சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பது ஏன்? அன்புமணி கேள்வி!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சமூக நீதிக்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் 7¾ கோடி மக்கள் உள்ளனர். அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்காக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவில் இட ஒதுக்கீடு என்றால் சாதியின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பிற்கு பிறகு 120 ஆண்டுகளாகியும் தமிழ்நாட்டில் அதே நிலைமை தான் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகிய 3 பிரிவினரும் சேர்ந்து 27 சதவீத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். மேடைக்கு மேடை சமூக நீதி வேண்டும் என வசனம் பேசினால் மட்டும் போதாது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். நாங்கள் தேர்தலுக்காக, அரசியலுக்காக இந்த கருத்தரங்கை நடத்தவில்லை. சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக ஒன்று கூடி உள்ளோம். சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்தால் போதும் மற்றவர்களிடம் நாம் கெஞ்ச வேண்டாம். நம்மிடம் கையெழுத்து போடும் அதிகாரம் கிடைத்தால் போதும், சமூக நீதி நிலைநாட்டப்படும். தமிழ்நாட்டில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சாதியினரும் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிவதற்காக தான் இந்த சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த சொல்கிறோம். இதை கேட்டால் நாங்கள் சாதி அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். நாங்கள் சாதி அரசியல் செய்யவில்லை. சமூக நீதி அரசியல் தான் செய்கிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி டாக்டர் ராமதாஸ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார். சமூக நீதி ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்ளும் தி.மு.க. ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. தமிழ்நாட்டில் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.