பெண் எனும் பேராற்றல்! – சீமான் மகளிர் தின வாழ்த்து!
‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிக விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித்தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணியப் பாரதி. ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என்று பெண்ணிய விடுதலைக்காகச் சங்கநாதம் எழுப்புகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். ‘அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும்’ என அறச்சீற்றம் கொள்கிறார் ஐயா பெரியார். ‘பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!’ என்று பாலினச் சமத்துவத்தைப் பாக்களின் வழியே போதிக்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார். ‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் இவ்வுலகுக்குப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். இவ்வாறு பெண்களைப் போற்றிக்கொண்டாடுவதே தமிழர்களின் அறம் வகுத்துத் தந்த உயர்நெறியென அதனை அடியொற்றித் தழுவினார்கள் நமது முன்னவர்களும், மூத்தோர்களும்.
தாய்வழிச்சமூகமாக விளங்கி வந்த தமிழ்ச்சமூகத்தில் ஆதிகாலந்தொட்டே பெண்களுக்கு முன்னுரிமையும், முதன்மைத்துவமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது; தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். அதற்குப் பல்வேறு இலக்கியச்சான்றுகளையும், வரலாற்றுத்தரவுகளையும் எடுத்துரைக்கலாம். இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப்படையெடுப்புகளினாலு ம், ஆரிய இனக்கலப்புகளினாலுமே பெண்களுக்குரிய தலைமைத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு, பெண்ணடிமைத்தனம் வேரூன்றப்பட்டிருக்கிறது என்பதை வரலாறு பகர்கிறது. ஆகவே, அத்தகைய அடிமைத்தனத்திற்கும், உரிமைப்பறிப்புகளுக்கும் எதிராகப் போராடி அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர வேண்டியது ஒவ்வொருவரது தார்மீகக்கடமையாகும்.
பெண்களுக்கான உரிமையைப் பேசும் அதே நேரத்தில், அவர்களுக்கான நடமாடும் உரிமையே கேள்விக்குறியாகும் விதத்தில் நாள்தோறும் நடந்தேறும் பாலியல் வன்முறைகள் பெருங்கவலையைத் தருகின்றன. அதில் பெண் குழந்தைகளும் பலியாவது சகிக்கவே முடியாதப் பெருங்கொடுமையாகும். பெண்களை நதியாகவும், தெய்வமாகவும் உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கெதிராக நடைபெறும் இத்தொடர் தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான தலைகுனிவு என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. ஆணாதிக்க வன்முறையும், பாலியல் குற்றங்களும் விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு வர்க்கப்பெண்கள் மீதுதான் அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இவ்வகைத் தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தப்பெண் சமூகத்தின் மீது ஏவப்படுபவையே என்பதை எவரும் மறுக்க முடியாது.
பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத்தில் பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழப்பெருநிலத்தில் முழுமையாக சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர்தம் பிள்ளைகள் அதனைத் தாயகத்தமிழகத்தில் செயற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு எல்லாத்தளங்களிலும் பணியாற்ற வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.
அடிப்படையில், பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றி, பொதுப்புத்தியைக் கட்டுடைக்கக் கல்வி முறை, திரைப்படங்கள், ஊடகங்கள், அதிகார அடுக்குகள் என யாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்குச் சரிநிகராக பெண்களுக்கு 50 விழுக்காட்டு இடஒதுக்கீட்டினைப் பெற்றுத்தர வேண்டும். கணவனை இழந்து நிற்கும் இளம்பெண்கள் விரும்பும்பட்சத்தில் அவர்களுக்கு மறுமணம் செய்துவைக்க உதவிபுரிய வேண்டும். அலுவலங்களில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பணியில் இணைந்துகொள்ள நேரநீட்டிப்பு செய்ய வேண்டும். பெண்களுக்கென அதிகப்படியானப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பெண்களுக்கென தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கென தனிப்படை அமைத்து அவர்களின் பாதுப்பான வாழ்க்கையினை உறுதி செய்ய வேண்டும். அரியணையில் ஏறுவதற்கு முன்பே இந்தியத்தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பாக பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்றத்தேர்தலிலும் சரிநிகராக வேட்பாளர்களைக் களமிறக்கிய நாம் தமிழர் கட்சி, இவையாவற்றையும் பெண்களின் நலவாழ்வுக்கென செய்திட உறுதிபூண்டு, அவற்றை ஆட்சியதிகாரத்தில் ஏறும்போது செய்வோமென சூளுரைக்கிறது.
பெண்களைப் போற்றிடும் இத்திருநாளில் பெண்களை அதிகாரப்படுத்துவதே அவர்களது அடிமைத்தளை உடைக்க இருக்கும் முதன்மை வாய்ப்பென்பதை உணர்ந்து, பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன்.
உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் இங்வாறு
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்,