362 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!
திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 2023-ம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 1,375 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்த வழக்குகளில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி 362 டன் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த பொது வினியோகத்திட்ட மண்எண்ணெய் 211 லிட்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதற்காக 406 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக நான்கு சக்கர வாகனங்கள் 79, இரண்டு சக்கர வாகனங்கள் 83 என மொத்தம் 161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை நடப்பு ஆண்டில் 26 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனையில் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 69 ேபர் மீது பிடிகட்டளை நிறைவேற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருவர் மீதும், தஞ்சை மாவட்டத்தில் ஒருவர் மீதும், திருவாரூர் மாவட்டத்தில் 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 61 பேரில் 43 பேருக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு, பிணையத்தை மீறி தொடர் குற்றம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 241 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் கடத்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் (18005995950) தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும், குடிமைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.