140 எம்.பி.க்கள் ‘சஸ்பெண்ட்’ ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லையா?; முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைமையின் 61-வது ஆண்டு மணிவிழா நிறைவுவிழாவும், இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றியின் கால்கோள்விழா என முப்பெரும் விழாவாக வெல்லும் ஜனநாயகம் என்னும் தலைப்பில் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- நானும், திருமாவளவனும் எப்போதும் தமிழினத்தின் உரிமைக்கு வலு சேர்க்கிற அடிப்படையில் தான் இணைந்து நிற்கிறோம். நமக்குள் இருப்பது தேர்தல் உறவுஅல்ல, அரசியல் உறவுஅல்ல. கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்காரையும் யாராவது பிறக்க முடியுமா?. அதுபோல தான் திராவிட முன்னேற்ற கழகமும், விடுதலை சிறுத்தைகளும். புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்தமண்ணில் மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கார் பெயர் வைக்கவும் தலைவர் கருணாநிதி தான் காரணம். பெரியாரின் மண்ணில் சென்னை சட்டக்கல்லூரிக்கு டாக்டர் அம்பதே்கார் சட்டக்கல்லூரி என பெயர் வைத்ததும், டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் உருவாக்கியதும் கருணாநிதி அவர்கள். புரட்சியாளர் அம்பேத்காரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம் தான் தி.மு.க. அம்பேத்காரை போற்றுகிற பட்டியல் இன மக்கள் நலனை காக்கிற அரசு தான் திராவிட மாடல் அரசு. இங்கு சிலவற்றை மட்டும் பட்டியலிட விரும்புகிறேன். அம்பேத்கார் பிறந்தநாளை சமத்துவநாளாக அறிவித்தோம். திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கார் நினைவு மண்டபத்தில் அவரது சிலையை அமைத்து திறந்து வைத்தேன். அம்பேத்காரின் படைப்புகளை செம்பதிப்புகளாக விரைவில் வெளியிட இருக்கிறோம். ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை புதுப்பித்து உயிர்ப்பூட்டினோம். நடத்தப்படாமல் இருந்த விழிப்புணர்வு கூட்டங்களை 6 மாத்துக்கு ஒருமுறை நடத்தினோம். திராவிட போராளி அயோத்தியதாசர் சிலையை சென்னையில் திறந்து வைத்தோம். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உருவாக்கி திராவிட தமிழன உணர்வோட வெளிப்பாடாக தான் இதை எல்லாம் செய்து வருகிறோம். சமூகநீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுவதும் அமைக்க வேண்டும் என்று தான் இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி இருக்கிறார். வெல்லும் ஜனநாயகம் என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கான கட்டளையை பிறப்பிக்க தான் இந்த மாநாட்டை கூட்டி சர்வாதிகார பா.ஜனதா அரசை தூக்கி எறிவோம். ஜனநாயக அரசை நிறுவுவோம் என சபதம் ஏற்று, மிக முக்கியமான 33 தீர்மானங்களை இந்த மாநாட்டில் திருமாவளவன் நிறைவேற்றி இருக்கிறார். இந்த சபதமும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு தான் இருக்கிறது. ஒன்றியத்தில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுயாட்சி அரசையும் உருவாக்கணும். அதனால் தான் குடியரசு நாளில் இந்த மாநாட்டை திருமாவளவன் கூட்டி இருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டுமானால் ஜனநாயகம் வெல்ல வேண்டும். அப்போது தான் கூட்டாட்சி மலரும். கூட்டாட்சியை சுட்டிக்காட்ட நாம் பயன்படுத்த இருக்கிற ஒன்றிய அரசு என்ற சொல்லை முதன்முதலில் அம்பேத்கர் தான் பயன்படுத்தினார். அரசியலமைப்பு சட்டம் கொடுத்த அம்பேத்கார் என்ன சொல்லி இருக்கிறார். ஒன்றிய அரசும், மாநில அரசும் தனித்தனி அதிகாரம் பெற்றவை. ஒன்று மற்றொன்றுக்கு அடிபணியவில்லை. ஒருங்கிணைக்கப்பட்டு தான் இருக்கிறது என்று சொன்னார். அதை தான் நாமும் சொல்கிறோம். மாகாணங்கள் தெள்ளத்தெளிவான சகலவித தேசிய இன அம்சங்களை கொண்டுள்ளன. எனவே அவற்றின் தேசிய பண்பு முழு நிறைவாய் வளர்ந்து மலர சுதந்திர வாய்ப்பு அளிக்கப்படணும் என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். இத்தகைய எண்ணம் கொண்ட ஒரு ஒன்றிய அரசை நாம் உருவாக்கணும். அதற்கு தொடக்கமாக பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி என்பது பூஜ்யம். அதனால் தமிழ்நாட்டில் பா.ஜனதா பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜனதாவை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. ஒன்றிய அளவில் ஆடசியில் உள்ள பா.ஜனதாவை வீழ்த்துவை இலக்காக கொண்ட எல்லா கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன. பா.ஜனதா என்று சொல்வதால் இது தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டணி என்று சுருக்கிட முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்த, பன்முகத்தன்மையை,ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜனதா மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது இது தான் நமது இலக்கு. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடவடிக்கையே இருக்காது. ஏன்? மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆக்கி விடுவார்கள். கண்ணுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரித்து யூனியன் பிரேதசங்களாக மாற்றினார்கள். தேர்தல் கிடையாது. அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டு சிறை. இது தான் பா.ஜனதா கட்சியின் சர்வாதிகாரம். அந்த நிலைமை தான் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும். கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம். 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட். இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லையா?. உலக நாடுகள் என்ன நினைக்கும். இதை கண்டு சிரிக்கமாட்டார்களா?. உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிவிட்டு, நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது தான் உங்கள் ஜனநாயகமா? என கேட்கமாட்டார்களா?. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படுத்திய ஆட்சியாக பா.ஜனதா இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள். நமக்கு முன்னாடி இருக்கிற நெருக்கடியை நாம் உணர்ந்து இருக்க வேண்டும். அகில இந்திய அரசியல் தலைவர்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்களுக்கு அதிகமான விளக்கம் சொல்ல விரும்பவில்லை. மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலை மாறுபடும். ஆனால் நடக்க இருப்பது நாடாளுமன்ற தேர்தல் ஒன்றியத்தில் யார் ஆட்சி நடக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து எல்லோரும் செயல்பட வேண்டும். பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் தான் எல்லோருக்கும் இருக்கணும். பாஜனதாவுக்கு எதிரான வாக்குகள் எந்தகாலத்திலும் சிதறக்கூடாது. பகைவர்களோடு சேர்த்து, துரோகிகளையும் மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். வரலாறு என்ன சொல்ல வேண்டும் தெரியுமா?. இந்தியா கூட்டணி அமைத்தார்கள். இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றினார்கள். இது தான் வரலாறாக இருக்க வேண்டும். ஒரு எடுத்து காட்டு சொல்ல விரும்புகிறேன். சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் நடக்க இருந்தது. பா.ஜனதாவுக்கு 14 உறுப்பினர்கள், ஆம்ஆத்மிக்கு 13 உறுப்பினர்கள். காங்கிரசுக்கு 7 உறுப்பினர்கள். ஆம்ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி. இந்தியா கூட்டணி மேயர் பதவியை கைப்பற்ற நிலைமை உருவானது. இந்த இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாக இது அமையபோகிறது என வடமாநில ஊடகங்கள் எழுதினார்கள். ஆனால் அவர்கள் தோ்தலையே ரத்து செய்துவிட்டார்கள். ஒரு மேயர் தேர்தலையே ரத்து செய்கிறார்கள் என்றால், பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை இறுக்க பற்றி கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக பா.ஜனதா தோற்கடிக்கப்படும். ஜனநாயகம் வெல்லும். அதை காலம் சொல்லும். தொல்.திருமாவளவனும் வெல்வார். இவ்வாறு அவர் பேசினார்.