மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக 793 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்களம் ஏ.கே.டி. பள்ளி கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம் இரண்டாம் கட்டவிழாவை, தொடங்கி வைத்த நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
அரசு பள்ளிகளில் கல்வி பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் இரண்டாம் கட்ட துவக்க விழா நேற்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராம் கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் 1,490 மாணவிகளில் இன்றைய தினம் 793 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள், தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி படிப்பில், முதல் உயர்கல்வி படிப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், உயர்கல்வி பயில்வதற்கு அதிக எண்ணிக்கையில் பெண்களை ஊக்குவிப்பதற்காக புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமோ/ ஐ.டி.ஐ படிப்புகளில் சேரும் 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் தமிழக அரசு பள்ளிகளில் படித்திருந்தால் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் பயின்றால் முதல் 3 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். தொலைதூர கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இத்திட்டத்தின்கீழ் பயன்பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான புதுமைப் பெண் திட்டத்தினை மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன் கல்லூரிகால பாடபிரிவுகளில் நன்கு கற்றுக்கொண்டு ஆழமாக படித்திட வேண்டும். இக்காலக்கட்டங்களில் சிறப்புடன் பயின்றால் பிற்காலத்தில் நல்லதொரு வாழ்க்கை அமையும். பாடப்பிரிவுகளுடன் தினசரி நாளிதழ்களையும் படித்து பொது அறிவினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது அனைத்து அரசுதுறைகளிலும் பெண்கள் நிறையபேர் பணியாற்றி வருகிறார்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும் 50 சதவிதம் பெண்களே பணியாற்றி வருகிறார்கள். ஆகையினால் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு அரசு புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் வழங்கும் உதவி தொகையினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பெ.புவனேஷ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.செ.தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் து.முனீஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் ஆ.அலமேலு ஆறுமுகம் (கள்ளக்குறிச்சி), சா.வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் (ரிஷிவந்தியம்), .சாந்தி இளங்கோவன் (திருநாவலூர்), அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.