அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி உள்பட 8 பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டது மற்றும் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, மற்றும் ஆசிரமத்தில் பலர் மாயமான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த 10ம் தேதி ஆசிரமத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம மேலாளர் பிஜி மோகன், பணியாளர்கள் ஐயப்பன், கோபிநாத், முத்துமாரி உள்ளிட்ட 8 பேர் மீது 13 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கெடார் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த வழக்கு தொடர்ந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து ரத்த கறைகள் படிந்த பாய்கள், இரண்டு பாஸ்போர்ட்டுகள், முக்கிய ஆதாரங்கள் என பல ஆதாரங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜுபின் ஆகிய உள்ளிட்ட எட்டு பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பாராணி முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்றைய தினம் உள்ளூர் விடுமுறை என்பதால், அந்த மனு மீதான விசாரணை இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 7 பேர் வேடம்பட்டு மாவட்ட சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வரப்பட்டனர். அதேபோல் ஜூபின்பேபியின் மனைவி மரியா கடலூர் மத்திய சிறையில் இருந்து பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
இவர்கள் 8 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது 8 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்தார். மேலும் காவல் விசாரணை முடிந்து வருகிற செவ்வாய்க்கிழமை (28ம்தேதி) விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எட்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.