உலகக்கோப்பை கால்பந்து: முதல் ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது அர்ஜென்டினா
கால்பந்து உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் அதிக எதிர்பார்ப்புடன் அர்ஜெண்டினா அணி, சவுதி அரேபியாவை எதிர்கொண்டிருந்தது. சந்தேகமேயின்றி இந்தப் போட்டியை அர்ஜெண்டினாதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேட்சுக்கு முன்பான பில்டப்கள் அத்தனையிலுமே மெஸ்ஸி புகழ் மட்டுமே பாடப்பட்டிருந்தது. ஆனால், அங்கே களத்தில் நடந்தது வேறு. அர்ஜெண்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியை சவுதி அரேபியா அளித்திருக்கிறது. 2-1 என அர்ஜெண்டினா தோற்றிருக்கிறது.
மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால் பயங்கர எதிர்பார்ப்புடனே இந்தப் போட்டி தொடங்கியிருந்தது. இந்தப் போட்டியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். முதல் பாதியில் அர்ஜெண்டினா நன்றாகவே ஆடியிருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளோடு களமிறங்கிய மெஸ்ஸி 10வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்துக் கொடுத்தார்.
பெனால்டி மூலம் வந்திருந்தாலும் ஒரு அற்புதமான கோலாகவே இருந்தது. மெஸ்ஸியே கோல் அடித்துத் தொடங்கி வைத்ததால் ஒரு பாசிட்டிவிட்டியும் அர்ஜெண்டினாவைச் சூழ்ந்துகொண்டது.
இதன்பிறகு, இந்த முதல் பாதியில் மட்டுமே மேலும் 3 கோல்களை அர்ஜெண்டினா அடித்திருந்தது. இந்த 3 கோல்களும் எந்தச் சச்சரவும் இன்றி வழங்கப்பட்டிருந்தால் அர்ஜெண்டினா தோல்வியே அடைந்திருக்காது. ஆனால், மூன்று கோல்களுக்குமே ஆஃப் சைடு வழங்கப்பட்டு கோல்களும் ரத்து செய்யப்பட்டன. கை மட்டும் லைனைத் தாண்டியிருக்க நூலிழையில் ஆஃப் சைடு வாங்கி அர்ஜெண்டினா சொதப்பியது. லாட்டரோ மார்ட்டினஷ் அடித்த 2 கோல்களும் மெஸ்ஸி அடித்த ஒரு கோலும் இந்த வகையிலேயே வீணாகின. ஆயினும், முதல் பாதி முடிவடைகையில் அர்ஜெண்டினாவே 1-0 என ஆதிக்கமாக இருந்தது.
இரண்டாம் பாதியில்தான் ஆட்டத்தில் ட்விஸ்ட்டே அரங்கேறியிருந்தது. இதுவரை இல்லாத துடிப்பை சவுதி அரேபியா களத்தில் வெளிக்காட்டத் தொடங்கியது
ஒரு 6 நிமிடத்திற்குள் இந்த ஆண்டின் மிகப்பெரிய அப்செட்டை சவுதி அரேபியா நிகழ்த்திக் காட்டியது. 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா டிஃபண்டர்களில் சிறப்பான தடுப்புகளையெல்லாம் கடந்து அல்சேரி கச்சிதமாக ஒரு கோலை அடித்துக் கொடுத்தார். இந்த Equaliser-ஐ அர்ஜெண்டினா ஜீரணிப்பதற்குள்ளேயே 53வது நிமிடத்தில் அல்தாவ்சரி இன்னொரு கோலை போட்டு அதிர்ச்சியளித்தார்.
ஒரு 6 நிமிடத்திற்குள் இந்த ஆண்டின் மிகப்பெரிய அப்செட்டை சவுதி அரேபியா நிகழ்த்திக் காட்டியது. 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா டிஃபண்டர்களில் சிறப்பான தடுப்புகளையெல்லாம் கடந்து அல்சேரி கச்சிதமாக ஒரு கோலை அடித்துக் கொடுத்தார். இந்த Equaliser-ஐ அர்ஜெண்டினா ஜீரணிப்பதற்குள்ளேயே 53வது நிமிடத்தில் அல்தாவ்சரி இன்னொரு கோலை போட்டு அதிர்ச்சியளித்தார்.
பாக்ஸுக்குள் மட்டும் சவுதி 3 ஷாட்களை அடித்து அதில் இரண்டை கோலாக்கியிருந்தது. அர்ஜெண்டினாவோ 14 ஷாட்களை அடித்து ஒரே ஒரு ஷாட்டை மட்டுமே கோலாக்கியிருந்தது. சிலவற்றை ஆஃப் சைட் ஆக்கியிருந்தது. டிஃபன்ஸிலும் அர்ஜெண்டினாவைவிட சவுதி அதிகமான ஷாட்களை சேவ் செய்து க்ளியர் செய்திருந்தது.
இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக அர்ஜெண்டினா 36 போட்டிகளில் தோல்வியையே தழுவாமல் இருந்தது. கடைசியாக 2019-ல் கோபா அமெரிக்கத் தொடரில் பிரேசிலுக்கு எதிராகத் தோற்றிருந்தார்கள். அதன்பிறகு, இங்கே சவுதி அரேபியாவிற்கு எதிராகத்தான் தோல்வி. உலகத் தரவரிசையில் சவுதி அரேபியா 51வது இடத்தில் இருக்கிறது. அர்ஜெண்டினா 3வது இடத்தில் இருக்கிறது. இதிலிருந்தே இது எத்தனை பெரிய அப்செட் என்பதை உணர முடியும். அர்ஜெண்டினா இருக்கும் இதே குரூப்பில்தான் போலந்து, மெக்சிகோ போன்ற அணிகளும் இருக்கின்றன. போலந்தும் மெக்சிகோவும் சவுதியைவிட வலுவான அணிகள். ஆக, அர்ஜெண்டினாவிற்கு இந்த உலகக்கோப்பை இனி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை!