பிரபல ஹோட்டலை உணவு பாதுகாப்புத்துறை மூடி அதிரடி நடவடிக்கை..
தூத்துக்குடி, மாவட்டம்
தூத்துக்குடியில் பிரபல ஹோட்டலை உணவு பாதுகாப்புத்துறை மூடி சீலிட்ட அதிரடி நடவடிக்கை.உணவகத்தில் உணவுப் பொருளை தெரு நாய் அசுத்தப்படுத்திய விவகாரம் – உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது: உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை.பாதுகாப்பற்ற முறையில் உணவகத்தை இயக்கினால் உணவகங்கள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை.தூத்துக்குடி மாநகராட்சியின் ஜார்ஜ் ரோட்டில் உள்ள சமுத்ரா ஃபேமிலி ரெஸ்டாரண்ட்டில் சவர்மா அடுப்பில் இருந்த சிக்கனையும், மற்ற உபகரணங்களையும் தெரு நாய் ஒன்று அசுத்தப்படுத்தியதாக புகார் வரப்பெற்றதினையடுத்து, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்திரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரால் இன்று (29.01.2023) உடனடியாக அந்த உணவகம் ஆய்வு செய்யப்பட்டு, 7 கிலோ பழைய சிக்கன் உள்ளிட்ட கெட்டுப்போன உணவுப் பொருட்கள் 15 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், உணவகத்தில் இருந்த பொது சுகாதார குறைபாட்டிற்காகவும், கால்நடைகள் அணுகும் வண்ணம் சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருட்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாலும், உரிம நிபந்தனைகளை மீறியிருந்ததாலும், அவ்வுணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்தும், தொடர் விசாரணைக்காக உணவகத்தினை மூடி முத்திரையிடவும் நியமன அலுவலர் உத்திரவிட்டதின் பேரில், மேற்படி சமுத்ரா ஃபேமிலி ரெஸ்டராண்ட் நியமன அலுவலரின் உரிய உத்திரவின் கீழ் உணவு பாதுகாப்பு அலுவலரால் மூடி முத்திரையிடப்பட்டது.
மேலும், நுகர்வோர் உண்ணத் தகுந்த உணவுப் பொருட்களை தெரு நாய் அசுத்தப்படுத்திய விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.உணவகங்கள் சுகாதாரத்தைப் பேணி, பொதுமக்களுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான உணவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் உணவகத்தின் இயக்கத்தினை நிறுத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.மேலும், நுகர்வோர்கள் உணவகங்களில் உணவு பாதுகாப்பு குறைபாடுகள் எவற்றையேனும் கண்டறிந்தால், மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலக வாட்ஸ்அப் புகார் எண்ணான 9444042322 என்ற எண்ணிற்கு புகார் அளித்தால், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.