கேரளாவில், வெஸ்ட் நைல் காய்ச்சல்
கோவை : கேரளாவில், வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நோய்கள் ஏற்படலாம். மனிதர்களுக்கு இத்தொற்று பெரும்பாலும், கொசு கடிப்பதால் ஏற்படுகிறது.கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சலால் 47 வயது நபர் உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. தமிழகத்தில், கேரள மாநிலத்துக்கு அருகில் எல்லையோர கிராமங்களில், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ மையங்கள் வாயிலாக, காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து கோவை வந்து, காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல்களை உடனடியாக வழங்க வேண்டும் என, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ”கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருவோர், இங்கு ஏதாவது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள். அனைத்து மருத்துவமனைகளும், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.