸ்ட்ரிய எழுத்தாளர் ஜோசப் ரோத் (Joseph Roth) ஆங்கிலத்தில் எழுதிய ‘The Legend of the Holy Drinker’ என்ற புதினத்தைப் படித்தேன். படித்த கணத்திலேயே தமிழில் அதை மொழிபெயர்க்க வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துவிட்டேன். காரணம் – அதில் கையாளப்பட்டிருந்த விஷயம். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்ற ஒன்று ஒவ்வொரு மனிதனையும் தானே தேடிவந்து வாசல் கதவைத் தட்டுகிறது.
சிலர் அதைப் பயன்படுத்திக்கொண்டு முன்னுக்கு வந்து விடுகிறார்கள். வேறு சிலரோ அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, நாளும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நாம் நித்தமும் காணும் ஒரு விஷயம் இது. நம்மைத் தேடிவரும் அதிர்ஷ்டத்தை எப்படி கையைவிட்டு போய்விடாமல் மிகவும் கவனமாக நம் கைக்குள்ளேயே நாம் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கதை வடிவத்தில் ஜோசப் ரோத் இந்தப் புதினத்தில் கூறியிருக்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய அற்புதமான படைப்பு இது என்பதே என் எண்ணம். வாழ்க்கையை, கதையாக அவர் எழுதியிருக்கிறார் என்றே நான் உணர்கிறேன். இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால், அதற்குப் பிறகு வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இதைப் படித்தவர்கள் யாராக இருந்தாலும் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் தமிழ்நியூஸ்மீடிய.காம் (www.tamilnewsmedia.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
1934-ம் ஆண்டு ஒரு வசந்த காலத்தின் மாலை நேரத்தில் வயதாகிப் போன ஒரு மிடுக்கான தோற்றத்தைக் கொண்டிருக்கும் மனிதர், ஸேன் நதியின் பாலத்தை விட்டு இறங்கும் கற்படிகள் வழியே கீழே இறங்கினார். இங்குதான் எல்லாருக்குமே இதற்கு முன்பு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயமான – இனிமேலும் இதைப் பற்றி ஞாபகப்படுத்தத் தேவையில்லாத ஒரு செய்தியான பாரிஸில் சொந்த வீடு இல்லாத மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால், இரவு நேரங்களில் தங்குவதற்காக அந்த இடத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு வீடு இல்லாத மனிதன், நவநாகரீகமாக ஆடையணிந்து, வெளிநாடுகளில் இருக்கும் விஷயங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணியைப் போல் தோற்றம் தரும் அந்த வயதான மிடுக்கான மனிதருக்கு நேராக நடந்து சென்றான். இந்த வீடு இல்லாத மனிதன் மற்ற மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் பரிதாபப்படக்கூடியவனாகவோ, கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவன் மாதிரியோ தெரியவில்லை. இருந்தாலும் நன்றாக ஆடையணிந்து காட்சியளித்த அந்த மனிதனுக்கு இந்த வீடு இல்லாத மனிதன் உதவிகள் தேவைப்படும் ஓரு மனிதனாக தெரிந்தான். அவன் அந்த மனதரின் கண்களுக்கு அப்படித் தோற்றம் தந்ததற்குக் காரணம்? அதற்கான காரணம் என்னவென்று நம்மால் கூறமுடியாது. முன்பே கூறியதுபோல் அது ஒரு மாலை நேரம். பாலத்தின் மேற்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நதிக்கரையின் கீழ்ப்பகுதி மிகவும் இருண்டு போய் காணப்பட்டது.அந்த வீடு இல்லாத மனிதன் லேசாக ஆடிக் கொண்டிருந்தார். அவன் அணிந்திருந்த ஆடைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. அவன், அந்த வயதான நன்றாக உடையணிந்திருந்த மிடுக்கான தோற்றத்தைக் கொண்டிருந்த அந்த மனிதரைக் கொஞ்சம் கூட கவனிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அந்த மிடுக்கான மனிதரோ, ஆடிக்கொண்டிருந்த அந்த மனிதரையே சற்று தூரத்தில் நின்றவாறு வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மிடுக்கான மனிதர் ஆடாமல் அந்த வீடு இல்லாத மனிதனை நோக்கி நடந்தார். அந்த மனிதன் நடந்துவரும் வழியில் தான் போய் நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் நடந்தார். சிறிது நேரத்தில் ஒருவரையொருவர் நேருக்கு நேராக பார்த்தவாறு நின்றார்கள்.
‘‘சகோதரா, நீங்க எங்கே போறீங்க? “ அழகாக ஆடையணிந்து, வயதான அந்த நவ நாகரீக தோற்றத்தைக் கொண்ட மனிதர் கேட்டார்.
அந்த ஏழை மனிதன் அவரை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு சொன்னான்.
‘‘எனக்கு ஒரு சகோதரன் இருக்குற விஷயமே இதுவரை தெரியாது. எங்கே நான் போறேன்னும் எனக்குத் தெரியாது!”
‘‘அப்படின்னா நான் உங்களுக்கு ஒரு வழி காட்டுறேன்.” அந்த மனிதர் சொன்னார், ‘‘நான் உங்கக் கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். நீங்க மாட்டேன்னு சொல்லிடக்கூடாது”
‘‘நான் நீங்க எது சொன்னாலும் கேக்குறேன். நான் உங்க சேவைக்காக காத்திருக்கேன்” வெறுமனே சுற்றித் திரியும் அந்த வீடு இல்லாத மனிதன் சொன்னான்.
‘‘கஷ்டங்கள் இல்லாத மனிதர் இல்லை நீங்கள்னு எனக்குத் தெரியும். கடவுள் உங்களை என்கிட்ட அனுப்பியிருக்காரு. நான் சொல்றதுக்காக நீங்க மன்னிக்கணும். இப்போ உங்களுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுதுன்ற விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். என்கிட்டே தேவைக்கும் அதிகமாகவே பணம் இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொல்ல முடியுமா? இனி வர்ற கொஞ்ச நாட்களுக்கு என்ன தேவையோ அதை…”
அந்த ஏழை மனிதன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னான். ‘‘இருபது ஃப்ராங்க்.”
‘‘அது போதாது…” அந்த மனிதர் சொன்னார். ‘‘உங்களுக்கு எப்படியும் இருநூறு ஃப்ராங்காவது தேவைப்படும்னு நான் நினைக்கிறேன்.”
அதைக்கேட்டு அந்த வீடு இல்லாத மனிதன் ஒரு அடி பின்னால் தள்ளி நின்றான். அவன் கீழே விழுந்து விடப் போவது மாதிரி ஒரு நிமிடம் தோன்றியது. கஷ்டப்பட்டு கால் இடறிக் கீழே விழாமல் பார்த்துக் கொண்ட அந்த மனிதன் சொன்னான், ‘‘உண்மையா பார்க்கப் போனா இருபது ஃப்ராங்கைவிட இருநூறு ஃப்ராங்க்ல தான் எனக்கு விருப்பம். ஏன்னா, அந்தளவுக்கு கௌரவம் உள்ள மனிதன் நான். ஒருவேளை நான் சொல்வதை உங்களால புரிஞ்சுக்க முடியாமல் போகலாம். சில காரணங்களால் நீங்க தர்றதா சொல்ற தொகையை வாங்கிக்க முடியாத நிலையில் நான் இருக்கேன். முதல் காரணம் நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. இரண்டாவது காரணம் இந்தத் தொகையை நான் எப்போது எப்படி திருப்பித் தரப்போறேன்றது எனக்கே தெரியாத ஒரு விஷயம். மூணாவது காரணம் நீங்க இந்தத் தொகையை திருப்பிக் கேட்க முடியாது. ஏன்னா, எனக்குன்னு முகவரி எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளும் வேற வேற பாலத்துக்குக் கீழே நான் தங்கிக்கிட்டு இருக்கேன். இருந்தாலும் உங்கக்கிட்ட சொன்னது மாதிரி நான் ஒரு கௌரவமான மனிதன்தான்…”
‘‘எனக்கும்தான் முகவரி இல்ல…” வயதான அந்த மிடுக்கான மனிதர் சொன்னார். ‘‘ஒவ்வொரு நாளும் ஏதாவது பாலத்துக்குக் கீழே என்னையும் பார்க்கலாம். இருந்தாலும், நான் தர்றதா இருக்க இருநூறு ஃப்ராங்க்கை நீங்க கட்டாயம் வாங்கிக்கணும்னு நான் உங்களைக் கெஞ்சி கேட்டுக்கிறேன். உங்களைப் போல ஒரு ஆளுக்கு இது சர்வ சாதாரணமான விஷயம். இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறதா இருந்தா, இதை ஏதாவது ஒரு வங்கியில் என் கணக்குல போட்டுட்டா போச்சுன்னு சொல்லமுடியாத நிலைமையில நான் இருக்கேன். அது என்னன்னா சமீபத்துல லீஸியாதெரேசான்னு சின்ன கன்னியாஸ்திரியின் கதையைப் படிச்சு கிறிஸ்தவனா மாறிட்டேன். மேரி தேவாலயத்துல இருக்குற சின்ன தெரெசாவின் சிலையை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த இடத்தை கண்டுபிடிக்கிறது உங்களுக்கு ஒண்ணும் கஷ்டமான ஒரு விஷயம் இல்லை. அதுனால இந்த இருநூறு ஃப்ராங்க் உங்க கைக்கு வந்த பிறகு, உங்களுடைய மனசாட்சி இந்த சின்ன தொகையின் கடன்காரனா உங்களை அனுமதிக்கத் தயாரா இல்லைன்னு வர்றப்போ, நீங்க புனிதமேரி தேவாலயத்துக்குப் போங்க. பணத்தை அங்கே வழிபாட்டுக் கூட்டம் நடத்துற பாதிரியார் கையில் கொடுத்துடுங்க. நீங்க யாருக்காவது கடமைப்பட்டிருக்கிறதா இருந்தா, அது இந்த சின்ன தெரேசாவுக்குத்தான். இனி மறந்துடக் கூடாது. மேரி தேவாலயம்…”
‘‘அப்படியா…?” – அவன் சொன்னான். ‘‘நீங்க என்னையும் என்னோட அந்தஸ்து என்னன்றதையும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க. சொன்ன வாக்கைக் காப்பாத்துவேன்னு நான் உங்களுக்கு உறுதி தர்றேன். ஆனா, ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் என்னால வழிபாட்டுக் கூட்டத்துக்கு போக முடியும்!”
‘‘எனக்கும் முழு சம்மதம்தான். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை நீங்க போனா போதும்”- வயதான அந்த மனிதர் சொன்னார். அவர் தன் பர்ஸிலிருந்து இருநூறு ஃப்ராங்க்கை எடுத்து ஆடிக் கொண்டிருந்த மனிதனிடம் கொடுத்தவாறு சொன்னார். ‘‘நான் உங்களுக்கு நன்றி சொல்றேன்.”
‘‘சந்தோசம்” அந்த மனிதன் சொன்னான். அடுத்த கணம் இருட்டில் அவன் மறைந்தே போனான்.
இதற்கிடையில் நதிக்கரையின் கீழ்ப்பகுதி மேலும் இருண்டது. இருந்தாலும் பாலத்திற்கு மேலும், படகுத் துறையிலும் பாரீஸின் உற்சாகமான இரவின் வருகையை அறிவிப்பது மாதிரி பிரகாசமான விளக்குகள் எரியத் தொடங்கின.
2
அழகாக ஆடையணிந்திருந்த மிடுக்கான மனிதரும் இருட்டுக்குள் மறைந்தார். உண்மையாகவே வினோதமான பல அனுபவங்களும் அவருக்கு வாழ்க்கையில் கிடைத்திருக்கின்றன. கஷ்டங்கள் நிரம்பிய நிரந்தர வாழ்க்கையை அவர் வாழ ஆசைப்பட்டார். அதற்காக அவர் பாலங்களுக்குக் கீழே வாழ்ந்தார்.
அந்த ஏழை மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் ஒரு பயங்கர குடிகாரனாக இருந்தான். எப்போது பார்த்தாலும் மதுவின் போதையிலேயே இருந்தான். அவன் பெயர் ஆன்ட்ரியாஸ். எல்லா குடிகாரர்களையும் போல அவனும் கட்டுப்பாடு கொஞ்சமும் இல்லாத தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் இருநூறு ஃப்ராங்கை ஒரே நேரத்தில் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஓரு சிறு தாளை எடுத்து பாலத்திற்கிடையில் இருந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் செயிண்ட் தெரேசாவின் முகவரியையும் தான் அவளுக்குக் கடன் பட்டிருக்கும் இருநூறு ஃப்ராங்க்கையும் ஒரு பென்சிலால் எழுதினான். தொடர்ந்து ஸேன் நதிக்கரையில் இருந்த படகுத் துறைக்குச் செல்லும் கல்லால் ஆன படிகளில் ஏறினான். அங்கே ஒரு உணவு விடுதி இருப்பதை அவன் அறிவான். அவன் அங்கு சென்றான். தான் விருப்பப்பட்ட வண்ணம் சாப்பிட்டு முடித்து, மது அருந்தி மனம் போனபடி பணத்தைச் செலவழித்து, அங்கிருந்து கிளம்பும்போது வழக்கம்போல் பாலத்திற்கடியில் இருக்கப்போகிற இரவு நேரத்தில் குடிப்பதற்காக ஒரு முழு மதுபாட்டிலை வாங்கி கையில் வைத்துக் கொண்டான். பிறகு, அவன் குப்பைத் தொட்டியில் இருந்து பத்திரிகையைப் பொறுக்கி எடுத்தான். படிப்பதற்காக அல்ல…. தன்னைப் போர்த்திக் கொள்வதற்காக. வீடு இல்லாத எல்லோருக்கும் பத்திரிகைகள் குளிரிலிருந்து காப்பாற்றும் என்ற உண்மை தெரியும்.
3
அடுத்த நாள் காலையில் ஆண்ட்ரியாஸ் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்தான். காரணம் – எப்போதையும் விட அன்று எந்த வித கவலையும் இல்லாமல் சுகமாக உறங்கியதுதான். அந்த விஷயத்தைப் பற்றி சிறிதுநேரம் அவன் மனதில் சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் முதல் நாள் கொஞ்சமும் எதிர் பார்க்காமல் ஒரு அற்புத சம்பவம் நடைபெற்றது அவன் ஞாபகத்தில் வந்தது. உண்மையிலேயே அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். குளிர் குறைவாக இருந்த இரவாக இருந்ததாலும், பத்திரிகையை வைத்து மூடி சுகமாக தூங்கியதாலும், ஆற்றில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். அவன் குளித்தே பல நாட்கள் ஆகிவிட்டன. சரியாகச் சொன்னால் குளிர்காலம் ஆரம்பித்ததிலிருந்தே அவன் குளிக்கவில்லை. உடம்பிலிருந்து ஆடைகளை அகற்றுவதற்கு முன்பு தன் சட்டையின் இடதுபக்கம் இருக்கும் பாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தைப் பற்றி அவன் எச்சரிக்கையாக நினைத்துக் கொண்டான். நேற்று நடைபெற்ற அந்த அற்புதச் செயலை மீண்டும் அவன் தன் மனதில் ஓட்டிப் பார்த்து ஆனந்த அனுபவத்தை அடைய முயற்சித்தான். பிறகு ஸேன் நதியில் ஆள் இல்லாத ஒதுகுப்புறமாகத் தேடி அவன் நடந்தான். கழுத்தையும் முகத்தையும் மட்டுமாவது கழுவ வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் மக்களின், தன்னைப் போன்ற ஏழை மக்களின் பார்வையின் தான் படுவதை பொதுவாக அவன் விரும்பவில்லை. (சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அந்த ஏழை மக்களை பற்றி அவன் மனதில் அப்போது இந்த நினைப்பு ஓடிக் கொண்டிருந்தது). தான் ஏற்கனவே தீர்மானித்திருந்த முடிவை அவனாகவே வேண்டாமென்று மாற்றிக் கொண்டு தன்னுடைய கைகள் இரண்டையும் வெறுமனே தண்ணீரில் நனைக்க மட்டும் செய்தான். மீண்டும் சட்டையை அணிந்து கொண்டான். உள்ளே இடது பக்கம் இருக்கும் பாக்கெட்டில் வங்கி நோட்டுகள் இருப்பதை மீண்டும் ஞாபகப்படுத்தி நினைத்துப் பார்த்துக் கொண்டான். என்னவோ சிந்தித்தவாறு அவன் அங்கிருந்து நடந்தான்.
அவனின் அன்றையபொழுது ஆரம்பித்தது. காலத்தின் ஆரம்பம் முதல் இப்போதும் அந்த ‘நாள்’ என்று ஒன்று கடந்து போய் கொண்டுதான் இருக்கிறது. அவனுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ரூதெகதர் வென்த்திலுள்ள ரஷ்யன்-ஆர்மேனியன் உணவு விடுதிக்குப் போக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். கையில் எவ்வளவு சிறிய தொகை கிடைத்தாலும், அதைக் கொண்டு வந்து அந்த உணவு விடுதியில் கிடைக்கும் விலை குறைநத மதுவிற்கே செலவழித்து விடுவது என்பது பொதுவாக அவன் எப்போதும் செய்யக் கூடியதுதான். இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்த பத்திரிகைகள் விற்கும் கடைகளைப் பார்த்ததும் அவன் நின்றான். சில வார இதழ்களின் அட்டைப் படங்களைப் பார்த்த அவனுக்கு இனம் புரியாத ஒரு ஆர்வம் உண்டானது. இன்று என்ன கிழமை, என்ன தேதி, அது எந்த வாரம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அன்று வியாழக்கிழமை என்பதை அவன் அறிந்து கொண்டான். தான் பிறந்ததும் ஒரு வியாழக்கிழமைதான் என்பதும் அவனுக்கு அப்போது ஞாபகத்தில் வந்தது. எது எப்படியோ, அன்று தேதி என்ன என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அந்த வியாழக்கிழமையை தன்னுடைய பிறந்த நாளாக அவன் மனதில் தீர்மானித்துக் கொண்டான். குழந்தைத்தனமான உற்சாகமும், துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் மனதையும் கொண்டிருந்த அந்த மனிதன் நல்ல சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான். அதனால் தான் அந்த பாருக்குப் போக வேண்டாம் என்றும் அதைவிடச் சற்று உயர்ந்த நிலையில் இருக்கும் வேறு ஏதாவது உணவுச் சாலைக்குப் போகலாம் என்றும் தீர்மானித்தான். பத்திரிகையைக் கையில் பிடித்தவாறு அவன் அதைத் தேடி நடந்தான். அங்கே அமர்ந்து ஒரு காப்பியும் ரொட்டியும் சாப்பிடலாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான். அந்தக் காப்பியில் சிறிதளவு ரம்மைக் கலந்து பருகவேண்டும், அது உடம்புக்கு மேலும் கொஞ்சம் உற்சாகத்தைத் தரும் என்று அவன் முடிவெடுத்தான்.
அந்த முடிவுடன் அவன் தான் அணிந்திருந்த கிழிந்துபோன ஆடைகளைப் பற்றி கவலைப்படாமல், உன்னத நிலையில் இருக்கும் ஒரு மதுக்கடையை அடைந்து மேஜையை நோக்கி நடந்தான்.
இதுவரை அவன் பாரில் நின்றுதான் மது அருந்தியிருக்கிறான். சில நேரங்களில் முழங்கையை ஊன்றி நின்றிருக்கிறான். அவ்வளவுதான். அவன் அமர்ந்தான். அவன் அமர்ந்திருந்த நாற்காலி ஒரு கண்ணாடிக்கு நேராக இருந்ததால், அதில் தெரிந்த தன்னுடைய உருவத்தைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய உருவத்தை தான் பார்ப்பதாக அவன் மனதில் பட்டது. அதை நினைத்து உண்மையிலேயே அவன் அதிர்ந்து போனான். சில வருடங்களாக கண்ணாடிகளைக் கூட தான் நம்பாமல் போனது ஏன் என்பதைப் பற்றி அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய அழிவின் வெளிப்பாட்டை தன்னுடைய கண்களால் பார்ப்பது என்பது அவன் விரும்பக்கூடிய ஒன்றா என்ன? தன்னை இதுவரை அவனுக்கு முகமே இல்லாதது மாதிரி, அதாவது… தன்னுடைய வீழ்ச்சிக்கு முன்பு இருந்த முகத்தையே தான் இப்போதும் கொண்டிருப்பதாகவே அவன் நினைத்திருந்தான்.
கண்ணாடியைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி உண்டாகத்தான் செய்தது. குறிப்பாக – தன்னைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருந்த வசதி படைத்த மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்களுடன் தன்னுடைய உணவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவன் முகத்திற்குச் சவரம் செய்து சரியாக ஒரு வாரம் ஆகிவிட்டது. வழக்கம்போல, வீடு வாசல் இல்லாத ஒரு மனிதன் அவன் தந்த சில்லறை காசை வாங்கிக்கொண்டு சவரம் செய்து விட்டான். இப்போது புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவன் மனதிற்குள் தீர்மானம் செய்து வைத்திருந்ததால், அதற்கேற்றபடி உரிய முறையில் தன்னுடைய முகத்தைச் சவரம் செய்ய வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். அப்போதே, சாப்பிடுவதற்கு முன்பே நல்ல ஒரு பார்பர் ஷாப்பிற்குப் போக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.
மனதில் முடிவெடுத்த அந்தகணமே, புறப்படவும் செய்தான். பார்பர் ஷாப்பிற்குள் நுழைந்தான்.
மீண்டும் மதுக்கடைக்குத் திரும்பி வந்தபோது, தான் உட்கார்ந்திருந்த பழைய இடத்தில் வேறொரு ஆள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். இப்போது தூரத்தில் இருந்துதான் கண்ணாடியில் தன் உருவத்தை அவனால் பார்க்க முடிந்தது. தான் இப்போது நவநாகரீக மனிதனைப் போல் தோன்றுவதாக அவன் மனதிற்குப் பட்டது. மீண்டும் இளமைத் தோற்றம் தன்னிடம் வந்திருப்பதாக அவன் உணர்ந்தான். தான் ஒரு புதிய மனிதனாக மாறியிருப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது. ஆமாம்… தன்னுடைய முகத்தில் இதற்கு முன்பு இல்லாத பிரகாசம் தற்போது வந்து ஒட்டிக் கொண்டிருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால், தான் அணிந்திருந்த கிழிந்துபோன ஆடைகள் கூட அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. சட்டையின் ஒரு பக்கம் கிழிந்து போயிருப்பது, சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் கோடுகள் போட்ட காலருக்குப் பின்னால் வைத்திருந்த கைக்குட்டை – என எதையுமே அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
அதனால் அவன் மீண்டும் அமர்ந்தான். ஆண்ட்ரியாஸ் உற்சாகமாக ‘காஃபி ரம்’ கொண்டுவரும்படி திரும்பி வந்த காதலியைப் பார்த்தது போல படு உற்சாகமான குரலில் சொன்னான் அவன். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த பணியாள் மிகவும் பணிவுடன் அவன் கேட்டதைக் கொண்டு வந்த பரிமாறினான். அங்கு வந்திருந்த வசதி படைத்த மனிதர்கள் எல்லோரிடமும் காட்டும் பணிவைத்தான் ஆண்ட்ரியாஸிடமும் அவன் காட்டினான். அவன் காட்டிய பணிவு ஆண்ட்ரியாஸுக்கு சந்தோஷத்தை அளித்தது. தன்னைப் பற்றிய மதிப்பு கூடுவதாகவும் அன்றுதான் தன்னுடைய பிறந்த நாள் என்றும் திட்டவட்டமாக அவன் முடிவு செய்து விட்டான்.
அவனுக்கு அடுத்த மேஜையில் ஒரு நவநாகரீகமான மனிதர் அமர்ந்திருந்தார். அவர் வைத்த கண் எடுக்காமல் நம்முடைய வீடு இல்லாத மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் அவன் பக்கம் திரும்பிய அந்த மனிதர் கேட்டார். ‘‘கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும்னு ஆசை உங்களுக்கு இருக்கா? எனக்காக ஒரு வேலை செய்து தர முடியுமா? இங்க பாருங்க… நாளைக்கு நாங்க வீடு மாத்துறோம். சாமான்களை மாத்துற விஷயத்துல என் மனைவிக்கும், அந்த வேலையைச் செய்ய வர்ற வேலையாட்களுக்கும் உதவியா நீங்க கொஞ்சம் இருக்க முடியுமா? உங்களுக்கு அதற்கான பலம் இருக்கிறது உங்களைப் பார்க்கும்போதே தெரியுது. நாளை நீங்க ஓய்வா இருக்கீங்களா? இந்த வேலையை உங்களால செய்ய முடியுமா?”
‘‘நிச்சயமா…” ஆண்ட்ரியாஸ் சொன்னான்.
‘‘இரண்டு நாட்கள் வேலை செய்றதுக்கு நீங்க எவ்வளவு பணம் எதிர்பார்க்கறீங்க? நாளையும் சனிக்கிழமையும் எனக்கொரு பெரிய ஃப்ளாட் இருக்கு. புதுச மாறுற ஃப்ளாட் அதைவிடப் பெருசு. ஏகப்பட்ட சாமான்களை மாத்தி ஆகணும். இந்த வேலையில நான் உதவி செய்ய முடியாத நிலைமையில இருக்கேன். காரணம்- கடையை நான்தான் பாத்துக்க வேண்டியிருக்கு…”
‘‘அந்த வேலையை நான் பார்த்துக்குறேன். அதுக்கு நான் சரியான ஆளுதான்” – வீடு இல்லாத மனிதன் சொன்னான்.
‘‘கொஞ்சம் குடிக்குறதுல ஒண்ணும் பிரச்சினை இல்லியே…” அந்த நவநாகரீக மனிதர் கேட்டார்.
அவர் இரண்டு பெர்னோ (சாப்பிடுவதற்கு முன்பு பசி உண்டாக்குவதற்காக அருந்தும் ஒருவகை மது) கொண்டு வரச் சொன்னார். அந்த மனிதரும் ஆண்ட்ரியாஸும் கண்ணாடி டம்ளர்களை முத்தமிடச் செய்தார்கள். வேலை செய்வதற்கான கூலி என்னவென்பதையும் அவர்கள் தீர்மானித்தார்கள். இருநூறு ஃப்ராங்க் கூலியாக நிர்ணயிக்கப்பட்டது.
‘‘இன்னொரு பெர்னோ குடிக்கலாமே” – தன்னுடைய பெர்னோ காலியானவுடன் அந்த மனிதர் சொன்னார்.
‘‘குடிக்கலாம். ஆனா, இப்போ நான் வாங்கித் தர்றேன்” வீடு இல்லாத மனிதனான ஆண்ட்ரியாஸ் சொன்னான். ‘‘நான் எப்படிப்பட்ட மனிதன்னு உங்களுக்குத் தெரியாது. நான் எந்த வேலையையும் ஒழுங்கா செய்யக்கூடியவன். ஒரு வேலையை ஒத்துக்கிட்டா, கடைசிவரை சரியா முடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். என் கைகளைக் கொஞ்சம் பாருங்க…” – அந்த மனிதர் பார்ப்பதற்காக தன்னுடைய கைகளை அவன் நீட்டினான். ‘‘என் கைகள் அழுக்கு உள்ளதாக இருக்கலாம். இருந்தாலும் இது உண்மையான உழைப்பாளியோட கைகள்…”
‘‘நானும் அதைத்தான் விரும்புறேன்”- அந்த நவநாகரீகமான மனிதர் சொன்னார்.
அந்த மிடுக்கான மனிதரின் கண்கள் மிகவும் பளபளப்பு கொண்டதாக இருந்தன. அவரின் முகம் ஒரு குழந்தையின் முகத்தைப்போல சதை பிடிப்புடன் இருந்தது. அவரின் மீசை சிறியதாகவும், கருப்பாகவும் இருந்தது. மொத்தத்தில் அவரிடம் ஒரு இனிய சுபாவம் குடி கொண்டிருந்தது. ஆண்ட்ரியாஸுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.
அதனால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து குடித்தார்கள். இரண்டாவது முறை குடித்தற்கு ஆண்ட்ரியாஸ் பணம் தந்தான். குழந்தை முகத்தைக் கொண்ட அந்த மனிதர் எழுந்தபோது அவர் நல்ல தடிமனான ஆள் என்பதை ஆண்ட்ரியாஸ் புரிந்து கொண்டான். அவர் தன் பர்ஸில் இருந்த ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அதில் தன்னுடைய முகவரியை எழுதித் தந்தார். அதே பர்ஸில் இருந்து ஓரு நூறு ஃப்ராங்க் நோட்டையும் எடுத்து அதையும் ஆண்ட்ரியாஸிடம் தந்துவிட்டு சொன்னார். ‘‘நீங்க நாளைக்கு கட்டாயம் வந்து நான் சொன்ன வேலையைச் செய்யணும்ங்கறதுக்காக இந்த முன் பணத்தைத் தர்றேன். நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு சரியா வந்துடணும். சரியா? மறந்துடக் கூடாது. மீதி பணத்தை, வேலை முடிஞ்ச உடனே தர்றேன். அப்போ திரும்பவும் நாம ஒண்ணா உட்கார்ந்து மது அருந்துவோம். சரிதானே? நான் விடை பெற்றுக் கொள்கிறேன் நண்பரே!” இவ்வளவையும் சொன்ன அந்த தடிமனான, குழந்தை முகத்தைக் கொண்ட அந்த மனிதர் புறப்பட்டார். பணத்தை எடுத்த அதே பர்ஸில் இருந்துதான் விசிட்டிங் கார்டையும் அவர் எடுத்தார் என்ற ஒரு விஷயம்தான் ஆண்ட்ரியாஸின் மனதில் திரும்பத் திரும்ப வலம் வந்து கொண்டிருந்தது. தன் கையிலும் இப்போது பணம் இருப்பதாலும், மேலும் பணம் வருவதற்கான சூழ்நிலை இப்போது உண்டாகி விட்டிருப்பதாலும், சொந்தத்தில் ஒரு பர்ஸ் வாங்க வேண்டும் என்று தீர்மானித்தான் அவன். மனதில் இந்த விஷயத்தை நினைத்துக் கொண்டே தோல் சாமான்கள் விற்கும் கடை எங்கே இருக்கிறது என்பதை விசாரித்தவாறு அவன் நடந்தான். முதல் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பார்த்தான். கருப்பு வண்ணத்தில் ஆடையும், ஆடை அழுக்காகி அந்தப் பெண் அவளின் கவுண்டருக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவள் ஒரு அழகி என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே முடிவு செய்தான் ஆண்ட்ரியாஸ். சுருண்ட தலைமுடியைக் கொண்டிருந்த அவளின் கையில் சற்று கனமான ஒரு ப்ரேஸ்லெட் இருந்தது. தொப்பியை எடுத்து அவளுக்கு மரியாதை செலுத்தியவாறு அவன் உற்சாகத்துடன் சொன்னான். ‘‘நான் ஒரு பர்ஸ் வாங்குறதுக்காக வந்தேன்.” அந்தப் பெண் ஆணட்ரியாஸின் கிழிந்து போன ஆடைகளைப் பார்த்தாள். அவனைத் தாழ்வான எண்ணத்தில் அவள் பார்க்கவில்லை. மாறாக, தன் முன்னால் நின்றிருக்கும் மனிதனை எடை போடும் விதத்தில்தான் இருந்தது அவளின் பார்வை. காரணம்- அவளுடைய அந்தக் கடையில் விலை அதிகமானது, சராசரி விலையைக் கொண்டது, மிகவும் குறைந்த விலையைக் கொண்டது என்ற மூன்று நிலைகளைக் கொண்ட பர்ஸ்களும் விற்பனைக்கு இருந்தன. அவள் ஒரு வார்த்தைகூட கூறாமல் ஒரு ஏணியின் மேல் ஏறி எல்லாவற்றுக்கும் மேலே இருந்த தட்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தாள். தங்களிடமிருந்து பழையவற்றைக் கொடுத்து புதியவற்றை வாங்கிச் செல்லும் நபர்கள் கொடுத்த பழைய பர்ஸ்கள் ஏராளமாக அதில் இருந்தன.
அவளுடைய கால்கள் நல்ல சதைப்பிடிப்புடன் அழகாக இருப்பதையும், அவளின் பாதங்கள் மிகவும் சிறிய காலணிகளுக்குள் மறைந்திருப்பதையும் ஆண்ட்ரியாஸ் கவனித்தான். அதே நேரத்தில் அப்படிப்பட்ட பாதங்களை கைகளால் தடவிய, அவற்றை முத்தமிட்ட, பாதி மறந்துபோன அந்த கடந்து போன இனிமையான நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். பொதுவாக பெண்களின் முகங்களை அவன் மறந்து போயிருந்தான். பெண்களின் முகங்களை யார் முகத்தையும் அவன் ஞாபகப்படுத்திப் பார்க்காமல் இருந்தான் – ஒரே ஒரு பெண்ணின் முகத்தைத் தவிர எந்தப் பெண்ணுக்காக அவன் சிறைக்குப் போய்விட்டு வந்தானோ, அந்தப் பெண்ணை மட்டும். இதற்கிடையில் அந்த இளம்பெண் ஏணிப்படிகளை விட்டு இறங்கியிருந்தாள். அவள் தன் கையில் இருந்த பெட்டியைத் திறந்தாள். எல்லாவற்றுக்கும் மேலே இருந்த ஒரு பர்ஸை பார்க்கக் கூடச் செய்யாமல் அவன் எடுத்தான். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தொப்பியைத் தலையில் அணிந்து அந்த இளம்பெண்ணைப் பார்த்து சிரித்தான். அவளும் பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்தாள். சிறிது கூட கவனமே செலுத்தாமல் அவன் அந்தப் புதிய பர்ஸை பணத்தோடு சேர்த்து பாக்கெட்டிற்குள் வைத்தான். அந்தப் பர்ஸ் ஒரு பொருட்டாகவே அப்போது அவனுக்குத் தோன்றவில்லை. அதற்கு பதிலாக ஏணிப்படியும், இளம் பெண்ணின் கால்களும், பாதங்களும் அவன் மனம் முழுக்க நிறைந்திருந்தன. அதன் காரணமாக அவன் ஒரு காலத்தில் ஆனந்த அனுபவங்கள் பலவற்றை அடைந்த இடங்களைத் தேடி நேராக மாங்மார்த்ரியை நோக்கி நடந்தான். ஒரு அகலம் குறைந்த சந்தில் பெண்கள் மது அருந்தும் இடத்தை அவன் பார்த்தான்.
பெண்களுக்கு மத்தியில் ஒரு மேஜையில் அமர்ந்து அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஒருமுறை மது வாங்கினான். அங்கிருந்த ஒருத்தியை அவன் தேர்ந்தெடுத்தான். சரியாகச் சொல்வதாக இருந்தால் தனக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்திருந்த பெண்ணையே அவன் தேர்ந்தெடுத்தான். அவன் அவள் இருக்கும் அறைக்குள் சென்றான். அப்போது மதிய நேரமாக இருந்தது. இருந்தாலும் அவன் மறுநாள் காலைவரை அங்கேயே உறங்கினான். அதற்குக் காரணம் அந்தப் பெண் அவனிடம் பெரிய மனதுடன் நடந்து கொண்டதுதான். அவள் அவனை அங்கேயே உறங்க அனுமதித்தாள்.
மறுநாள் காலையில் வெள்ளிக்கிழமையன்று, தடிமனான அந்த நவநாகரீக மனிதருக்காக அவன் வேலை செய்யப்போனான். அந்த மனிதரின் மனைவிக்கு வீட்டுச் சாமான்களை ஒதுக்கி வைப்பதிலும் அவன் உடனிருந்து உதவ வேண்டும். இதுதான் அவனுடைய வேலை. பொருட்களை எடுத்துக் கொண்டு போகும் பணியாட்கள் அவர்களது வேலைகளை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தார்கள். இருந்தாலும் ஆண்ட்ரியாஸ் செய்ய வேண்டிய வேலைகள் என்றும் சிறியதும் பெரியதுமாக நிறையவே அங்கு இருந்தன. வேலை செய்ததால் தன்னுடைய உடம்பின் சதைக்கு மீண்டும் பலம் கிடைத்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த வேலையைச் செய்ததில் அவனுக்கு மிகவும் சந்தோஷம் கிடைத்தது. பொதுவாக அவன் வேலை செய்து வளர்ந்தவன்தான். தன்னுடைய தந்தையைப் போல அவனும் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியாக இருந்தான். அதற்கு முன்பு தன் தந்தையைப் போலவே சிறிது காலம் விவசாய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். வீட்டின் சொந்தக்காரி அவன் மன அமைதி கெடும் விதத்தில் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அவன் இருக்க வேண்டியதைப் போல அவள் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தாள். தான் போக வேண்டுமா வர வேண்டுமா என்று ஒரே குழப்பத்திற்கு ஆளாகி விட்டான் அவன்.
அவளும் பயங்கர குழப்பத்தில்தான் இருந்தாள். இப்படி ஒரு சூழ்நிலையில் வீடு மாறுவது என்பது அவளுக்கு அத்தனை லேசான ஒரு காரியமாக இருக்கவில்லை. ஒரு வேளை புதிதாகப் போகப் போகும் இடம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி அவளுக்குச் சரிவரத் தெரியாமல் இருக்கலாம். அன்று பகல் முழுவதும், இரவிலும் ஒருவேளை அடுத்த நாளின் சில மணி நேரங்கள் கூட அவர்கள் அதே வீட்டில் இருக்கவேண்டி நேரிடலாம். அந்த விஷயம் அவளுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் கோட்டும், தொப்பியும், கையுறைகளும் அணிந்து ஹேண்ட்பேக்கையும் குடையையும் கையில் வைத்துக் கொண்டு வெளியே போவதற்காக அவள் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தாள். அவ்வப்போது அவள் தன்னுடைய உதடுகளில் சாயம் தேய்க்கவும் மறக்கவில்லை. அதை அவன் கவனிக்கவே செய்தான். அதை அவனால் புரிந்து கொள்ளவும் முடிந்தது. என்ன இருந்தாலும் அவள் பெண்ணாயிற்றே! ஆண்ட்ரியாஸ் நாள் முழுக்க வேலை செய்தான். அவன் வேலையை நிறுத்தியபோது வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள். ‘‘நாளைக்குக் காலையில சரியா ஏழு மணிக்கு வந்துடணும்” அவள் ஹேண்ட் பேக்கில் இருந்து சில்லறை நாணயங்கள் வைக்கும் பர்ஸை எடுத்தாள். அவள் கை அந்தப் பர்ஸுக்குள்ளேயே துழாவின. முதலில் ஒரு பத்து ஃப்ராங்க் நாணயத்தை எடுத்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ, அதைப் பர்ஸுக்குள்ளேயே போட்டாள். கடைசியில் ஒரு ஐந்து ஃப்ராங்க் நாணயத்தை எடுத்தாள். ‘‘இதோ இதை நீங்க வச்சுக்குங்க” – அவள் சொன்னாள். ‘‘இதை வச்சு…” – அவள் தொடர்ந்து சொன்னாள். ‘‘தண்ணி அடிச்சு எல்லாத்தையும் காலி பண்ணிடாதீங்க. நாளைக்கு சரியான நேரத்துக்கு இங்க வந்துடணும்.”
ஆண்ட்ரியாஸ் அவளுக்கு நன்றி கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான். அவன் அந்தப் பணத்தை வேறு எதற்கும் அல்ல, மது அருந்துவதற்காக மட்டும் செலவழித்தான். அன்று இரவு ஒரு சிறு ஹோட்டலில் அவன் தங்கினான்.
காலையில் ஆறு மணிக்கு எழுந்தவுடன் அவன் மிகவும் கவனமாக தன்னை தயார் படுத்திக்கொண்டு வேலை செய்வதற்காகக் கிளம்பினான்.
4
பொருட்களை எடுத்துச் செல்லும் பணியாட்கள் வருவதற்கு முன்பே அவன் அங்கு வந்து விட்டான். இரவு தூங்குவதற்கே போகவில்லை என்பது மாதிரி வீட்டின் சொந்தக்காரி முதல் நாளைப் போலவே தொப்பியும் கையுறைகளும் அணிந்து அங்கே நின்றிருந்தாள். அவள் மகிழ்ச்சி பொங்க அவனிடம் சொன்னாள், ‘‘நான் சொன்னபடி நீங்க சரியா நடந்திருக்கீங்க. நான் தந்த பணத்தை முழுசா தண்ணி அடிக்க நீங்க பயன்படுத்தல, இல்லே?”
ஆண்ட்ரியாஸ் தீவிரமாக தன்னுடைய வேலையில் இறங்கினான். பிறகு அவன் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவர்களின் புதிய வீட்டிற்குச் சென்றான். அங்கே அந்த நவநாகரீகமான மனிதர் வந்து கூலியின் இரண்டாவது தவணையை தன்னிடம் கொடுக்கும் வரை அவன் காத்திருந்தான்.
‘‘சரி… நாம போகலாம். நான் ஏற்கனவே வாக்கு கொடுத்தபடி மது அருந்தச் செல்வோம்” – அந்த நவநாகரீக மனிதர் அழைத்தார்.
ஆனால், அதற்கு அவரின் மனைவி சம்மதிக்கவில்லை. அவன் இருவருக்குமிடையில் வந்து நின்று தன் கணவனிடம் சொன்னாள்.
‘‘இரவு உணவு தயாரா இருக்கு” அதன் விளைவாக ஆண்ட்ரியாஸ் மட்டும் தனியே போனான். அவன் மது அருந்தினாலும், அளவுக்கு மேல் போய் நிதானம் தவறும் அளவுக்குக் குடிக்கக் கூடாது. பணம் அதிகமாகச் செலவாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான். காரணம்- அடுத்த நாள் தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருக்கும் விஷயத்தை அவன் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அதன்படி அவன் புனித மேரியின் தேவாலயத்திற்குப் போக வேண்டுமென்று விரும்பினான். சின்ன தெரேசாவிற்குத் தர வேண்டிய கடனில் ஒரு பங்கையாவது அவளுக்குத் தர வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். ஆனால், கொஞ்சம் கூட அதைப் பற்றியே யோசனையே இல்லாமல், சொல்லப்போனால் அந்த எண்ணமே மறக்கடிக்கப்படும் அளவிற்கு அதிகமாக அவன் குடிக்கத் தொடங்கினான். செலவு குறைவாக வரும் ஹோட்டலுக்குப் போவது என்ற வறுமையில் கிடக்கும் மனிதனின் சிந்தனையை அவன் மீறத் தலைப்பட்டான்.
அதன் விளைவாக சற்று செலவு அதிகமாக வரும் ஹோட்டலை நோக்கி அவன் கால்கள் நடைபோட ஆரம்பித்தன. தன் கையில் பொருட்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், அணிந்திருந்த ஆடைகள் பரிதாபத்தை எழுப்பும் வண்ணம் இருந்ததாலும், அங்கே கொடுக்க வேண்டிய முழுப்பணத்தையும் அவனை முதலிலேயே செலுத்தும்படி கேட்டார்கள். அவனும் வேறு வழியில்லாமல் அதைக் கொடுத்தான். ஆனால், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தனக்கு வந்ததற்காக அதைப் பற்றி யோசித்து, வருத்தப்படும் நிலையில் அவன் இல்லை. மறுநாள் காலை வரை நிம்மதியாகப் படுத்து உறங்கினான். அருகிலிருந்த ஒரு தேவாலயத்திலிருந்து முழங்கிய மணியோசை அவனை எழுப்பியது. இன்று எவ்வளவு முக்கியமான நாள் என்ற சிந்தனையே இப்போதுதான் அவனுடைய மனதின் அடித்தளத்தில் ஓடியது. இன்று ஞாயிற்றுக்கிழமை. இன்று செயிண்ட் தெரேஸாவைப் பார்த்து கொடுக்க வேண்டிய கடன் தொகையைத் தர வேண்டிய நாளாயிற்றே! அவன் அடுத்த நிமிடம் ஆடையை அணிந்து தேவாலயம் இருக்கும் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தை நோக்கி வேகமாக நடந்தான். ஆனால், அவன் அங்கு போய்ச் சேரும்போது மிகவுகம் தாமதமாகிவிட்டது. அவன் அங்கு சென்றபோது, தேவாலயத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் பத்து மணிக்கான வழிபாட்டுக் கூட்டம் முடிவடைந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அடுத்த வழிபாட்டுக் கூட்டம் எப்போது என்று அவன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தான். மத்தியானம் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். தேவாலயத்திற்கு வெளியே வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பதை பொதுவாக அவன் விரும்பவில்லை. மதிய கூட்டம் ஆரம்பிக்கும் வரை தேவையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கவும் அவனுக்கு விருப்பமில்லை. அதனால் சற்று வசதி கொண்ட ஏதாவதொரு இடம் கிடைக்குமா என்று அவன் சுற்றிலும் தேடிப் பார்த்தான். நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தேவாலயத்திற்கு நேர் எதிரில் ஒரு மூலையில் ஒரு மது அருந்தும் இடம் இருப்பதை அவன் பார்த்தான். அவ்வளவுதான். வழிபாட்டுக் கூட்டம் ஆரம்பிக்கும் வரை அங்கேயே தன்னுடைய நேரத்தைச் செலவிட அவன் தீர்மானித்து விட்டான்.
பாக்கெட்டில் பணம் இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனின் தைரியத்துடன் ஒரு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான். வாழ்க்கையில் தான் இதே போல் எத்தனையோ முறை பெர்னோ குடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு, அவன் அதைக் குடிக்க ஆரம்பித்தான்.
குடித்து முடித்ததும், மீண்டும் ஒரு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான். திரும்பவும் மூன்றாவதாக ஒரு பெர்னோ கொண்டு வரச்சொன்னான். சற்று நீரின் அளவைக் குறைத்தான். நான்காவது முறை பெர்னோவைக் குடிக்கும் போதுதான் இப்போது அருந்துவது இரண்டாவது முறையா, ஐந்தாவதா, ஆறாவதா என்று தெரியாத அளவுக்கு அவன் ஆளாகிவிட்டான். இந்த மது அருந்தும் சாலையில் தான் இப்போது செய்து கொண்டிருப்பது என்ன… நகரத்தின் ஒரு மூலையில் இருக்கும் இந்த இடத்திற்கு தான் வந்தது எப்படி என்பதைப் பற்றிய ஞாபகமே அவனுக்கு இல்லாமல் போனது. தனக்கு ஏதோ ஒரு பொறுப்பு இருக்கிறது, அந்த மிகவும் முக்கியமான பொறுப்பை தான் நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது என்பது மட்டும் அவனின் மனதிற்கு நன்கு தெரிந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் எழுந்தான். நேராக நடந்து வாசலைக் கடந்த போது, எதிரில் இருந்த தேவாலயம் கண்ணில் பட்டது. அப்போதுதான் அவனுக்கு எல்லா விஷயங்களும் ஞாபகத்திற்கு வந்தன. தான் இப்போது எங்கிருக்கிறோம் என்பதும், தான் செய்ய வேண்டிய அந்த மிக முக்கியமான வேலை என்ன என்பதும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதும் அடுத்தடுத்து அவன் ஞாபகத்தில் வந்தன. அவன் தேவாலயத்தை நோக்கி தன் கால்களை எடுத்து வைக்க முற்பட்டபோது, அவன் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் அவனுக்குக் கேட்டது. ‘ஆண்ட்ரியாஸ்’ என்று அழைக்கும் ஒரு பெண்ணின் குரல். வேறு ஏதோ ஒரு யுகத்தில் இருந்து கேட்பது மாதிரி அவனின் காதுகளில் அந்தக் குரல் வந்து விழுந்தது. குரல் வந்த வலது பக்கத்தை அவன் திரும்பிப் பார்த்தான். யாருக்காக அவன் சிறைக்குச் சென்றானோ, அந்தப் பெண்ணின் முகம் அவன் மனக் கண்ணில் தோன்றியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி… கரோலின்தான்.
கரோலின்! முன்பு எப்போதும் பார்த்திராத ஆடைகளையும், தொப்பியையும் அணிந்து கொண்டு அவள் அவனைப் பார்த்தாள். அவளுடைய முகம் இப்போதும் முன்பு அவன் பார்த்த மாதிரியே தான் இருந்தது. தன்னை நோக்கி நீட்டிய அவளின் கைகளை அவன் தன்னுடைய கரங்களால் பற்றினான். ‘‘என்ன ஆச்சரியம். இப்படியொரு சந்திப்பா?”- அவள் சொன்னாள். அது உண்மையாகவே அவள் குரல் தான். அதாவது, கரோலினுடைய குரல்.
‘‘நீங்க தனியாவா இருக்கீங்க?” அவள் கேட்டாள்.
‘‘ஆமா…” அவன் சொன்னான். ‘‘நான் தனியாகத்தான் இருக்கேன்…”
‘‘அப்படின்னா வாங்க… நாம பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு” – அவள் சொன்னாள்.
‘‘ஆனா… ஆனா…” அவன் சொன்னான்; ‘‘நான் ஒரு ஆளை இங்கே சந்திக்க வேண்டியிருக்கு.”
‘‘அது ஒரு பெண்ணா…?”
‘‘ஆமா…” அவன் பயத்துடன் சொன்னான்.
‘‘யார் அது?”
‘‘சின்ன தெரேஸா…”- அவன் சொன்னான்.
‘‘அவ ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்ல…” – கரோலின் சொன்னாள். அப்போது அவர்களை ஒரு வாடகைக் கார் கடந்து சென்றது. கரோலின் தன்னுடைய குடையை ஆட்டிக் காண்பித்து அந்தக் காரை நிறுத்தும்படி செய்தாள். அவள் காரின் டிரைவரிடம் ஒரு முகவரியைக் கொடுத்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை ஆண்ட்ரியாஸ் புரிந்து கொண்ட போது அவன் காருக்குள் கரோலினுடன் அமர்ந்திருந்தான். கார் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த, சிறது கூட தெரியாத தெருக்கள் வழியாக கார் போய்க் கொண்டிருந்தது. அது எங்கே போகிறது என்ற விஷயம் கடவுளுக்கு மட்டுமே தெரியும்!
அவர்கள் நகரத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தார்கள். இயற்கை தன்னுடைய அழகை அள்ளி வீசி எறிந்திருக்கும் ஒரு இடத்தில், பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் – வரப்போகும் வசந்த காலத்தை அறிவிக்கும் பசும்புல் வெளிக்கு அருகில் கார் நின்றது. பெரும்பாலும் இலைகள் அதிகம் இல்லாத சில மரங்களைத் தாண்டி ஒரு உணவு விடுதி காட்சியளித்தது.
கரோலின் காரை விட்டு முதலில் இறங்கினாள். அவனுக்கு நன்கு பழக்கமான பாதங்கள் ஓசை உண்டாக்க அவன் முழங்காலுக்கு மேலே ஏறி அவள் கீழே இறங்கினாள். காருக்குப் பணம் கொடுத்தது அவள் தான். அவன் அவளைப் பின் தொடர்ந்தான். அவர்கள் இருவரும் உணவு விடுதியை நோக்கி நடந்தார்கள். பச்சை வண்ண வெல்வெட்டால் ஆன இருக்கை கொண்ட ஒரு பெஞ்சில், அவன் சிறைக்குப் போவதற்கு முன்பு இருந்த இளமை நாட்களைப் போல, அவர்கள் மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். எப்போதும் போல இருவருக்கும் தேவைப்படும் உணவு விஷயங்கள் என்னென்ன என்பதை அவள் தான் சொன்னாள். அவள் அவனையே பார்த்தாள். அவளைப் பார்ப்பதற்கு அவன் ஏனோ பயப்பட்டான்.
‘‘இவ்வளவு நாட்களா நீங்க எங்கே இருந்தீங்க?” – அவள் கேட்டாள்.
‘‘கண்ட கண்ட இடங்கள்ல…” – அவன் சொன்னான். ‘‘அதாவது குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி ஒரு இடத்துல இல்லை. நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சு ரெண்டு நாட்கள்தான் ஆகுது. வெறுமனே தெருத் தெருவா பிச்சைக்காரன் மாதிரி சுத்திக்கிட்டு மது குடிச்சிக்கிட்டு பாலங்களுக்குக் கீழே தூங்கி வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்ததுனால நாம ரெண்டு பேரும் இவ்வளவு நாட்களா சந்திக்க முடியாமப் போச்சு. நீ நல்ல வசதியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்” என்றான்.
‘‘ஏன் சொல்ல மாட்டீங்க?” – அவள் அவனைப் பார்த்துச் சொன்னாள். ‘‘குடிச்சிட்டு வேலை வெட்டி எதுவும் இல்லாம பாலங்களுக்குக் கீழே தூங்கிக்கிட்டு இருக்குறப்போ கூட உங்களுக்கு இந்த தெரேஸாவைச் சந்திக்கிறதுக்கு நேரம் கிடைக்குது. நான் மட்டும் அந்தப் பக்கம் வரைலைன்னா, நீங்க அவ கூடத்தான் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்…”
அவன் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. இருவரும் மாமிசம் சாப்பிட்டார்கள். அதைச் சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தான். வெண்ணெயும் பழங்களும் வந்தன. மது காலியானவுடன், பல வருடங்களுக்க முன்பு கரோலினுடன் வாழும்போது உண்டான சில விஷயங்களை நினைத்துப் பார்த்த அவன் ஒருவித குழப்ப நிலைக்கு ஆளானான். அவளிடமிருந்து ஓடி ஒளிய வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. அவன் வெயிட்டரை அழைத்துச் சொன்னான். ‘‘வெயிட்டர் பில் கொண்டு வா”. ஆனால், அவள் அவனைத் தடுத்தாள். ‘‘வேண்டாம் வெயிட்டர், அது என் விஷயம்…” புத்திசாலியான வெயிட்டர் அங்கு நின்றவாறு சொன்னான்.
‘‘இவர் கூப்பிட்டதுதான் என் காதுல முதல்ல விழந்துச்சு” ஆண்ட்ரியாஸ் பணத்தைத் தந்தான். அவன் சட்டையின் உட்பகுதியில் இடது பக்க பாக்கெட்டில் வைத்திருந்த பணம் முழுவதையும் வெளியே எடுத்தான். பில்லுக்கான பணத்தைக் கொடுத்து முடித்தபோது, சின்ன தெரேஸாவுக்குத் தான் கொடுக்க வேண்டிய பணம் தன் கையில் தற்போது இல்லை என்பதை உள்ளே போயிருக்கும் மதுவின் போதை சிறிதளவே இருந்த அந்த நிமிடத்திலும் – ஒருவித அதிர்ச்சியுடன் அவன் நினைத்துப் பார்த்தான். இருந்தாலும் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். சமீப நாட்களாக அடுத்தடுத்து கொஞ்சமும் எதிர்பார்க்காமல் ஆச்சரியப்படும் வகையில் பல சம்பவங்கள் தன் வாழ்க்கையில் நடைபெற்று வருவதை அவன் நினைத்துப் பார்த்தான். நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஒரே நேரத்தில் கொடுக்கும்படி பணம் தனக்குக் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினான் அவன். அதை வைத்து அடுத்த வாரம் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து விடலாம் என்று அவன் தீர்மானித்தான்.
‘‘நீங்க ஒரு பணக்காரர்னு என்னால புரிஞ்சுக்க முடியுது” அவர்கள் வெளியே வந்த போது கரோலின் சொன்னாள். ‘‘சின்ன தெரேஸா உங்களுக்காக செயல்பட்டுக்கிட்டு இருக்கான்னு நான் நினைக்கிறேன்.”
மீண்டும் அவன் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தான். அதனால் தான் சந்தேகப்பட்டது சரிதான் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். ஒரு திரைப்படத்திற்கு தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவள் அவனிடம் ஆசைப்பட்டாள். அவன் அவளைத் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றான். திரைப்படம் பார்த்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது! அதனால் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி அவனால் படத்தைப் பார்க்க முடியவில்லை. கரோலினின் தோள் மீது சாய்ந்து அவன் உறங்கினான். பிறகு, இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருந்த ஒரு நடன அரங்கிற்கு அவர்கள் சென்றார்கள். அவன் நடனம் ஆடி ஏகப்பட்ட நாட்கள் ஆகிவிட்டதால், கரோலினுடன் நடனம் ஆடலாம் என்று வந்த அவனுக்கு எப்படி நடனம் ஆடவேண்டும் என்பதே தெரியாமல் போய்விட்டது. மற்ற நடனக்காரர்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து அவளை அவனிடமிருந்து பிரித்துக் கொண்டு போனார்கள். அவள் அப்போதும் இளமை தாண்டவமாடக் கூடியவளாகவும் யாரும் விரும்பக் கூடியவளுமாக இருந்தாள். அவன் ஒரு மேஜைக்கருகில் தனியாக அமர்ந்து பெர்னோ குடித்தான். கரோலின் மற்ற ஆண்களுடன் சேர்ந்து நடனமாடப் போனதையும், அந்தச் சமயங்களில் தான் மட்டும் தனியே அமர்ந்து மது அருந்திய கடந்து போன நாட்களை நினைத்துப் பார்த்த அவனுக்கு இப்போதும் அதே விஷயம் நடப்பதைப் பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதை நினைக்கும் போது அவனுக்கு மனதில் வெறுப்புத்தான் உண்டானது. என்ன நினைத்தானோ வேகமாக எழுந்து அவளுடன் நடனமாடிக் கொண்டிருந்த ஆணிடமிருந்து அவளை பலவந்தமாகப் பிடித்து இழுத்து அவன் சொன்னான். ‘‘இப்பவே நாம வீட்டுக்குப் போகணும்” அவன் அவளை ஆடவிடாமல் தடுத்து அவளின் கழுத்தைப் பிடித்து இழுத்தான். பணத்தைத் தந்து விட்டு அவளுடன் வீட்டிற்கு அவனும் புறப்பட்டான். அவள் அங்கு அருகில் தான் வசித்துக் கொண்டிருந்தாள்.
எல்லாம் அந்தக் காலத்தில் நடந்தது போலவே இருந்தது. அவன் சிறைக்குப் போவதற்கு முன்பிருந்த பழைய காலத்தைப் போலவே.
5
அவன் காலையில் சீக்கிரமே கண் விழித்தான். கரோலின் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள். திறந்திருந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு பறவை இனிமையாக ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு படுக்கையிலே அசையாமல் படுத்துக் கிடந்தான். இரண்டு நிமிடங்கள் அப்படியே கிடந்திருப்பான். அப்போது அவன் மனம் பல விஷயங்களையும் நினைத்துப் பார்த்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்த ஒரு வார காலத்தில் எத்தனையோ ஆச்சரியப்படும் சம்பவங்கள் அவனுடைய வாழ்க்கையில் நடைபெற்றிருக்கின்றன. அவன் அடுத்த நிமிடம் தலையைத் திருப்பிப் பார்த்தான். கரோலின் அவனுக்குப் பக்கத்தில் படுத்துக் கிடந்தாள். முதல் நாள் பார்த்தபோது தான் சரியாக கவனிக்காமல் விட்ட சில விஷயங்களை அப்போது அவனால் பார்க்க முடிந்தது. அவளுக்கு வயது ஏறியிருக்கிறது. வெளியில் போய் தடித்து, நீளமாக மூச்சை விட்டுக் கொண்டு, காலம் கடந்துபோன ஒரு பெண்ணைப் போல அவள் அந்த அதிகாலை நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். கடந்து போய்விட்டன என்று தோன்றிய வருடங்கள் உண்டாக்கிய மாற்றங்களை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் தன்னுடைய மனதில் உண்டாகியிருக்கும் மாற்றங்களையும் அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. கரோலினை எழுப்பாமல் தான் மட்டும் படுக்கையை விட்டு எழ அவன் தீர்மானித்தான். சிறிது கூட எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையில் விதியின் விளையாட்டால் முந்தைய நாள் தாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்ததைப் போல, இப்போது அவன் அந்த இடத்தை விட்டு போக முடிவெடுத்தான். ஓசை வராத வண்ணம் ஆடைகளை அணிந்து இன்னொரு நாளில், அவனுக்கு நன்கு அறிமுகமான மற்றொரு நாளில் அவன் கால் வைத்து நடந்து போனான்.
ஒரு விதத்தில் சொல்லப்போனால் அவனுக்குப் பழக்கமில்லாத நாள் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். காரணம் வழக்கமாக பணம் வைக்கப்படும் அவனுடைய சட்டையின் இடது பக்க பாக்கெட்டில் மீதியிருந்தது ஐம்பது ஃப்ராங்க் நோட்டும், கொஞ்சம் சில்லறைகளும்தான் என்பதை அவனும் தெரிந்து கொண்டான். பல வருடங்களாக பணத்தின் அருமை தெரியாத அந்த மனிதன், அது எதைச் சொல்லாமல் சொல்லுகிறது என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க முயற்சிக்காத அவன் அப்போது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனான். பாக்கெட்டில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் எப்படி வழக்கத்திற்கு மாறாக சிறிதளவு பணம் மட்டுமே இருந்தால் அதிர்ச்சிக்கு ஆளாவானோ அத்தகைய ஒரு அதிர்ச்சியைத்தான் அவன் அடைந்தான். காலை நேரத்தில் வெளிறிப்போன ஆள்நடமாட்டமில்லாத பாதையில் நடந்து செல்லும் போது மாதக்கணக்காக ஒரு சல்லிக்காசு இல்லாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன்னிடம், கடந்த இரண்டு நாட்களாக இருந்த பண நோட்டுகள் இப்போது இல்லாமற் போனதையும், அதன் விளைவாக தான் மீண்டும் வறியவர்கள் கூட்டத்தில் ஒருவனாக ஆகிப் போனதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தன்னுடைய வறுமை நாட்கள் எங்கோ தூரத்தில் இருக்கும் நினைவாக மட்டுமே அவனுக்கு அப்போது தெரிந்தது.
மனதிற்குள் திட்டம் போட்டு நல்ல முறையில் வாழ்க்கையை நடத்துவதற்காக பயன்பட்டிருக்க வேண்டிய அந்தப் பணம் சிறிதுகூட யோசனையே இல்லாமல் தேவையில்லாமல் கரோலினுக்காக தான் செலவிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அப்போது அவன் நினைத்தான்.
அதனால் கரோலின்மீது அவனுக்கு ஒரு வகையில் கோபம் உண்டானது. பணம் கையில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கொஞ்சமும் நினைப்பு இல்லாமல் இருந்த அவனுக்கு பணத்தின் மதிப்பு என்ன என்பது திடீரென்று தோன்ற ஆரம்பித்தது. தன்னைப் போன்ற ஒருவன் ஒரே ஒரு ஐம்பது ஃபிராங்க் நோட்டை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பது என்பது வெட்கக்கேடான ஒரு விஷயமாக அவனுக்குத் தோன்றியது. மீண்டும் தான் மதிப்புள்ள மனிதனாக மாறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதற்கு தான் உடனே ஒரு குவளை பெர்னோ அருந்தினால்தான் சரியாக வரும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.
அந்தப் பகுதியிலேயே இருந்து வருபவர்களுக்கு மரியாதை தரக்கூடிய ஒரு ஹோட்டலைப் பார்த்து தேர்ந்தெடுத்து அங்கு போய் அமர்ந்து ஒரு பெர்னோ கொண்டு வரச் சொன்னான். மதுவின் போதையில் இருக்கும் நிமிடத்தில் பாரிஸில் தான் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமையே இல்லாமல் இருப்பது அவன் ஞாபகத்தில் வந்தது. அவன் பேப்பர்களை எடுத்து படித்து பார்த்தான். போலண்ட், ஸைலீஷாவின் ஆல்ஸ்கோவிட்ஸில் இருந்து ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாக ஃப்ரான்ஸுக்கு வந்ததால், உடனே அவன் இந்த நாட்டை விட்டு புறப்பட்டே ஆக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
6
கிழிய ஆரம்பித்திருக்கும் தாள்களை மேஜையில் தனக்கு முன்னால் வைத்த அவன், பல வருடங்களுக்கு முன்பு ஃப்ரான்ஸுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தேவைப்படுகிறது என்று வந்திருந்த பத்திரிகைச் செய்தியைப் பார்த்து இங்கு புறப்பட்டு வந்த நாளை அவன் நினைத்துப் பார்த்தான். வாழ்க்கை முழுவதும் தூரத்தில் இருக்கும் பல நாடுகளுக்கும் போக வேண்டும் என்று மனப்பூர்வமாக அவன் ஆசைப்பட்டான். அதனால் க்யூபெக்கிற்கு சுரங்கங்களில் வேலை செய்ய அவன் போனான். அங்கு தன்னுடைய நாட்டைச் சேர்ந்த ஷேபிக் என்ற பெயரைக்கொண்ட தம்பதியுடன் அவனும் வாடகைக்கு ஒரு அறையை எடுத்து தங்கினான். அப்போது அவன் தன்னுடைய நண்பனின் மனைவி மீது காதல் கொண்டான். அதை அறிந்த அந்தக் கணவன் ஒருநாள் தன்னுடைய மனைவியைக் கொல்ல முயற்சிக்க, ஆண்ட்ரியாஸ் அவனைக் கொன்று தீர்த்தான். அந்த மனிதனைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆண்ட்ரியாஸ் இரண்டு வருடங்கள் சிறைக்குள் இருக்க நேர்ந்தது. அந்த நண்பனின் மனைவிதான் கரோலின்.
தான் இந்த நாட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று கூறும் அந்த தாள்களையே பார்த்தவாறு ஆண்ட்ரியாஸ் அமர்ந்திருந்தான். அவன் தலைக்குள் பலவிதப்பட்ட சிந்தனைகளும் அலைமோதிக் கொண்டிருந்தன. மிகவும் மனக்கவலைக்கு ஆளான அவன் இன்னொரு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான்.
கடைசியில் இருந்த இடத்தை விட்டு எழுந்தபோது அவனுக்குப் பசி தோன்றியது. அது சாதாரணமாக மது அருந்துவோருக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை பசி. சில நிமிடங்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வகைப்பட்ட அந்தப்பசி உணவு சம்பந்தப்பட்டது அல்ல. அத்தகைய அனுபவத்தைப் பெறுகிற ஒரு மனிதன் தனக்கு மிகவும் பிடித்த மது வகையை மனதில் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் அந்தப் பசியை உடனே இல்லாமற் போக வைக்கலாம்.
ஆண்ட்ரியாஸ் தன்னுடைய குடும்பத்தின் பெயரையே மறந்து விட்டிருந்தான். ஆனால், தனக்குக் குடியுரிமை இல்லாமற்போன பேப்பர்களைப் பார்த்தபோது, அவனுக்கு அது ஞாபகத்தில் வந்தது. கர்ட்டக் என்பதுதான் அவனின் குடும்பப்பெயர். அவனுடைய முழுப் பெயர் ஆண்ட்ரியாஸ் கர்ட்டக் என்பதாகும். பல வருடங்களுக்குப் பிறகு தன்னையே கண்டெடுத்த மாதிரி அவன் உணர்ந்தான்.
மேலும் பணம் சம்பாதிப்பதை சாத்தியமில்லாத ஒரு விஷயமாக ஆக்கிய விதியை நினைத்து, குழந்தைத்தனமான முகத்தையும் மீசையையும் கொண்ட அந்தத் தடித்த மனிதரை இந்த ஹோட்டலுக்கு வரவிடாமல் செய்து அவரை வேறொரு ஹோட்டல் பக்கம் போக வைத்த விதியைப் பார்த்து அவனுக்கு மனதில் தாங்க முடியாத கோபம் வந்தது. ஆச்சரியப்படும் வகையில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் வாழ்க்கையில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடைபெற்று விட்டால், அதோடு முழுக்க முழுக்க மனிதர்கள் பழக்கமாகி விடுகிறார்கள். ஆமாம்… மனிதர்களின் வழக்கமே இதுதான். அதுவாகவே வரும் சூழ்நிலைகளாலோ, கொஞ்சமும் எதிர்பார்க்காமலோ ஒருமுறை தங்கள் மீது கொட்டப்பட்ட வசதிகள் அடுத்தடுத்து கிடைக்காமல் போனால், தாங்கள் ஏதோ வஞ்சிக்கப்பட்டதைப் போல் மனிதர்கள் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். மக்கள் எப்போதுமே இப்படித்தான். நிலைமை அப்படி இருக்கும்போது ஆண்ட்ரியாஸ் மட்டும் எதற்கு தன்னுடைய சூழ்நிலையை நினைத்து கவலைப்பட வேண்டும்? அன்றைய மீதிப் பொழுதையும் வேறு வேறு மது அருந்து சாலைகளுக்குள் நுழைந்தே போக்கினான் அவன். அனுபவித்துக் கொண்டிருந்த – அற்புதங்கள் சம்பவித்த இனிய நாட்கள் முடிவுக்கு வந்து, அதற்கு முன்னால் இருந்த பழைய காலம் மீண்டும் வந்து அவனைத் தொற்றிக் கொண்டது. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. அமைதியான ஒரு மனிதனால் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வது கூட கஷ்டம். அதே நேரத்தில் மது அருந்திய ஒரு மனிதன் தன்னிடம் உண்டாகும் சிறு சிறு மாற்றங்களைக் கூட உணர்ந்து… ஆண்ட்ரியாஸ் தன் நிலைமையைப் புரிந்து கொண்டு ஸேன் நதியின் கரைகளையும் பாலங்களையும் தேடி திரும்பவும் சென்றான்.
கடந்த ஒரு வருடமும் எப்படி அவன் நடந்தானோ, அதே போன்று பாதி பகலும், பாதி இரவும் அவன் அங்கேயே படுத்து தூங்கினான். அவ்வப்போது ஒரு நண்பர் இல்லாவிட்டால் இன்னொரு நண்பரிடம் என்று ஓசியில் பிராந்தி பாட்டில் வாங்கி குடித்துக் கொண்டிருந்தான். வியாழக்கிழமை வரை இதுதான் நடந்தது.
புனித தெரேஸா ஒரு சிறு பெண் குழந்தை வடிவத்தில் வந்து தன்னுடைய கள்ளங்கபடமற்ற குரலில் தன்னைப் பார்த்து இரவு நேரத்தில் இப்படிக் கேட்டதாக அவன் கனவு கண்டான். ‘‘ஏன் ஞாயிற்றுக்கிழமை வந்து என்னை நீ பார்க்கல?” பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த மகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் மனதில் கற்பனை பண்ணினானோ, அதே போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை தெரேஸா. அவனுக்குப் பெண் குழந்தை இல்லை! கனவில் வந்த குழந்தை தெரேஸாவைப் பார்த்து அவன் சொன்னான், ‘‘அப்படி நீ என் கிட்ட பேசக்கூடாது, நான் உன் அப்பான்ற விஷயத்தை மறந்துட்டியா? அதற்கு அந்தப் பெண் குழந்தை சொன்னாள்: ‘‘மன்னிக்கணும் அப்பா, தயவு செய்து நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புனித மேரியின் தேவாலயத்துக்கு வந்து என்னை நீங்க பார்ப்பீங்களா?”
கனவிற்குப் பின்னால் வந்த காலையில், அற்புத சம்பவங்கள் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைப் போல, படு உற்சாகமாகத் தூக்கம் கலைந்து எழுந்தான் ஆண்ட்ரியாஸ். இந்தக் கனவுக்கூட ஒரு அற்புதமான ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றுதான் என்று அவன் மனதிற்குப்பட்டது. மீண்டும் நதியில் இறங்கிக் குளிக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. அதற்காக சட்டையைக் கழற்ற முயற்சித்தான். அதைக் கழற்றுவதற்கு முன்பு, சட்டையின் இடது பக்கப் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஆராய்ந்தான். ஓருவேளை தன்னுடைய கவனத்தில் படாமல் அங்கு பணம் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் அவன் அந்தச் செயலைச் செய்தான். பாக்கெட்டில் கையை விட்டபோது, பண நோட்டுகள் எதுவும் அங்கு இல்லையென்றாலும், சில நாட்களுக்கு முன்பு அவன் வாங்கிய தோலால் ஆன மணி பர்ஸ் இருந்தது. அவன் அந்தப் பர்ஸை வெளியே எடுத்தான். அது மிகவும் விலை குறைந்ததாகவும், ஆங்காங்கே கிழிந்து விட்டிருந்ததாகவும் இருந்தது. ஏற்கனவே யாரோ ஒருவரால் பயன்படுத்தப்பட்ட ஒன்றை விலைக்கு வாங்குகிற போது, அதற்கு மேல் அதில் என்ன எதிர்பார்க்க முடியும்? கிழிந்து போன அந்தப் பசுவின் தோலையே அவன் வெறித்துப் பார்த்தான். காரணம் அந்தப் பர்ஸை எப்போது, எங்கே வாங்கினோம் என்பதே அவனின் ஞாபகத்தில் இல்லை. அந்தப் பர்ஸ் தன்னிடம் எப்படி வந்தது என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்துப் போனான்.
‘என் கையில் எப்படி இந்தப் பர்ஸ் வந்தது?’ தனக்குத் தானே அவன் கேட்டுக் கொண்டான். கடைசியில் அவன் அதைத் திறந்து பார்த்தான். அதில் இரண்டு உறைகள் இருந்தன. ஒருவகை ஆர்வத்துடன் அவன் இரண்டு உறைகளையும் கண்களால் அலசிப் பார்த்தான். ஒரு உறையில் ஏதோ ஒரு நோட்டு இருப்பது கண்ணில் தெரிந்தது. அவன் அதை வெளியே எடுத்தான். அது ஒரு ஆயிரம் ஃப்ராங்க் நோட்டு.
அவன் அந்த ஆயிரம் ஃப்ராங்க் நோட்டைத் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்தவாறு ஸேன் நதிக்கரையில் இறங்கினான். அங்கிருந்த ஏழை மக்களின் பார்வைகளை அலட்சியப்படுத்தியவாறு அவன் முகத்தையும், கழுத்தையும் மிகவும் மகிழ்ச்சியுடன் நீரில் கழுவினான்.
மீண்டும் சட்டையை எடுத்து அணிந்து அன்றைய நாளுக்குள் தன் காலை வைத்தான். சிகரெட் வாங்குவதற்காக ஒரு பெட்டிக்கடையைத் தேடிப்போன காரியத்துடன் அவன் அந்த நாளைத் தொடங்கினான்.
சிகரெட் வாங்குவதற்குத் தேவையான சில்லறை நாணயங்கள் இப்போதும் அவனுடைய பாக்கெட்டில் மீதியிருந்தன. இருந்தாலும், கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த அந்த ஆயிரம் ஃப்ராங்க் நோட்டை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் எப்போது வரும் என்று அவனுக்கே தெரியாமல் இருந்தது. அவன் அணிந்திருந்த ஆடைகளும், அவனுடைய முக அமைப்பும் ஆயிரம் ஃப்ராங்கிற்குச் சொந்தக்காரனாக அவன் இருந்தும், உலகத்தின் பார்வையில், இன்னொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால்- இந்த உலகத்தில் சுயநினைவுடன் உலவிக் கொண்டிருப்போரின் பார்வையில் என்ன எண்ணத்தை அவனைப் பற்றி உண்டாக்கும் என்பதையும் அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. இருந்தாலும், புதிதாக தனக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டத்தின் விளைவாக கிடைத்த அந்த ஆயிரம் ப்ராங்க் நோட்டை உள்ளேயே வைத்துக் கொண்டிருக்காமல், வெளியே எடுப்பது நல்லது என்ற முடிவுக்கு அவன் வந்தான். அதே நேரத்தில் ஒருவகை எச்சரிக்கை உணர்வையும் மனதில் வைத்துக் கொண்டு அவன் பெட்டிக் கடையில் இருந்த மனிதனிடம் இப்படிக் கேட்டான்: ‘‘ஒரு ஆயிரம் ஃப்ராங்க் நோட்டுக்கு உங்களால் சில்லரை தர முடியுமா? என் கையில சில்லரை இருக்கு. இருந்தாலும், அந்த நோட்டை மாற்றினா, எனக்கு சந்தோஷமா இருக்கும்.”
ஆண்ட்ரியாஸே ஆச்சரியப்படுற மாதிரி அந்தப் பெட்டி கடையின் சொந்தக்காரன் சொன்னான், ‘‘அது ஒரு புறம் இருக்கட்டும். எனக்கு ஒரு ஆயிரம் ஃப்ராங்க் நோட்டு இப்போ தேவைப்படுது. நீங்க சரியான நேரத்துல இங்கே வந்திருக்கீங்க.” – அந்த மனிதன் ஃப்ராங்கிற்குப் பதிலாக மாற்று பண நோட்டுக்களைத் தந்தான். அதை வாங்கிய ஆண்ட்ரியாஸ் பெட்டிக் கடையோடு சேர்த்து இருந்த மது அருந்தும் சாலையில் போய் சிறிது நேரம் அமர்ந்தான். மூன்று கண்ணாடி டம்டளர் நிறைய வெள்ளை மது அருந்தினான். விதி ஏற்படுத்தித் தந்த அந்த அதிர்ஷ்டத்தை அவன் அங்கு மது அருந்தித் கொண்டாடினான்.
7
மது அருந்தும் சாலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அதன் மேலாளரின் முதுகுக்குப் பின்னால் சுவரில் சட்டமிடப்பட்ட ஒரு புகைப்படம் தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஆல்ஸ்கோவிட்ஸில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது தன்னுடன் படித்த ஒரு நண்பனின் முகச்சாயல் அந்தப் புகைப்படத்தில் தெரிந்தது. அவன் மேலாளரைப் பார்த்துக் கேட்டான். ‘‘இந்தப் புகைப்படத்தில் இருக்குறது யாரு? எனக்கு நல்லா தெரிஞ்ச ஆளு மாதிரி தெரியுது” அதைக் கேட்டு மதுச்சாலை மேலாளரும் அங்கு எப்போதும் வரக்கூடிய வாடிக்கையாளர்களும் உரத்த குரலில் சிரித்தார்கள். ‘என்ன?’ – அவர்கள் தங்களுக்குள் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டார்கள். ‘‘இந்த ஆளுக்கு இந்தப் புகைப்படத்துல இருக்குறது யாருன்னு தெரியலையாம்…”
அவர்கள் அப்படி சொன்னதற்குக் காரணம்- அந்தப் புகைப்படத்தில் இருக்கும் மனிதனை மிகச் சாதாரண மனிதர்களுக்குக் கூட தெரியும் என்பதுதான். அது- புகழ்பெற்ற ஸைலேஷாவின் கால்பந்து வீரனான கன்யாக்தான். இந்த உண்மை பாலங்களுக்குக் கீழே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் குடிகாரனான நம்முடைய ஆண்ட்ரியாஸைப் போன்ற ஒரு மனிதனுக்கு எப்படித் தெரியும்? எது எப்படியோ, இந்த விஷயம் தனக்குத் தெரியாமல் போனதற்காக அவன் மிகவும் வெட்கப்பட்டான். அதுவும் ஆயிரம் ஃப்ராங்க் நோட்டை மாற்றி அதிக நேரம் ஒன்றும் ஆகிவிடாத இந்த நேரத்தில், தனக்கு இப்படியொரு சூழ்நிலையா என்று அவன் நொந்து போனான். ஆண்ட்ரியாஸ் மெதுவான குரலில் சொன்னான், ‘‘உண்மையாகவே இந்த ஆளை எனக்கு நல்லா தெரியும். இந்த ஆள் என்னுடைய நண்பனா இருந்தவன். ரொம்பவும் நெருக்கமான நண்பன்னு சொல்றதுக்கில்ல. அது ஒண்ணுதான்.” அதற்குமேல் எங்கே அவர்கள் ஏதாவது கேள்விகள் கேட்டு விடுவார்களோ என்று எண்ணி, அதிலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் அவன் வேகமாக பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
இப்போது அவனுக்குச் சரியான பசி உண்டாகத் தொடங்கியது. அவன் அருகிலிருந்த உணவு விடுதியை நோக்கி நடந்தான். சாப்பிட்டுக் கொண்டே, அதனுடன் சிவப்பு ஒயினையும் சேர்த்துக் குடித்தான். வெண்ணெய் சாப்பிட்டு முடித்து, காபியையும் பருகினான். மதியம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாம் என்று மனதிற்குள் திட்டம் போட்டான்.
எந்தப் படத்தைப் பார்க்கப் போவது என்பதைப் பற்றி அவனால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. அந்த நிமிடத்தில் சாலையில் கடந்து போகும் எந்தப் பணக்காரனிடம் இருக்கும் அளவிற்கு தன்னிடம் பணம் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்துக் கொண்டே அவன் அகலமான நடைபாதையில் இறங்கி நடந்தான். ஒப்பராவிற்கும் பூலவார் தெகப்யசின்னிற்கும் மத்தியில் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப்படத்தை அவன் தேடினான். கடைசியில் அத்தகைய ஒரு படத்தை அவன் கண்டுபிடித்தான்.
தைரியமாக மரணத்தைச் சந்திக்கிற ஒரு மனிதனைப் பற்றிய கதையைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தை அவன் பார்த்தான். மழையே இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் பாலைவன மணலில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்தத் திரைப்படத்தின் விளம்பரத்தில் காட்டப்பட்டிருந்தான். நிச்சயமாக அது ஆண்ட்ரியாஸுக்கு ஏற்ற படம்தான். அவன் அரங்கத்திற்குள் அமர்ந்து அந்த மனிதன் வெயில் தகித்துக் கொண்டிருக்கும் பாலைவனத்தை விட்டு எப்படி வெளியேற முயற்சிக்கிறான் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கதாநாயகன் ஒரு மரியாதைக்குரிய மனிதனாக ஆண்ட்ரியாஸுக்குத் தோன்றிய அதே நேரத்தில் அந்தத் திரைப்படம் மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு நிலையை நோக்கி நகர்ந்தது. பாலைவனத்தில் அகப்பட்டுக் கொண்ட அந்த மனிதனை, அந்த வழியாக கடந்து போய்க்கொண்டிருந்த விஞ்ஞானி ஆராய்ச்சிக்காக வந்த ஒரு கூட்டம் காப்பாற்றி ஐரோப்பிய நாகரிகம் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கிறது. ஆண்ட்ரியாஸுக்கு கதாநாயகன் மீது இருந்த மதிப்பு அந்தக் கணத்தில் சிறிது கூட இல்லாமல் போய்விட்டது. அவன் எழுந்து போக தீர்மானித்த நேரத்தில், தான் மது அருந்தும் சாலையில் இருந்தபோது, மேலாளருக்கு பின்னால் சுவரில் சிறிது நேரத்திற்கு முன்பு பார்த்த அந்த புகைப்படம் திரையில் தெரிந்தது. அது- புகழ்பெற்ற கால்பந்து வீரனான கன்யாக். திரையில் அவனைக் கண்டதும், இருபது வருடங்களுக்கு முன்பு அவனும் கன்யாக்கும் பள்ளிக்கூடத்தில் ஒரே பெஞ்சில் அமர்ந்து வகுப்பில் கல்வி கற்ற காலம் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. மறுநாள் காலையில் அந்தத் தன்னுடைய பழைய நண்பன் இப்போது பாரிஸில் இருக்கிறானா என்று விசாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் ஆண்ட்ரியாஸ்.
நம்முடைய ஆண்ட்ரியாஸின் பாக்கெட்டில் தொள்ளாயிரத்து எண்பது ஃப்ராங்கிற்குக் குறையாமல் பணம் இருந்தது.
இது அவ்வளவு சாதாரணமான தொகை அல்லவே!
8
தியேட்டரை விட்டு வெளியே வருவதற்கு முன்பு அவன் மனதிற்குள் ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தான். தன்னுடன் சேர்ந்து படித்த அந்த நண்பனின் முகவரியைத் தேடி கண்டுபிடிப்பதற்கு நாளைக் காலை வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்றும், ஒரு பெரிய தொகை பாக்கெட்டிற்குள் இருக்கும்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவன் மனது கணக்குப் போட்டது.
எஞ்சியிருந்த பணம் ஆண்ட்ரியாஸுக்கு அளவுக்கு மேல் தன்னம்பிக்கையைத் தந்ததால், கேஷியரின் மேஜைக்கருகில் நின்றவாறு தன்னுடைய நண்பனின் – புகழ்பெற்ற கால்பந்து வீரன் கன்யாக்கின் முகவரியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை அங்கேயே தொடங்க அவன் தீர்மானித்தான். கன்யாக்கின் முகவரியைப் பெறுவதற்கு திரைப்பட அரங்கின் மேலாளரிடம் போக வேண்டியிருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், அதற்கான அவசியம் வரவில்லை. கால்பந்து வீரனான கன்யாக் அளவிற்குப் புகழ்பெற்ற ஒரு மனிதன் பாரிஸில் வேறு யாரும் ல்லை. திரை அரங்கின் வாசலில் நின்று கொண்டிருக்கும் மனிதனுக்குக் கூட கன்யாக் எங்கே இருக்கிறான் என்ற விஷயம் தெரியும். ஷாந்தெப் எலிஸ்ஸெயில் இருக்கும் ஒரு ஹோட்டலில்தான் கன்யாக் இருப்பதாக ஒரு தகவல் அவனுக்குக் கிடைத்தது. அந்த விஷயத்தைச் சொன்ன திரை அரங்கத்தின் காவலாளி அவனிடம் அந்த ஹோட்டலின் பெயரையும் சொன்னான். ஆண்ட்ரியாஸ் அந்த நிமிடத்திலேயே அங்கிருந்து அந்த ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டான்.
சிறிய, அமைதியான மிகவும் மாறுபட்ட முறையில் அமைந்த ஒரு ஹோட்டலாக இருந்தது அது. கால்பந்து வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள் போன்ற நம்முடைய காலகட்டத்தின் முக்கிய நபர்கள் தங்குவதற்கு விருப்பப்படுகிற விதத்தில் அந்த ஹோட்டல் இருந்தது. ஹோட்டலுக்கு முன்னால் நின்றபோது ஆண்ட்ரியாஸுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. ஹோட்டல் பணியாளர்களின் பார்வையில் அவன் ஒரு மாதிரியாகத் தெரிந்தான். இருந்தாலும், கன்யாக் தற்போது அறையில்தான் இருக்கிறானென்றும், வெகுவிரைவில் அவன் கீழே இறங்கி வரவேற்பரைக்கு வருவான் என்றும் அவர்கள் கூறினார்கள்.
இரண்டு நிமிடம் சென்றிருக்கும். கன்யாக் இறங்கி கீழே வந்தான். இரண்டு பேரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டார்கள். அங்கேயே நின்றவாறு தங்கள் பள்ளிக்கூட வாழ்க்கையின் நினைவுகளைப் பற்றிப் பேசி அவர்கள் புதுப்பித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்தே உணவு உட் கொள்வதற்காக வெளியே நடந்தார்கள். ஒருவரையொருவர் கண்டு கொண்டதில் இருவருமே மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சாப்பிடுவதற்காக வெளியே வந்தபோது புகழ்பெற்ற கால்பந்து வீரனான கன்யாக், அழுக்கடைந்து போன தன்னுடைய நண்பனைப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ ஏன் இவ்வளவு அசுத்தமான ஒரு மனிதனா நின்னுக்கிட்டு இருக்கே? உன்னோட ஆடைகள் ஏன் இப்படி கிழிஞ்சு போயிருக்கு?”
‘‘அதை நான் உன்கிட்ட சொல்றதா இருந்தா…?” ஆண்ட்ரியாஸ் கன்யாக்கிடம் சொன்னான், ‘‘அது ஒரு வருத்தத்தைத் தர்ற விஷயம். நாம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கிற இந்த மகிழ்ச்சியான நேரத்துல அதைப்பற்றி நாம பேசவே வேண்டாம். நாம பேச வேண்டிய சந்தோஷமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அதைப்பற்றி பேசுவோம்…”
‘‘என்கிட்ட நிறைய ஸுட்டுகள் இருக்கு” – புகழ் பெற்ற கால்பந்து வீரன் சொன்னான், ‘‘அதுல ஒண்ணை உனக்கு நான் தர்றதுல எனக்கு சந்தோஷமே. நாம பள்ளிக்கூடத்துல ஒரே பெஞ்ச்ல உட்கார்ந்து படிச்சோம். நீ எழுதின பதில்களைப் பார்த்து எழுத நீ அனுமதிச்சே. அது கூட ஒப்பிட்டுப் பார்க்குறப்போ இந்த ஸுட் என்ன பெரிய ஸுட்? ஆனா… நான் அதை எங்கே அனுப்பி வைக்கணும்?”
‘‘அது உன்னால முடியாது…” – ஆண்ட்ரியாஸ் சொன்னான். ‘‘காரணம் எனக்குன்னு எந்த முகவரியும் கிடையாது. ஸேன் நதிக்கரையில இருக்குற பாலங்களுக்குக் கீழேதான் நான் வசிக்கிறேன்…”
‘‘அப்படியா…?”- கன்யாக் சொன்னான், ‘‘அப்படின்னா உனக்காக ஒரு அறையை உடனே வாடகைக்கு எடுத்துடுவோம். நான் ஒரு ஸுட் உனக்குத் தர்றேன். வா…”
உணவு சாப்பிட்டு முடித்து அவர்கள் ஒன்றாக நடந்தார்கள். கால்பந்து வீரன் கன்யாக் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தான். அதன் வாடகை நாளொன்றுக்கு இருபத்தைந்து ஃப்ராங்க். அந்த அறை பாரிஸின் புகழ் பெற்ற தேவாலயமான ‘மத்ல’னுக்கு அருகில் இருந்தது.
9
ஆண்ட்ரியாஸின் அறை ஐந்தாவது மாடியில் இருந்தது. அவனும் கால்பந்து வீரனான நண்பனும் லிஃப்டில் ஏறினார்கள். ஆண்ட்ரியாஸின் கையில் எந்தவித பொருளும் இல்லை. இருந்தாலும், வாடிக்கையாளர்களின் பொருட்களைச் சுமந்து செல்லும் பணியாளோ, லிப்டில் பணிபுரிபவனோ, ஹோட்டலில் வேலை செய்யும் மற்ற மனிதர்களோ அதைப் பார்த்து சிறிது கூட ஆச்சரியப்படவில்லை. எல்லாமே அவனுக்கு விந்தையான ஒரு விஷயமாகத்தான் இருந்தது. இருந்தாலும், ஆச்சரியப்படும் அளவிற்கு அங்கு என்ன நடந்து விட்டது? அவர்கள் இருவரும் தனியாக அறையில் அமர்ந்திருந்தபோது கால்பந்து வீரன் கன்யாக் தன்னுடைய பழைய பள்ளிக்கூட நண்பனான ஆண்ட்ரியாஸைப் பார்த்துச் சொன்னான், ‘‘உனக்கு இப்போ கட்டாயம் சோப் தேவைன்னு நினைக்கிறேன்!”
‘‘ஓ…” – ஆண்ட்ரியாஸ் சொன்னான்: ‘‘சோப் இல்லாமலும் என்னால இருக்க முடியும். இங்கே சோப் இல்லாமலே ஒரு வாரம் இருக்குறதுன்னு நான் முடிவு பண்ணியிருக்கேன். இருந்தாலும் நான் குளிப்பேன். இப்போ எனக்கு ஏதாவது குடிக்கணும் போல இருக்கு. அப்படின்னாதான் இந்த அறைக்கு கவுரவமா இருக்கும்!”
கால்பந்து வீரன் ஒரு குப்பி கொன்யாக் கொண்டு வரச் சொன்னான். இரண்டு பேரும் அதை முழுமையாகக் காலி செய்தார்கள். பிறகு அவர்கள் அறையை விட்டு வெளியே வந்து மோங்மார்த்ரிக்குப் போவதற்காக வாடகைக் கார் பிடித்தார்கள். ஆண்ட்ரியாஸ் சமீபமாகச் சந்தித்த இளம்பெண்கள் இருக்கும் கஃபேயை நோக்கி இருவரும் போனார்கள். அங்கே அமர்ந்து இரண்டு மணி நேரம் பள்ளிக்கூட வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுபடுத்தி பேசிக் கொண்டிருந்து விட்டு கன்யாக் ஆண்ட்ரியாஸை வீட்டில், அதாவது – வாடகைக்கு எடுத்திருக்கும் ஹோட்டல் அறையில் கொண்டு போய் விட்டான். அவன் சொன்னான்: ‘‘இப்பவே ரொம்பவும் நேரமாயிடுச்சு. நான் போறேன். நாளைக்கு நான் உனக்கு ரெண்டு ஸுட்டுகள் கொடுத்தனுப்புறேன். பிறகு… உனக்கு ஏதாவது பணம் வேணுமா?” ‘‘வேண்டாம்”- ஆண்ட்ரியாஸ் சொன்னான்: ‘‘என்கிட்ட தொள்ளாயிரத்து எண்பது ஃப்ராங்க் இருக்கு. அதுவே எனக்குப் பெரிய தொகைதான். நீ வீட்டுக்குப் புறப்படு.”
‘‘நான் ரெண்டு நாட்கள்ல திரும்பவும் வர்றேன்”- கால்பந்து வீரன் கன்யாக் சொன்னான்.
ஆண்ட்ரியாஸ் இப்போது தங்கியிருக்கும் அறையின் எண் எண்பத்தியொன்பது. ரோஸ் நிறத்தால் ஆன ஒரு துணியால் மூடப்பட்ட ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவன் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். மங்கலான பொன் நிறத்தால் ஆன கிளியின் தலைகள் வரையப்பட்ட சிவப்பு துணியால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டதை அவன் அப்போதுதான் பார்த்தான். பிறகு, வலது பக்கம் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட மூன்று கைப்பிடிகளைக் கொண்ட வாசல் கதவைப் பார்த்தான். அடர்த்தியான பச்சை நிறமுள்ள தட்டுகள் கொண்ட, படிப்பதற்கு வசதியாக இருக்கும் விளக்குகள் உடைய படுக்கைக்கு வெகு அருகில் போடப்பட்டிருக்கும் மேஜையைப் பார்த்தான். அதற்குப் பின்னால் ஏதாவது ரகசிய அறை இருக்குமோ என்று ஆண்ட்ரியாஸ் சந்தேகப்பட்டான். இதைத் தவிர, கட்டிலுக்குப் பக்கத்தில் கருப்பு வண்ணத்தில் ஒரு தொலைபேசி இருந்தது. படுக்கையில் படுத்தவாறு மிகவும் வசதியாக கையை நீட்டி தொலைபேசி ரிசீவரை எடுத்து பேசக்கூடிய விதத்தில் அது அமைந்திருந்தது. சிறிது நேரம் அறையையே பார்த்துக் கொண்டிருந்த ஆண்ட்ரியாஸுக்கு இனம் புரியாத ஒரு வகை ஆர்வம் உண்டானது. வெளுத்த கைப்பிடியைக் கொண்ட இரண்டாவது கதவை எண்ணியபோது அவன் மனதில் என்னவோ கலக்கம் உண்டானது. ஒருவித கோழைத்தனம் வந்து அவன் மனதை ஆக்கிரமித்துவிட்டிருந்தாலும், ஹோட்டல் அறைகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பற்றி அவனுக்கு சரிவர தெரியாது என்பதாலும், அந்த கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு தன்னையும் மீறி உண்டானது. அந்த எண்ணம் மேலோங்க, அவன் இருந்த இடத்தை விட்டு எழுந்தான். அந்தக் கதவு பூட்டப்பட்டிருக்கும் என்றுதான் அவன் எண்ணியிருந்தான். ஆனால், அதுவே அவனுடைய கை பட்டவுடன், திறந்தது. அவ்வளவுதான் அவன் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.
அவன் தனக்கு முன்னால் ‘பள பள’வென்று மின்னிக் கொண்டிருந்த தரையைக் கொண்ட குளியலறையைப் பார்த்தான். வெண்மை நிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த குளிக்கும் தொட்டியையும், கழிப்பறையும் பார்த்தான். மொத்தத்தில் அவனே கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் அந்த அறை படு அமர்க்களமாக இருந்தது.
அப்போது அவனுக்கு குளிக்கவேண்டும் போல் இருந்தது. அவன் இரண்டு குழாய்களையும் திருகிவிட்டு, சுடுநீரையும் குளிர்ந்த நீரையும் சம அளவில் கலந்து விட்டு தொட்டியை நிரப்பினான். தொட்டிக்குள் இறங்கி குளிப்பதற்கு வசதியாக மாற்று ஆடைகள் எதுவும் கைவசம் இல்லையே என்று நினைத்து கவலையில் ஆழ்ந்தான். அணிந்திருந்த சட்டையைக் கழற்றியபோது, அது மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அவன் உணர்ந்தான். குளித்து முடித்து மீண்டும் அதே சட்டையைத்தான் அணிய வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தபோது, அவனுக்கே என்னவோ போல் இருந்தது.
அவன் குளித்து எவ்வளவோ நாட்கள் ஆகியிருந்தன. அந்த நினைப்புடனே அவன் குளியல் தொட்டிக்குள் இறங்கினான். உற்சாகமாகக் குளித்து முடித்து அவன் வெளியே வந்தான். ஏற்கனவே தான் அணிந்திருந்த ஆடைகளை எடுத்து மீண்டும் அவன் அணிந்து கொண்டான். அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் நின்றிருந்தான். ஆர்வம் காரணமாக, அவன் அறையின் கதவைத் திறந்து வெளியே இருந்த இடைவெளியில் நடந்தான். அவனைப் போலவே அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த இளம் பெண்ணை அவன் பார்த்தான். அவள் இளமையான தோற்றத்தை கொண்டவளாகவும், நல்ல அழகியாகவும் இருந்தாள். அவன் பர்ஸ் வாங்கிய கடையில் இருந்த விற்பனை செய்யும் இளம் பெண்ணையும் லேசாக கரோலினையும் அந்தப் பெண் ஞாபகப்படுத்தினாள். அதனால் அவளைப் பார்த்ததும் ‘ஹலோ’ என்று சொல்லி தலையைக் குனிந்தவாறு நின்றான் ஆண்ட்ரியாஸ். அவள் பதிலுக்கு தன் தலையைக் குனிந்தவுடன், அவனுக்கு தைரியம் வந்தது. அவன் அவளைப் பார்த்து சொன்னான், ‘‘நீங்க ரொம்பவும் அழகாக இருக்கீங்க…”
‘‘எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சிருக்கு” – அவள் சொன்னாள். ‘‘இப்போ நீங்க என்னை மன்னிக்கணும். நாளைக்கு நாம பார்ப்போம்” அவள் கீழே இருந்த வழியில் இருட்டில் கலந்து காணாமல் போனாள். அவனுக்குத் திடீரென்று காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் தலையெடுக்க ஆரம்பித்தது. அவன் அந்தப் பெண் வெளியேறிய அறைக்கதவு எண் என்ன என்று பார்த்தான்.
அறைக்கு வெளியே எண்பத்து ஏழு என்று போடப்பட்டிருந்தது. அந்த எண்ணை இதயத்தில் குறித்து வைத்துக் கொண்டான்.
அவன் தன்னுடைய அறைக்குத் திரும்பவும் வந்தான். வெறுமனே அமர்ந்திருந்தான். அழகான அந்த இளம்பெண்ணை மீண்டும் பார்ப்பதற்கு காலை வரை காத்திருக்க தன்னால் முடியாது என்று அவன் மனதிற்குப்பட்டது. சமீப நாட்களாக தனக்கு வாழ்க்கையில் நடைபெற்று வரும்- ஆச்சரியத்தைத் தரும் அற்புத சம்பவங்கள் ஏதோ ஒரு அருளால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையும் அந்த அருளின் ஆசி தன் மேல் முழுமையாக சொரியப்படுகிறது என்பதையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. அதே நேரத்தில் சிறிது கடுமையாக முயற்சி செய்தால் அந்த அருளை கால தாமதம் இல்லாமல் தனக்குச் சொந்தமாகவே ஆக்கிவிட முடியும் என்றும் அவன் நம்பினான். எண்பத்தேழாம் எண் அறையில் இருக்கும் இளம்பெண்ணின் காலடிச் சத்தம் காதில் விழுவதைக் கேட்ட அவன் மிகவும் கவனமாக தன் வாசல் கதவைத் திறந்தான். அவன் நினைத்தது மாதிரியே அது அவள்தான். தன்னுடைய அறைக்கு அவள் திரும்பி வந்து கொண்டிருந்தாள். நீண்ட காலமாக இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் அவன் விலகி நின்றிருந்ததால், அந்த அழகிய இளம்பெண் தன்னுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டுவிட்டாள் என்பதை அறிந்து கொள்ளும் விஷயத்தைப் பொறுத்தவரையில் அவன் தோல்வியடைந்துவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.
அதனால் தொழிலும், அனுபவமும் சொல்லித் தந்த பாடத்தின் படி எல்லாம் எதிர்பார்த்ததைப் போலவே நடப்பதாக நினைத்துக் கொண்டு அவள் தன்னுடைய தலைக்கு மேலே இருந்த பெரிய விளக்கை அணைத்தாள். அடுத்த நிமிடம் படுக்கையில் படுத்தவாறு ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். அது ஏற்கனவே அவள் முன்பு படித்து முடித்த புத்தகமாக இருந்தது.
சில நிமிடங்கள் கடந்திருக்கும். எதிர்பார்த்தது போல் கதவை லேசாக யாரோ தட்டும் ஓசை கேட்டது. ஆண்ட்ரியாஸ் அவளின் அறை வாசலில் நின்றிருந்தான். தன்னை அவள் நிச்சயம் உள்ளே வரச் சொல்வாள் என்று எதிர்பார்ப்புடன் அவன் அங்கேயே நின்றிருந்தான். ஆனால், அந்த அழகிய இளம்பெண்ணோ சிறிது கூட அசையாமல் அப்படியே படுத்திருந்தாள். அவள் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக்கூட கீழே வைக்கவில்லை. அவனைப் பார்த்து அவள் கேட்டாள். ‘‘எது உங்களை இங்கே வரை கொண்டு வந்தது?”
குளியல், சோப், சாய்வு நாற்காலி, சுவர் அலங்காரம், கிளி தலைகள், ஸுட் போன்றவற்றால் தன்னம்பிக்கை அதிகம் உண்டான ஆண்ட்ரியாஸ் அவளைப் பார்த்து சொன்னான், ‘‘என் தங்கமே உன்னைப் பார்க்குறத்துக்கு நாளைக்கு வரை என்னால காத்திருக்க முடியாது.”
அதற்கு அந்த இளம்பெண் எந்த பதிலும் கூறவில்லை. ஆண்ட்ரியாஸ் மேலும் அவளை நோக்கி நெருக்கமாக வந்தான். அவள் என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவளிடமே விசாரித்தான். கள்ளங்கபடமில்லாத மனதுடன் அவன் சொன்னான். ‘‘எனக்கு புத்தகங்கள் மேல அவ்வளவா ஆர்வம் கிடையாது.”
‘‘நான் இந்த வழியா போய்க்கிட்டு இருக்கேன்” – படுக்கையில் படுத்துக் கொண்டே அந்த இளம்பெண் சொன்னாள். ‘‘நான் ஞாயிற்றுக்கிழமை வரைதான் இங்கே தங்குவேன். திங்கட்கிழமை நான் கனில்ல இருக்கணும்.”
‘‘எதற்கு?” ஆண்ட்ரியாஸ் கேட்டான்.
‘‘நான் ஒரு இரவு விடுதியில் நடனம் ஆடிக்கிட்டு இருக்கேன். நான் ஒரு கேபரே நடனம் ஆடுற பெண். நீங்க என்னைப்பற்றி இதற்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லையா?”
‘‘கேள்விப்படாம என்ன? உன் பேரை பத்திரிகைகள்ல பல முறை நான் பார்த்திருக்கேன்” – ஆண்ட்ரியாஸ் பொய் சொன்னான். ‘நான் தூங்குறதுக்காக பயன்படுத்துற பத்திரிகைகள்ல…’ என்பதையும் சேர்த்து அவளிடம் சொல்ல நினைத்தான். ஆனால், ஏனோ சொல்லவில்லை.
அவன் அவள் படுத்திருந்த படுக்கையின் அருகில் அமர்ந்தான். அதற்கு அந்த அழகிய இளம்பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடைசியில் அவள் புத்தகத்தைக் கீழே வைத்தாள். ஆண்ட்ரியாஸ் காலைவரை எண்பத்து ஏழாம் எண் அறையிலேயே தங்கினான்.
10
அந்த இளம்பெண் அந்த இடத்தை விட்டுப் புறப்படுகிற நிமிடம் வரை அவளை விட்டு தான் போகவே கூடாது என்ற தீர்மானத்துடன் அவன் சனிக்கிழமை காலையில் கண் விழித்தான். கனிலுக்கு அவள் போகும்போது, அவளுடன் ஒருவேளை தானும் பயணம் செய்ய வேண்டி நேரிடலாம் என்ற இனிமையான எண்ணமும் அப்போது அவன் மனதில் உண்டானது. எல்லா தரித்திரவாசிகளையும் போல (குறிப்பாக மது அருந்தும் தரித்திரர்கள்) அவனும் கையில் இருக்கும் பெரிய தொகையை இழந்துவிட்டு, சிறிய தொகையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடக்க ஆயத்தமானான். அதனால் அவன் காலையில் தன்னிடமிருந்த தொள்ளாயிரத்து எண்பது ஃப்ராங்கை எண்ணினான். அந்தத் தொகை ஒரு பர்ஸில் இருந்தது. அந்தப் பர்ஸ் ஒரு புதிய ஸுட்டில் இருந்தது. இந்த விஷயங்களை வைத்து தன்னிடமிருக்கும் பணத்தின் மதிப்பு பத்து மடங்கு அதிகமாக அவன் மனதிற்குத் தோன்றியது. அதனால் அழகான அந்த இளம் பெண்ணிடமிருந்து பிரிந்து தன் அறைக்குப் போன ஒரு மணி நேரத்தில், அவள் கதவைத் தட்டாமலே அவனுடைய அறைக்குள் வந்து சனிக்கிழமை தாங்கள் இருவரும் சேர்ந்து எப்படி நாளைச் செலவழிக்கலாம் என்பதைக் கேட்டபோது அவனுக்கு எந்தவித தயக்கமும் தோன்றவில்லை. எது வேண்டுமானாலும் வரட்டும் என்று நினைத்தவாறு அவன் சொன்னான். ‘ஃபன்தன்ப்ளோ’ அவன் தன்னுடைய கனவில் கேட்ட ஒரு பெயரைப் போல் இருந்தது அது. எப்படி அந்த வார்த்தை தன்னுடைய நாவில் வந்தது என்பது அவனுக்கே புரியவில்லை.
எது எப்படியோ அவர்கள் இருவரும் ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு ஃபன்தன்ப்ளோவிற்குச் சென்றார்கள். அந்த இளம் பெண்ணிற்கு அங்கிருந்த நல்ல ஒரு உணவு விடுதி ஏற்கனவே நன்கு அறிமுகமாயிருந்தது. நல்ல உணவும், நல்ல ஒயினும் கிடைக்கக் கூடிய இடம் அது. அங்கு இருந்த பணியாளுக்கு அவளை நன்றாகத் தெரிந்திருந்தது. அந்த மனிதன் பெயரைச் சொல்லி கூப்பிடும் அளவிற்கு அவனை அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள். நம்முடைய ஆண்ட்ரியாஸ் ஒரு பொறாமை குணம் கொண்ட மனிதனாக இருந்திருந்தால், அதற்காக அவன் கோபம் கொண்டிருப்பான். ஆனால், அவன்தான் பொறாமை குணம் உள்ளவன் இல்லையே! அதனால் அவனுக்கு கோபமும் வரவில்லை. அவர்கள் அங்கு நன்றாக சாப்பிட்டார்கள், மது அருந்தினார்கள். இப்படியே சில மணி நேரங்கள் ஓடின. பிறகு வாடகைக் காரில் அவர்கள் பாரிஸுக்குத் திரும்பினார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது பாரிஸ் மாலை நேர வெயிலில் மின்னிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அவர்கள் இருவரும் தனித்தனி நபர்கள்தானே! அதாவது – வாழ்க்கையில் ஒன்றாக இல்லாமல் விதி என்ற ஒன்றால் இணைக்கப்பட்ட இரு தனித்தனி நபர்கள்!
இரவு அவர்களுக்கு முன்னால் திறந்த பாலைவனம் போல் விரிந்து கிடந்தது.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்று சேரும்போது உண்டாகக்கூடிய முக்கியமான அனுபவத்தை சர்வசாதாரணமாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள் அவர்கள். நம்முடைய நூற்றாண்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருக்கும் நபர்களுக்கான மாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் இருவரும் திரைப்படம் பார்க்கச் சென்றார்கள். அங்கு அடர்த்தியான இருட்டு இருப்பதாகக் கூறுவதற்கில்லை. இருட்டு இல்லை என்று கூட கூறலாம். பாதி அளவு இருட்டுதான் இருந்தது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றியவாறு அவர்கள் அமர்ந்திருந்தார்கள், அந்த இளம்பெண்ணும் நம்முடைய நண்பர் ஆண்ட்ரியாஸும். அப்போது கூட அவனுடைய கைகளில் ஆர்வம் சற்று குறைவாகவே இருப்பது நன்றாக நமக்குத் தெரிந்தது. அங்கு உட்கார்ந்திருக்கவே அவனுக்கு என்னவோ போல் இருந்தது. இடைவேளை விட்டபோது, அழகான அந்த இளம்பெண்ணை வெளியே அழைத்துக்கொண்டு வந்து ஏதாவது குடிப்பதற்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். அவர்கள் வெளியே வந்தார்கள். குடித்தார்கள். அதற்கு மேல் திரைப்படம் பார்ப்பதற்கு அவனுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஒருவித தர்மசங்கடமான நிலையை உணர்ந்த அவர்கள் ஹோட்டலுக்குத் திரும்பி வந்தார்கள்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே பணம் திருப்பித் தர வேண்டிய கடமை தனக்கு இருப்பதை ஆண்ட்ரியாஸ் நினைத்துப் பார்த்தான். முதல்நாள் காலையில் எழுந்ததைவிட அன்று சீக்கிரமாகவே அவன் படுக்கையை விட்டு எழுந்தான். அழகான அந்த இளம்பெண்ணை அவளே திடுக்கிடும்வண்ணம் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பினான்.
அவள் கேட்டாள்: ‘‘ஆண்ட்ரியாஸ், என்ன இவ்வளவு அவசரம்?”
‘‘நான் ஒரு கடனைத் தீர்க்க வேண்டியிருக்கு” – ஆண்ட்ரியாஸ் சொன்னான்.
‘‘என்ன? இன்னைக்கா? இந்த ஞாயிற்றுக்கிழமையா?” – அந்த அழகி கேட்டாள்.
‘‘ஆமா… இன்னைக்கேதான். இந்த ஞாயிற்றுக்கிழமைதான்.”
‘‘கடன் யாருக்குத் திருப்பித் தரணும்? ஆணுக்கா, இல்லாட்டி ஒரு பெண்ணுக்கா?”
‘‘ஒரு பெண்ணுக்கு…” சிறிது தயங்கிய குரலில் சொன்னான் ஆண்ட்ரியாஸ்.
‘‘அவ பேரு என்ன?”
‘‘தெரேஸா…”
அப்போது அந்த அழகான இளம்பெண் படுக்கையைவிட்டு எழுந்து வேகமாகப் பாய்ந்து இரண்டு கைகளையும் சுருட்டி வைத்துக் கொண்டு ஆண்ட்ரியாஸை வேகமாக குத்தத் தொடங்கினாள்.
அடுத்த நிமிடம் அவன் அந்த அறையைவிட்டு ஓடினான். ஹோட்டலை விட்டும்தான். எந்தவித குழப்பமும் இல்லாமல் நேராக புனிதமேரியின் தேவாலயத்திற்குச் சென்று கொச்சு தெரேஸாவிற்குத் தரவேண்டிய இருநூறு ஃப்ராங்க் பணத்தை இன்றாவது கட்டாயம் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் அவன் நடந்தான்.
11
கடவுளின் விருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் அதையே அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். ஆண்ட்ரியாஸ் மீண்டும் அந்த பத்து மணிக்கு இருக்கும் வழிபாட்டுக் கூட்டத்துக்கு மிகவும் தாமதமாகவே வந்தான். அவன் தன்னையே அறியாமல் முன்பொருமுறை மது அருந்துவதற்காக நுழைந்த எதிரில் இருந்த மதுக்கடையை அப்போது பார்த்தான். அடுத்த நிமிடம் அதற்கு அவன் நுழையவும் செய்தான்.
உள்ளே போய் அமர்ந்து குடிப்பதற்கான மது வகையைக் கொண்டு வரச் சொன்னான். உலகத்திலுள்ள எல்லா தரித்திர மனிதர்களைப் போல அவனும் மிகவும் எச்சரிக்கையுள்ள மனிதனாகத்தான் இருந்தான். ஒன்றிற்குப் பின் இன்னொன்றாக அவனுடைய வாழ்க்கையில் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அற்புதச் சம்பவங்கள் நடை பெற்றிருந்தாலும், அவன் முதலில் தன்னுடைய பர்ஸை எடுத்து அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பார்த்தான். நெஞ்சுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பர்ஸைத் திறந்து பார்த்தபோது, அதில் முன்பு இருந்த தொள்ளாயிரத்து எண்பது ஃப்ராங்க் கிட்டத்தட்ட முழுமையாக செலவாகி விட்டிருந்ததை அவன் பார்த்தான்.
மீதி எஞ்சி இருந்தது வெறும் இருநூற்று ஐம்பது ஃப்ராங்க் தான். அவன் சிறிது நேரம் ஆழமான சிந்தனையில் ஆழ்ந்தான். ஹோட்டலில் இருந்த அந்தப் பெண் தன்னுடைய பணத்தை எடுத்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அதற்காக அவன் சிறிது கூட கவலைப்படவில்லை. சுகத்திற்கு விலை கொடுத்தாகத்தான் வேண்டும் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அவன் சுகம் அனுபவித்தான். அதற்கு அவன் விலை தந்துதானே ஆக வேண்டும்! பாதையைக் கடந்து சென்ற தெரேஸாவின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பு, தேவாலயத்தின் மணியோசை மக்களை வழிபாட்டுக் கூட்டத்திற்கு அழைப்பது வரை இங்கேயே அமர்ந்திருப்பதுதான் சரி என்ற முடிவுக்கு அவன் வந்தான். ஆனால், அதுவரை குடித்தால் என்ன என்று அவன் நினைத்தான். குடிப்பதற்காக என்னவோ கொண்டு வரும்படியும் அவன் சொன்னான். குடித்தான், ஆட்களை வழிபாட்டுக் கூட்டத்திற்கு வரும்படி அழைக்கும் மணிகள் தொடர்ந்து ஒலித்தன. அவன் ஹோட்டல் பணியாளை அழைத்துச் சொன்னான். ‘‘வெயிட்டர், பில் கொண்டு வா” அடுத்த நிமிடம் அவன் பணத்தைச் செலுத்திவிட்டு, எழுந்து வெளியே வந்தான். அப்போது அந்த வாசல் கதவிற்கு சற்றுத் தள்ளி மிகவும் உயரமான, விரிந்த தோள்களைக் கொண்ட ஒரு மனிதனைச் சந்தித்தான்.
‘வொய்செஹ்’- அவன் உரத்த குரலில் அழைத்தான். அந்த மனிதனும் அதே வேகத்தில் ‘ஆண்ட்ரியாஸ்’ என்று அழைத்தான். அவர்கள் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் க்யூபெக்கில் ஒன்றாக ஒரே நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்.
‘‘நான் வர்றதுவரை நீ எனக்காக இங்கே காத்திருக்க முடியுமா?” – ஆண்ட்ரியாஸ் கேட்டான். ‘‘இருபது நிமிடங்கள்ல வந்துடுவேன். வழிபாட்டுக் கூட்டம் முடிஞ்சவுடனே வந்துவிட வேண்டியதுதான். அதற்குமேல் ஒரு நிமிடம் கூட ஆகாது…”
‘‘நிச்சயமா முடியாது”- வொய்செஹ் சொன்னான். ‘‘சரி நீ எப்போ இருந்து வழிபாட்டுக் கூட்டங்களுக்குப் போய்க்கிட்டு இருக்கே? வழிபாடு நடத்துற பாதிரியார்களை விட நான் அதிகமா வெறுக்குறது யாரை தெரியுமா? வழிபாட்டுக் கூட்டத்துக்கு போற ஆளுகளைத்தான்…”
‘‘ஆனா, நான் போறது தெரேஸாவைத் தேடி…” ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘நான் அவளுக்கு கொஞ்சம் பணம் தர வேண்டியதிருக்கு.”
“நீ சொல்ல வர்றது புனித தெரேஸாவையா?”- வொய்செஹ் கேட்டான்.
‘‘ஆமா… அவளையேதான்.”
‘‘நீ அவளுக்கு எவ்வளவு தர வேண்டியதிருக்கு?” – வொய்செஹ் கேட்டான்.
‘‘இருநூறு ஃப்ராங்க்.”
‘‘அப்படின்னா நானும் உன் கூட வர்றேன்” என்றான் வொய்செஹ்.
அப்போதும் மணிகள் முழங்கிக் கொண்டுதான் இருந்தன. அவர்கள் இருவரும் தேவாலயத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு அவர்கள் நுழையவும், வழிபாட்டுக் கூட்டம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. வொய்செஹ் கிண்டலான குரலில் சொன்னான், ‘‘நீ எனக்கு முடிஞ்சா, நூறு ஃப்ராங்க் தா. வெளியே என்னை எதிர்பார்த்து ஒரு ஆள் காத்து நின்னுகிட்டு இருக்கான்றதே இப்போத்தான் என் ஞாபகத்துல வருது. நான் அந்தப் பணத்தை அவனுக்குக் கொடுக்கலைன்னா என்னை உதைச்சிட்டுத்தான் அவன் மறுவேலை பார்ப்பான்.”
அவ்வளவு தான்- தன் கையிலிருந்த இரண்டு நூறு ஃப்ராங்க் நோட்டுகளையும் எடுத்து அவன் கையில் தந்த ஆண்ட்ரியாஸ் சொன்னான், உன்னை ஒரு நிமிடம் கழிச்சு நான் வெளியில வந்து பார்க்குறேன்.”
தெரேஸாவிற்குத் திரும்பத் தரவேண்டிய பணம் கைவசம் இல்லாத நிலையில் வழிபாட்டுக் கூட்டத்தில் அதிக நேரம் இருப்பது தேவையில்லாத ஒன்று என்று அவன் மனதில் நினைத்தான். இருந்தாலும் பொறுமையாக ஐந்து நிமிடங்கள் அங்கேயே அவன் நின்றான். பிறகு, மது அருந்தும் இடத்தை நோக்கி நடந்தான். வொய்செஹ் அவனுக்காக அங்கு காத்து நின்றிருந்தான்.
அந்த நிமிடம் முதல் அவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டார்கள்.
உண்மையாய் சொல்லப்போனால் வொய்செஹ்ஹை எதிர்பார்த்து வெளியே அவன் கடன்பட்டிருக்கும் நண்பன் யாரும் அவனுக்காக காத்திருக்கவில்லை. ஆண்ட்ரியாஸ் தந்த இரண்டு நூறு ஃப்ராங்க் நோட்டுகளில் ஒன்றை எடுத்து அவன் மிகவும் கவனமாக கைக்குட்டைக்குள் இருக்குமாறு வைத்தான். மீதி இருந்த இன்னொரு நூறு ஃப்ராங்க் நோட்டைக் கொடுத்து குடிப்பதற்கு மதுபானம் வாங்கினான். மீண்டும் ஒன்று, மீண்டும் ஒன்று, மாலை நேரம் வந்ததும் இருவரும் சேர்ந்து தங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான இளம் பெண்கள் தங்கியிருக்கும் வீட்டைத் தேடி போனார்கள். மூன்று நாட்கள் அங்கேயே தங்கி கொட்டமடித்தார்கள். மீண்டும் வெளியே வந்தபோது, செவ்வாய்க்கிழமை ஆகியிருந்தது. வொய்செஹ் ஆண்ட்ரியாஸிடம் ‘‘நாம திரும்பவும் வர்ற ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். இதே நேரம்… இதே இடம்…” என்று கூறிவிட்டு விடை பெற்றான்.
‘‘சரி… மீண்டும் சந்திப்போம்…”
‘‘சந்திப்போம்…” – வொய்செஹ் சொல்லிவிட்டு மறைந்தான்.
12
மழை பெய்து கொண்டிருக்கும் மதிய நேரமாக இருந்தது அது. வொய்செஹ் அந்த இடத்தை விட்டுப்போய் ஒரு நிமிடம்தான் ஆகியிருக்கும். பயங்கரமாக மழை பெய்ய ஆரம்பித்தது. இல்லாவிட்டால் பெரிய ஒரு மழை பெய்து கொண்டிருப்பதாக ஆண்ட்ரியாஸுக்குத் தோன்றியிருக்கலாம். மழையில் தன்னுடைய நண்பனை மீண்டும் தொலைத்துவிட்டதாக அவன் நினைத்தான். அவன் பாக்கெட்டில் முப்பத்தைந்து ஃப்ராங்க் மட்டுமே மீதியிருந்தது. அதிர்ஷ்டத்தின் ரேகைகள் முழுமையாகப் படர்ந்திருக்கும் மனிதன் தான் என்ற எண்ணத்தை மனதில் வைத்தவாறு மீண்டும் கொஞ்சமும் எதிர்பார்க்காமலே அந்த சம்பவங்கள் தன் வாழ்க்கையின் நடக்கும் என்ற அற்புத நம்பிக்கையுடன், எல்லா தரித்தரர்களையும் போல, எல்லா குடிகாரர்களையும் போல தான் நம்பும் கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க அவன் தீர்மானித்தான். அந்த எண்ணத்துடன் அவன் ஸேன் நதிக்கரையில் இருக்கும் நன்கு அறிமுகமான படிகளில் இறங்கினான். வீடு இல்லாமல் இருக்கும் எல்லோரையும் போய் அவன் பார்த்தான்.
அப்போது படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த அவனுக்கு ஏற்கனவே அறிமுகமானவரைப் போல் தோன்றிய ஒரு மனிதரை அவன் பார்த்தான். மிகவும் பவ்யமாக அந்த மனிதரைப் பார்த்து ஆண்ட்ரியாஸ் வணக்கம் சொன்னான். வயதான, நவநாகரிக தோற்றத்தில் இருந்த அந்த மனிதர் ஆண்ட்ரியாஸை உற்றுப் பார்த்துவிட்டு கேட்டார்.
‘‘என் அன்பான மனிதரே, உங்களுக்கு ஏதாவது பணம் தேவையா?” மூன்று வாரங்களுக்கு முன்பு அதே இடத்தில் சந்தித்த அந்த மனிதரின் குரல் தான்ன அது என்பதை ஆண்ட்ரியாஸ் புரிந்து கொண்டான். அவன் சொன்னான்: ‘‘உங்களுக்கு நான் பணம் தர வேண்டியதாயிருக்குன்ற விஷயத்தை நான் மனசுல வச்சுக் கிட்டுத்தான் இருக்கேன். அந்தப் பணத்தை புனித தெரேஸா கிட்ட கொண்டு போய் கொடுத்துர்றதா நான் வாக்குறுதி தந்ததையும் மறக்கல. ஆனால், நான் நினைச்சது மாதிரி காரியங்கள் தரணும்னு மூணு முறை முயற்சி செய்தேன்.
“ஏதாவது தப்பு நடந்திருக்கும்…” வயதான, நவநாகரிகமான உடைகள் அணிந்த அந்த மனிதர் சொன்னார். நீங்க அறிமுகமானதுனால எனக்குக் கிடைக்க வேண்டிய பெருமை இன்னும் கிடைக்கல. நீங்க வேற யாரோ ஆள்னு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, நீங்க ஒரு தர்ம சங்கடமான நிலையில இருக்கீங்கன்ற உண்மையை என்னால புரிஞ்சுக்க முடியுது. இப்போ நீங்க செயிண்ட் தெரேஸாவைப் பற்றி சொன்னீங்க. நான் தனிப்பட்ட முறையில் என்னை தெரேஸாகிட்ட முழுமையா ஒப்படைச்சிட்டேன். அதனால நீங்க தரவேண்டிய பணத்தை முழுசா முன் கூட்டியே உங்ககிட்ட தர்றதுக்கு நான் தயாரா இருக்கேன். பணம் எவ்வளவுன்னு தயவு செய்து சொல்ல முடியுமா?”
‘‘இருநூறு ஃப்ராங்க்”- ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘ஆனா, உண்மையாகவே என்னை உங்களால புரிஞ்சிக்க முடியலியா? நான் ஒரு வாக்கு கொடுத்தா, அதை எப்படியும் காப்பாற்றணும்னு நினைக்கிற ஆளு. நான் கொடுக்க வேண்டிய பணத்தை உங்களால அனுப்பி வைக்க முடியாது. எனக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு. ஆனா, எனக்குன்னு முகவரி எதுவும் கிடையாது. ஒவ்வொரு ராத்திரியும் இந்தப் பாலங்கள்ல ஏதாவது ஒண்ணுக்குக் கீழேதான் படுத்து தூங்கிக்கிட்டு இருக்கேன்.”
‘‘அதனால என்ன?” – அந்த மனிதர் சொன்னார், ‘‘நானும் அங்கே தான் உறங்குறேன். எங்கிட்ட இருந்து பணம் வாங்கிக்கிறதுக்காக உங்களுக்கு நான் நன்றி சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு என்கிட்ட நீங்க நடந்துக்குறீங்க. காரணம் என்ன தெரியுமா? நானும் செயிண்ட் தெரேஸாவுக்கு அந்த அளவுக்கு கடன் பட்டிருக்கேன்…”
‘‘அப்படின்னா…”- ஆண்ட்ரியாஸ் சொன்னான். ‘‘உங்க விருப்பம்…” அந்த மனிதர் தந்த பணத்தை ஆண்ட்ரியாஸ் பெற்றுக் கொண்டான். அவர் படிகளில் ஏறிப் போவது வரை அவன் அவரைப் பார்த்தவாறு நின்றிருந்தான். பிறகு அவன் படிகளில் ஏறி நேராக அவன் எப்போதும் செல்கின்ற ரூதெகதர் வென்த், தாரி-பாரியில் இருக்கும் ரஷ்யன்- ஆர்மேனியின் உணவு விடுதியை நோக்கி நடந்தான். சனிக்கிழமை இரவு வரை அவன் அங்கே தங்கினான். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதை அவன் மனதில் நினைத்துப் பார்த்தான். அதே நேரத்தில் புனித மேரியின் தேவாலயத்தில் தான் செய்து தீர்க்க வேண்டிய பொறுப்பு என்ன என்பதையும் அவன் எண்ணிப் பார்த்தான்.
13
தாரி-பாரியில் நல்ல கூட்டம். காரணம்- ஏராளமான வீடு இல்லாத மனிதர்கள் நாட்கணக்கில் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்கள் பகல் நேரங்களில் மது அருந்தும் இடத்திற்குப் பின்னாலும், இரவில் பெஞ்சுகளிலும் படுத்து உறங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே ஆண்ட்ரியாஸ் படுக்கையை விட்டு எழுந்தான். வழிபாட்டு கூட்டத்திற்கு உரிய நேரத்துக்கு போய்ச் சேர வேண்டும் என்பதைவிட ஹோட்டல் உரிமையாளர் வந்து உணவிற்கு மதுவிற்கும் தங்கினதற்கும் பணம் கேட்பார் என்ற பயமே அவனின் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
அவன் போட்ட கணக்குகள் தவறாகி விட்டன. காரணம் – ஹோட்டல் உரிமையாளர் அவன் எழுவதற்கு முன்பே படுக்கையை விட்டு எழுந்திருந்தார். அவருக்கு பல நாட்களாகவே ஆண்ட்ரியாஸை நன்கு தெரியும். பில் தொகையைக் கட்டுவதற்கான எல்லா சூழ்நிலைகளில் இருந்தும் தப்பிக்கப் பார்க்கும் ஒரு மாதிரியான ஆள் ஆண்ட்ரியாஸ் என்பதை அவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏராளமாக சாப்பிட்டதற்கும், மது குடித்ததற்கும் ஒரு பெரிய தொகையை நம்முடைய ஆண்ட்ரியாஸ் அங்கு கொடுக்க வேண்டியிருந்தது. தாரி-பாரியின் உரிமையாளருக்கு எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்பவர்களையும், அப்படி நடந்து கொள்ளாதவர்களையும் பிரித்துப் பார்த்து இனம் கண்டு பிடிக்கும் திறமை இருந்தது. நம்முடைய ஆண்ட்ரியாஸ் பல குடிகாரர்களையும் போல, இரண்டாம் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அதனால் கையில் வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட பெரும் பகுதியை அங்கே அவன் கட்ட வேண்டியதாகிவிட்டது. பணத்தைச் செலுத்திவிட்டு, கம்பீரமாக புனித மேரியின் தேவாலயத்தை நோக்கி நடந்தான். அதே நேரத்தில் செயிண்ட் தெரேஸாவுக்குத் தரவேண்டிய முழுப்பணமும் தன் கைவசம் தற்போது இல்லை என்பதையும் அவன் அறியாமல் இல்லை. இருந்தாலும், அவன் மனம் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தன்னுடைய நண்பன் வொய்செஹ்ஹை சந்திப்பதைப் பற்றிய நினைவில்தான் அப்போது ஈடுபட்டிருந்தது.
அதனால் அவன் தேவாலயத்தை நெருங்கும்போது, அவனுடைய கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்- பத்து மணிக்குள் வழிபாட்டு கூட்டத்திற்கான நேரம் முடிந்து விட்டிருந்தது. தேவாலயத்தை விட்டு வெளியே வந்த மனிதர்கள் அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மது அருந்தும் இடத்திற்குப் போகலாம் என்று அவன் திரும்பிய போது, பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. அடுத்த நிமிடம் முரட்டுத்தனமான ஒரு கை தன் மேல் விழுவதை அவன் உணர்ந்தான். அவன் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றிருந்தான்.
சட்ட அனுமதி கொண்ட எந்த அத்தாட்சி தாள்களும் ஆண்ட்ரியாஸின் கைகளில் இல்லை என்பதுதான் நமக்குத் தெரியுமே. அதனால் போலீஸ்காரனைப் பார்த்ததும், நியாயமாகவே ஆண்ட்ரியாஸ் பயப்பட ஆரம்பித்தான். சட்ட அனுமதி கொண்ட தாள்கள் தன்னுடைய பாக்கெட்டிற்குள் இருப்பதைப் போல் காட்டுவதற்காக, அவன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தான். ஆனால், போலீஸ்காரன் அவனைப் பார்த்து சொன்னான், ‘‘நீங்க பாக்கெட்டுக்குள்ள எதற்காக கையை விடுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, அது உங்க பாக்கெட்ல இல்ல. உங்க பர்ஸ் கீழே விழுந்துருச்சு. இந்தாங்க… ஞாயிற்றுக்கிழமை காலையில அதுவும் காலம் காத்தால இந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாம குடிச்சா, இப்படித்தான் நடக்கும்ன்றதை ஞாபகத்துல வச்சுக்குங்க.
ஆண்ட்ரியாஸ் போலீஸ்காரன் கொடுத்த பர்ஸை வேகமாக வாங்கினான். தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் போலீஸ்காரனுக்கு நேராக தன்னுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்ற மனம் கொஞ்சமாவது அவனுக்கு இருந்தது. அடுத்த நிமிடம் படுவேகமாக மது அருந்தும் சாலையை நோக்கி அவன் நடந்தான்.
வொய்செஹ்ஹை அங்கு பார்த்தாலும், அவனால் அந்த மனிதனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இருப்பினும், அடையாளம் கண்டு கொண்ட பிறகு, அவனை சிரித்த முகத்துடன் ஆண்ட்ரியாஸ் வரவேற்றான். ஒருவருக்கொருவர் குடிப்பதற்கு மதுவை வாங்கிக் கொடுத்துக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். பெரும்பாலான மனிதர்களைப் போல மரியாதை தெரிந்திருந்த வொய்செஹ் தான் அமர்ந்திருந்த பெஞ்சை விட்டு எழுந்து, ஆண்ட்ரியாஸுக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, இடறி இடறி நடந்தவாறு மேஜையை சுற்றிப் போய் எதிர்ப்பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்து பாசம் பொங்க ஆண்ட்ரியாஸுடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் பெர்னோவைத் தவிர, வேறு எதையும் குடிக்கவில்லை.
‘‘ஆச்சரியப்படும் வகையில் திரும்பவும் என் வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்துகிட்டுதான் இருக்கு” – ஆண்ட்ரியாஸ் சொன்னான்: ‘‘நான் இங்கே வர்றதுக்காக நடந்து வந்தா, ஒரு போலீஸ்காரன் என் தோளைத்தட்டி சொல்றான். ‘உங்க பர்ஸ் கீழே விழுந்துருச்சு, இந்தாங்க’ன்னு. சொன்னதோடு நிற்காம, யாரோ ஒருத்தரோட பர்ஸை என் கையில அவன் தர்றான். நான் அதைப் பேசாம வாங்கிக்கிட்டேன். இப்போ நான் அதைத் திறந்து பார்க்கப் போறேன். அதுல என்ன இருக்குன்னு உடனடியா பார்க்கணும்…”
அவன் அந்த பர்ஸை வெளியே எடுத்து, பார்த்தான். அதில் இருந்த பல தாள்களை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவற்றுக்கு மத்தியில் பணமும் இருப்பது அவனுக்கு தெரியவந்தது. அவன் அதை எடுத்து எண்ணிப் பார்த்தான். சரியாக இருநூறு ஃப்ராங்க் இருந்தது. ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘இங்க பாரு- இது கடவுள் தர்ற எச்சரிக்கை. கடைசி கடைசியா நான் அங்கே போயி என்னோட கடனை அடைக்கப் போறேன்.”
‘‘அதற்கு…” -வொய்செஹ் சொன்னான்: ‘‘வழிபாட்டுக் கூட்டம் முடியும் வரை நீ காத்திருக்கலாம். வழிபாட்டுக் கூட்டத்துக்கு நீ போயி என்ன செய்யப் போற? வழிபாட்டுக் கூட்டம் நடக்குறப்போ நீ உன் கடனைத் திருப்பித் தர முடியாது. அந்தக் கூட்டம் முடிஞ்ச பிறகு தேவாலயத்துல இருக்குற ஆலோசனை அறைக்கு நாம போகலாம். அதுவரை நாம இங்கேயே இருந்து குடிப்போம்.”
‘‘சரி…” -ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘நீ சொல்றது படி நடக்கட்டும்.”
அப்போது கதவைத் திறந்து வந்த ஒரு சிறுமி அவனுக்கு நேர் எதிராக இருந்த பெஞ்சில் உட்கார்ந்தாள். அதைப் பார்த்ததும் ஆண்ட்ரியாஸின் தலையில் இருந்த பாரம் இறங்குவது மாதிரியும் இதயத்தில் தாங்க முடியாத அளவிற்கு வேதனையும் தோன்றுவதைப் போல் இருந்தது. அந்தச் சிறுமி மிகவும் வயது குறைவானவளாக இருந்தாள். இதுவரை அவன் பார்த்த எல்லா பெண்களையும் விட மிகவும் வயதில் குறைந்த சிறுமியாக இருந்தாள் அவள். நீல வானத்தின் நிறத்தில் அவள் அணிந்திருந்த ஆடைகள் இருந்தன. வரம்போல் அமைந்த சில நாட்களில் வானம் எப்படி நீல நிறமாகத் தோன்றுமோ, அப்படியொரு நீல நிறத்தில் இருந்தாள் அவள்.
அவன் அந்தச் சிறுமியை நோக்கி தட்டுத் தடுமாறி நடந்தான். தலை குனிந்து மரியாதை செலுத்தியவாறு அந்தச் சிறுமியைப் பார்த்து அவன் கேட்டான், ‘‘நீ இங்கே என்ன பண்ணுற?”
‘‘என்னோட அப்பாவும் அம்மாவும் வழிபாட்டுக் கூட்டத்துக்கு போயிருக்காங்க. நான் அவங்களுக்காகக் காத்திருக்கேன். எல்லா நாலாவது ஞாயிற்றுக்கிழமைகள்லயும் அவங்க என்னைப் பார்ப்பாங்க” என்று அவள் சொன்னாள். வயதான ஒரு மனிதன் திடீரென்று தனக்கு முன்னால் வந்து நின்று தன்னுடன் பேச ஆரம்பித்ததைப் பார்த்த அவளுக்கு கூச்சமும், பதைபதைப்பும் உண்டாயின். அவனைப் பார்த்து அந்தச் சிறுமி லேசாக பயப்படவும் செய்தாள்.
ஆண்ட்ரியாஸ் கேட்டான், ‘‘ஆமா… உன் பேரு என்ன?”
‘‘தெரேஸா” – அந்தச் சிறுமி சொன்னாள்.
‘‘ஹா…” – ஆண்ட்ரியாஸ் உரத்த குரலில் கத்தினான். ‘‘எவ்வளவு நல்லதா போச்சு! இவ்வளவு பெருமைகள் கொண்ட புனிதச் சிறுமி இவ்வளவு மகத்துவம் கொண்ட சிறுமி தெரேஸா, நீண்ட நாட்களா நான் அந்தப் பக்கம் போகாத காரணத்தால், என்னைத் தேடி வருவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல…”
‘‘நீங்க என்ன சொல்றீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியல…” – அவன் பேசியதைக் கேட்டு திகைத்துப் போன சிறுமி சொன்னாள்.
‘‘அது உன்னோட நல்ல குணத்தைக் காட்டுது”-ஆண்ட்ரியாஸ் சிறுமியைப் பார்த்து சொன்னான்: ‘‘அது உன்னோட மரியாதை! ஆனா, அது ஏன் என்பதை நான் புரிஞ்சுக்குறேன். கொஞ்ச நாட்களா உனக்கு நான் இருநூறு ஃப்ராங்க் கடன் பட்டிருக்கேன். அந்தப் பணத்தை உன்னைத் தேடி வந்து திருப்பித்தர என்னால முடியல.”
‘‘நீங்க எனக்கு எந்தப் பணமும் தர வேண்டியதே இல்லை. ஆனா, என் பர்ஸ்ல கொஞ்சம் பணம் இருக்கு. தயவு செய்து அதை எடுத்துக்கங்க. என்னை வெறுமனே விடுங்க. என்னோட அப்பாவும் அம்மாவும் எந்த நேரத்துலயும் இங்கே வரலாம்.”
அவள் தன் பர்ஸை திறந்து, அதிலிருந்து நூறு ஃப்ராங்க் நோட்டு ஒன்றை எடுத்து அவனிடம் தந்தாள்.
வொய்செஹ் இந்த சம்பவத்தை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நாற்காலியை விட்டு எழுந்து இரண்டு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான். அதைக் குடிப்பதற்காக மது அருந்தும் இடத்திற்கு ஆண்ட்ரியாஸை அவன் பலவந்தமாக இழுத்தான். ஆண்ட்ரியாஸும் மது அருந்தும் இடத்திற்குச் செல்வதற்காக அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான். அடுத்த நிமிடம் ஒரு கோணியைப் போல அவன் தரையில் நிலை தடுமாறி விழுந்தான். வொய்செஹ் உட்பட மது அருந்தும் சாலையில் இருந்த எல்லாரும் ஒருவித பதைபதைப்புடன் அந்தக் காட்சியைப் பார்த்தனர். எல்லோரையும் விட அந்தச் சிறுமி மிகவும் பதைபதைத்துப் போய் நின்றாள். அருகில் மருத்துவர்கள் யாரும் இல்லாததாலும், மருந்துக் கடைகள் என்று எதுவும் இல்லாததாலும் அவனை நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தைத் தாண்டி இருக்கும் தேவாலயத்திற்கு எடுத்துக் கொண்டு சென்றார்கள். வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் அங்கிருக்கும் பாதிரியார்களுக்கு ஏதாவது தெரியும் என்று நம்பிக்கையற்ற ஹோட்டல் பணியாட்கள் கூட முழுமையாக நம்பினார்கள். தெரேஸா என்ற அந்தச் சிறுமியும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள்.
அவர்கள் நம்முடைய ஆண்ட்ரியாஸை தேவாலயத்தின் ஆலோசனை அறைக்குள் கொண்டு சென்றார்கள். அவனுடைய அதிர்ஷ்டக்குறைவு என்றுதான் சொல்ல வேண்டும், அவனுடைய பேசும் சக்தி முழுமையாக அவனிடமிருந்து இல்லாமற் போயிருந்தது. அவனால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். அவன் சிறுமி தெரேஸாவிற்குத் தருவதற்காக வைத்திருந்த பணம் இருக்கும் சட்டையின் இடதுபக்க பாக்கெட்டிற்குள் தன் கையை அவன் நுழைத்தான். தொடர்ந்து அவன் சொன்னான்: ‘‘மிஸ்.தெரேஸா” அவன் ஒருமுறை நீண்ட பெருமூச்சு விட்டான். அடுத்த நிமிடம் அவன் உயிர் பிரிந்தது.
கடவுள் நம் எல்லோருக்கும், எல்லா குடிகாரர்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு கஷ்டமில்லாத மரணத்தைத் தருவாராக!