தஞ்சாவூருக்கு ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் பொது மேடை சார்பில் போராட்டம்
தஞ்சாவூர். சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசின் அறிக்கையை புறக்கணித்த ஆளுநர் ரவியைக் கண்டித்து தஞ்சையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்! தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என் ரவி அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராகவும் , தமிழ் மொழிக்கு ,பண்பாட்டு, கலாச்சாரத்துக்கு எதிராகவும் பேசி வருவது, தமிழ்நாட்டின் தெய்வப் புலவர் திருவள்ளுவரை அவமதித்தது உள்ளிட்ட செயல்பாடுகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட நீட் விலக்கு,ஆன்லைன் ரம்மி தடைசெய்வது உள்ளிட்ட தீர்மானங்களில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப் பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு என்று நாம் அழைத்து வந்ததை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது . இந்த நிலையில் நேற்று 9ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கிய பொழுது அரசின் அறிக்கையை தன் விருப்பத்திற்கு மாறாக பேசியது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் புறக்கணித்தது, சுயமரியாதை, அமைதி பூங்கா, பெண்கள் முன்னேற்றம் என்ற வரிகளை ஏற்றுக் கொள்ளாதது உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு முதல்வர் ஆளுநர் உரைக்கு பிறகு சுட்டிக் காட்டிய பொழுது ஆளுநர் வெளிநடப்பு செய்தது உள்ளிட்ட மரபுக்கு மாறாக நடந்து கொண்ட செயல்பாடுகளை கண்டித்து இன்று தஞ்சைக்கு வருகை தந்த ஆளுநர் ரவியை கண்டித்து இடதுசாரிகள் பொது மேடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். உலகத்தமிழர் பேரமைப்பின் …துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் ந.பாலசுப்பிரமணியன்,மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்,மாவட்ட செயலாளர் தேவா, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் எம்.தமிழ்முதல்வன், விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளர் கோ.ஜெய்சங்கர், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகர பொறுப்பாளர் சாம்பான்,தமிழ் தேச மக்கள் முன்னணி நிர்வாகி ஆலம்கான், தமிழ் தேசிய முன்னேற்றக் கழகத்தின் மாநில இணை செயலாளர் குணசேகரன், வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட நிர்வாகி மை.விக்டர் ,பேராசிரியர் முத்தமிழ்,உள்ளிட்டோர் பங்கேற்றனர் ஆர்ப்பாட்டத்தில் தாய்மொழி தமிழை, பண்பாடு, கலாச்சாரத்தை அவமதிக்கின்ற, தமிழ்நாட்டின் உரிமைகளை புறக்கணிக்கின்ற, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்ற ஆளுநர் ஆர்என்.ரவி தஞ்சாவூரை விட்டு திரும்பி போக வேண்டும், தமிழ்நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.