கோவையின் தாகம் தீர்த்த நீலகிரி!
கோவையின் தாகம் தீர்த்த நீலகிரி! 29 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நடக்கும் சம்பவம்! மக்கள் நெகிழ்ச்சி
நீலகிரி: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் நிலையில் கொங்கு மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நீலகிரியின் அப்பர் பவானியிலிருந்து பில்லூர் அணைக்கு நீர் திறக்கப்பட்டிருக்கிறது. 29 ஆண்டுகள் வரலாற்றில் நீலகிரியிலிருந்து கோவைக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.தமிழகத்தை பொறுத்த அளவில் வழக்கமாக ஏப்ரல் தொடக்கத்தில்தான் வெயில் தீவிரமடையும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சூடேறிய வெயில் மார்ச் மாதத்தில் சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் பதிவாக தொடங்கியது. அதேபோல ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெயில் பதிவாகியது.குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வெயில் பதிவாகியிருந்தது. ஏப்ரல் 28ம் தேதியன்று 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. அதேபோல கொங்கு மாவட்டங்களிலும் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே அதிக அளவு வெயில் பதிவாகி வருகிறது. எனவே ஈரோடு மட்டுமல்லாது கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு எழுந்திருக்கிறது. எனவே மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மக்கள் கூறுகையில், “எங்களுக்கு இங்கே கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம். குடிநீர் குழாய்களில் நீர் விநியோகிக்கப்படுவதில்லை என்பதால், லாரிகளில் சிலர் தண்ணீரை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. தினமும் காசு கொடுத்து எங்களால் தண்ணீரை வாங்க முடியாது.பொது குழாயில் தண்ணீர் விநியோகம் செய்வதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். முன்பு 10 ரூபாய்கு விற்றுக்கொண்டிருந்த அரை லிட்டர் வாட்டர் பாட்டில் இப்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு நீர் தேக்க தொட்டியை கட்ட தொடங்கினார்கள். ஆனால் இப்போது வரை அதை பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை.
எங்களுக்கு ஒரு நாள் கூலியே ரூ.250தான். ஆனால், 20 லிட்டர் தண்ணீர் கேன் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இருந்தால் எங்களால் சமாளிக்க முடியாது” என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோவை மாநகராட்சியின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிறுவாணி மற்றும் பில்லூர் அணை இருக்கிறது. இந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. எனவே, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பில்லூர் அணையிலிருந்து நீர் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சிறுவாணி அணைகளிலிருந்து ஓரளவுதான் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
குடிநீர்தட்டுப்பாட்டை சரி செய்ய அப்பர் பவானியிலிருந்து கேரளா வழியாக தண்ணீர் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து அப்பர் பவானியிலிருந்து பில்லூர் அணைக்கு தண்ணீரை கொண்டுவரும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக அப்பர் பவானியிலிருந்து 200 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் பில்லூர் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றப்பட்டு அத்திக்கடவு வழியே பில்லூருக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. ஜூன் 15ம் தேதி வரை அப்பர் பவானியிலிருந்து பில்லூருக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும்,29 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்திலிருந்து கோவைக்கு நீர் விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.