குரு பகவான் கொடுக்கும் பலன்கள் என்ன?
குரு ஒன்பது கிரகங்களில் மகாசுபர் என்று அழைக்கப்படுகிறவர், தன்னுடைய பார்வை பலத்தால் அனைத்து தோஷத்தையும் போக்கக்கூடிய வல்லமை படைத்தவர், தான் இருக்கும் இடத்தை அதாவது வீட்டை புனிதப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான கிரகம். நீச்சமானாலும் தன்னுடைய காரகத்துவங்களான தனம் மற்றும் புத்திர பாக்கியத்தை வஞ்சனை இல்லாமல் கொடுக்கக்கூடியவர் குரு (மற்ற ஆதிபத்திய பாவகங்களையும் பொறுத்து). ஜோதிடத்தில் மிக முக்கியமாக கருதப்படும் செவ்வாய் தோஷம், ராகு தோஷம், ஆயுள் குற்றம் இன்னும் இதுபோல் சில தோஷங்களுக்கும் இவருடைய ஒரு பார்வை விதிவிலக்காக இருக்கிறது.
இப்படிப்பட்ட குரு யோகத்தை மட்டும் தான் தருவாரா? தீய பலனை தர மாட்டாரா? குரு நல்லவர், அதிசுபர் என்பது பொது விதி. அதுபோல் சனி கெட்டவர், தீய பலனை தருவார் என்பதும் பொது விதி.
எப்பொழுதுமே தீமைகளை தரும் சனி பகவான் நற்பலனை எப்படிப்பட்ட நிலைமைகளில் தருகிறாரோ அது போல் எப்பொழுதுமே நன்மையைத் தரும் குரு தீமையையும் தருவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ஜோதிடத்தில் எல்லா கிரகமும் நல்லவற்றை மட்டுமே செய்வதற்காக விதிக்கப்பட்டது இல்லை மற்றும் எல்லா கிரகமும் தீமையை மட்டுமே செய்வதற்காக விதிக்கப்பட்டது இல்லை. மனிதர்களின் ஜாதகங்களில் இந்த கிரகங்கள் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறது என்பதை வைத்து இவர் நல்லதை செய்வார், இவர் கெட்டதை செய்வார் என்பதை கணிக்க வேண்டும்.
சுக்கிரன் அணியை சேர்ந்த கிரகங்களுக்கு குறிப்பாக சுக்கிரனின் ரிஷப மற்றும் துலாம் லக்னங்களுக்கு குரு நற்பலனை எப்பொழுதுமே தருவதில்லை, கைகள் கட்டப்பட்ட நிலைமையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமே தருவார். ஏனென்றால் ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு அவரே 8 அல்லது 6ம் அதிபதியாக வருவார். இவர் எந்த இடத்தில் இந்த இரு லக்னங்களுக்கு இருந்தாலும், தன்னுடைய தன காரகத்துவம் மூலமாக பிரச்சனைகளை அதிகப்படுத்தவே நினைப்பார். அதாவது கடன் வாங்கி தர முடியாமல் ஊரை விட்டு போகும் நிலைமை அல்லது வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை அல்லது கடன் வாங்கி மிக மன அழுத்தத்துடன் இருக்கக்கூடிய நிலைமை உள்ளவர்கள் பெரும்பாலானோர் ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்தினர் ஆவார்கள். இது குருவின் சுபத்துவ, பாவத்துவ விதிக்கேற்ப அமையும் கூடும் குறையும் அல்லது மாறும்.
ரிஷப லக்னத்திற்கு குரு மூலத் திரிகோணம் பெற்று, பாதகாதிபதி உச்சமாகி குருவை பார்க்கும் பொழுது.. அதாவது ரிஷப லக்னத்திற்கு குரு 8ல் ஆட்சி பெற்று, ராஜ யோகாதிபதி சனி 6ல் உச்சம் பெற்று 3ம் பார்வையாக குருவை பார்க்க.. கடன் பிரச்சனையால் குரு தசையில் அவதிப்பட்டோர் ஏராளம்.. இங்கே தர்மகர்மாதிபதி மற்றும் ராஜ யோகாதிபதியின் பார்வை கெடுக்காது என்பது சரியாக வராது. லக்னாதிபதி சுக்கிரனின் வலுவிற்கு ஏற்ப குரு தரும் பண பிரச்சனையை தாங்கும் சக்தி இருக்கும்.
குரு 8ல் சுபத்துவமாக எவர் பார்வையும் இல்லாமல் இருக்கும் பொழுது குருதசை அத்தகைய தீய பலனை தருவது இல்லை, இருந்தாலும் கடன் இருக்கும்!!! அது லக்னாதிபதியின் வலுவிற்கேற்ப 6, 10-ஆம் இடத்திற்கேற்ப வளர்ச்சிக்கான கடனாக அமையும்…
இதே நிலைமைதான் துலாம் லக்னத்திற்கு 6ம் அதிபதியான குரு 10ம் இடத்தில் உச்சமாகி, ராஜ யோகாதிபதி சனி 4ம் இடத்தில் ஆட்சி பெற்று 7ம் பார்வையால் மிக நெருக்கமாக குருவை பார்த்து, லக்னத்தையும் பார்த்து, 6ம் இடத்தையும் பார்க்க.. குரு தசை தொடங்கியவுடன் தொழிலுக்காக கடன் வாங்கி பின்பு தொழில் நஷ்டம் அடைந்து கடனை கட்ட முடியாமல் போனவர்களை பார்க்கலாம். பின்பு வரும் சனியின் தசையில் நன்மை ஏற்படும்..
கடக, சிம்ம லக்னத்திற்கும் இவர் 6 மற்றும் 8ம் அதிபதியாக வருவார், இருந்தாலும் இவர் லக்னாதிபதிக்கு நண்பர் என்பதால் சற்று பொறுமையுடன் செயல்படுவார். ஆனால் இங்கே சனியின் பார்வை குரு பெற்றால், சனி லக்ன அவயோகர் என்பதால் மிகக் கொடூரமாக பலனை குரு தன் தசையில் தன்னுடைய ஆதிபத்திய தன காரகத்துவங்கள் வழியாக தருவார்..