“20 டன் தங்கம்: ₹11 ஆயிரம் கோடிக்கு விற்பனை அசத்திய தமிழ்நாட்டு நகை பிரியர்கள்”
அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடிய, விடிய நகைக்கடைகள் திறந்திருந்தன. மக்கள் ஆர்வத்துடன் வந்து நகைகளை வாங்கினர். நேற்று, இன்று 11 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக அட்சய திருதியை அன்று தங்கம் விலை அதிகரிப்பது வழக்கம்.
ஆனால், நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது கிராமத்திற்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.5605க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.44840க்கும் விற்கப்பட்டது.
கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று நள்ளிரவு வரை கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
அட்சய திருதியை 2ம் நாளான இன்று காலையிலேயே நகைக் கடைகள் திறக்கப்பட்டன. அதுமட்டுமின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகைக்கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
பிற்பகல் வரை கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ”அட்சய திருதியை என்பதால் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கி சென்றனர். இதனால், விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் வரை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
இன்றும் காலையில் நகைக்கடைகள் திறக்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டு அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றார். நேற்று, இன்று என 2 நாட்களில் மட்டும் 20 டன் அளவுக்கு நகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் ₹11 ஆயிரம் கோடி அளவுக்கு நகை விற்பனையாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.