வடலூரில் அரசு மருத்துவர் வீட்டின்கதவை உடைத்து 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு,மர்ம நபர்கள் கைவரிசை
வடலூர், மாவட்டம்
வடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, சுமார் 10 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர் அருகே உள்ள ஆபத்தாரனபுரம், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி (65). இவர் குறிஞ்சிப்பாடி முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் செங்குட்டுவன் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியும் சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவராக உள்ளதால், இருவரும் சென்னையிலேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனர். வடலூரில் உள்ள இவர்களது வீட்டை தந்தை தண்டபாணி பராமரித்து வருகிறார்.
வழக்கம்போல நேற்று மாலை ஆறுமணிக்கு வீட்டிற்குச் சென்று மின்விளக்குகளை ஒ எரியச்செய்துவிட்டு, கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு தண்டபாணி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் தடயங்களை மறைப்பதற்காகச் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து வடலூர் போலிஸ் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பலராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.