ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி!
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 12-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரருடன் வந்தடைந்தார். பரமபதவாசல் திறப்பு நேற்று இரவு 8 மணியுடன் நிறைவு பெற்றது. காலை 10.30 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை கண்டருளுளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.