“சித்தர்கள் யார் ,எப்படிப்பட்டவர் ?” ” சித்தர் ஒரு பார்வை,
சித்திகள் எனப்படும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்கள் சித்தர்கள்* எனப்படுவர். அட்ட மா சித்தி உட்பட எண்ணற்ற சித்திகளை அருளிச் செய்கின்ற ஈசனது திருக் காட்சி கண்டு மும்மலம் நீங்கிச் சிவமான சீவன் முக்தர்களே சித்தர்கள், எல்லாம் கடந்த *ஒரே கடவுளான சிவ பரம்பொருளைத் தவிர* வேறு யாரையும் *பிறப்பு உள்ள உயிரினங்களான அரி அயன் அம்மன் உள்ளிட்ட யாரையும் வழிபடாதவர்களே சித்தர்கள்* என்பதை
“செகத்தில் திரிமலம் செத்தார் சிவமாகியே சித்தர் தாமே”என
சித்தர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்று திருமூலர் காட்டுகிறார். சீவன் முக்தி பெற்றவர்களே சித்தி பெற்ற சித்தர்கள், வேறு யாராலும் சித்தி பெற்ற சித்தராக முடியாது என்பதை,
“யாதேனும் ஒரு சித்தி பெற ஜீவன் முக்தி ஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே”
என்று தாயுமானவர் தெரிவிக்கிறார். “விருப்பு வெறுப்பு இல்லாத இரு வினை யொப்பு, மலபரி பாகம் எனப்படும் பக்குவ நிலை அடைந்த ஜீவன் முக்தர்களே” சித்தர்கள் என்பதை வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்,என்று இராமலிங்க அடிகளும் கூறுகின்றார்.
“சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்”
நாம் ஒழிந்து சிவமானவா, (திருவாசகம்) நானும் அழிந்தமை நான் அறியேனே, கடவுளும் நானும் ஒன்றானேன், (திருமந்திரம்)
என்று மாணிக்க வாசகப் பெருமானும் திருமூலரும் சிவமான சீவன் முக்தி அனுபவத்தைப் பாடுகின்றனர். தான் ஒழிந்து சிவமான சீவன் முக்தர்களின் சித்தர்களின் பெருமையை, தெய்வீக ஆற்றலை,
“தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்,
என்று திருவள்ளுவ நாயனார் போற்றுகிறார். முனிவர்கள் தொண்டர்கள் போன்று ‘சித்திகள் பெற்ற சித்தர்களும் எண்ணற்றவர்கள்,
“திண் திறல்சித்தர்களே” (திருவாசகம்)
பல பத்தர் சித்தர்க்குப், பாண்டு நல்கினீர் (சுந்தரர்)
“பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்” (சம்பந்தர்)
என்று திருவாசகமும் தேவாரமும் பலப் பல சித்தர்களைப் போற்றுகின்றன. நின்றாலும் இருந்தாலும், எழுந்தாலும் கிடந்தாலும் உறங்கினாலும், விழித்திருந்தாலும், உண்டாலும், பசித்திருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் எதைச் செய்தாலும் சதா சர்வ காலமும் சித்தமெல்லாம் சிவ நினைவில் திளைத்திருந்து,சிவ பரம்பொருளைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத, சீவன் முக்தர்களாகிய சித்தர்களை,
“சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்” (சுந்தரர்)
“பொது நீக்கித் தனை நினைய வல்லார்,வேறு சிந்தையிலாதார், (அப்பர்) என்று தேவாரம் போற்றுகிறது. சிவனே என்று இருப்பான் (சிவ சிவ என்றே சொல்லிக் கொண்டு இருப்பான்), சித்தம் போக்கு சிவம் போக்கு என்பவை எப்போதும் சிவ சிவ என்றே சொல்லிக் கொண்டு சித்தம் சிவமாய் இருக்கும் சித்தர்களைப் பற்றிய வழக்குகள். இவ்வாறு சித்தர்களைப் பற்றி தெய்வீக அருளாளர்களும் இலக்கியங்களும் தெளிவாகக் கூறியுள்ள போது கடவுள் மா முனிவர், பரஞ்சோதி முனிவர் என, “முனிவர் என்று பெயர் கொண்ட புலவர்களைப் போல்” குதம்பைச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் எனச்”சித்தர் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களை யெல்லாம்,தற்காலத்தவர்கள் சித்தர் என்கின்றனர். சித்தர்கள் பதினெட்டு பேர் என்றும், சித்தர் பாடல்கள் என்றும் பொய்ப் பட்டியல் கொடுத்துக் கற்பனைச் சித்தர்களைப் படைத்துள்ளனர். மனம் போனபடி யாரை வேண்டுமானாலும் சித்தர் என்கின்றனர். மூலிகை வைத்தியம் எனப்படும் சித்த வைத்தியம் செய்யும் மருத்துவர்களையும் சித்த வைத்திய நூல்களை மருத்துவ நூல்களை எழுதியவர்களையும் சித்தர்கள் என்கின்றனர். இது மட்டுமன்றி கற்பனைக் கதை எழுதும் எழுத்தாளர் எழுத்துச் சித்தராம். பாட்டுச் சித்தர் என்று ஒருத்தராம். திருவாசகச் சித்தராம். இப்படியே போனால் அலைபேசிச் சித்தர் தொலைக்காட்சிச் சித்தர் என்று கூட இருப்பார்கள். இப்படி சித்தர் யார் என்று தெரிந்து கொள்ளாமல் அவரும் சித்தர் இவரும் சித்தர் நானும் சித்தர் நீயும் சித்தர் என்று கூறிச் சித்தர்களை இழிவு படுத்துகின்றனர்.
அவயோகம் சாராது அவன் பதி போக நவ யோக நந்தி நமக்கு அளித்தானே” (திருமூலர்) என மரணமும் மீண்டும் பிறப்பும் இல்லாத “ஜீவன் முக்தர்களாகிய சித்தர்களுக்கு சமாதி இருக்க முடியாது, உயிர் பிரிந்து சிவ லோகம் செல்லும் போது உடல் மறைந்து விடும்”என்பது தெரியாமல் அது சித்தர் சமாதி இது சித்தர் சீவ சமாதி என்றெல்லாம் கூறிப்,பாமர மக்களைப் பைத்தியமாக்கிச் சித்தர்களை இழிவு படுத்துகின்றனர், சிவசிவ ஓம் நமச்சிவாய