குரூப் 2 முதன்மை தேர்வு பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை : குரூப் 2 முதன்மை தேர்வு காலையில் தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 5,446 பதவிகளுக்கு சுமார் 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் பொறுத்தவரை சுமார் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் சில தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்வர்களின் பதிவெண் வரிசை, வினாத்தாள் பதிவெண் வரிசையில் வேறுபாடு காரணமாக காலையில் 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு காலதாமதமானது. பின்னர் குளறுபடி சரி செய்யப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலையில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் தேர்வு நேரத்தை மாற்றி அமைத்தது டிஎன்பிஎஸ்சி.பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.