சமயபுரத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அம்மனை தரிசனம் செய்ய அதிகளவில் வரும்பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி, செயின் பறிப்புபோன்ற சமூகவிரோத செயல்கள் நடக்காத வண்ணம் சமயபுரம் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் அறிவுரையின்படி, சிறப்புசப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சமயபுரம் கடைவீதியில் சுற்றித்திரிந்த ஒருசிறுவனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அந்த சிறுவன் புதுக்கோட்டை காந்திநகர் 5-வது தெருவை சேர்ந்த பெயிண்டர் வேலை பார்க்கும் கதிரேசன் என்பவர் மகன்தினேஷ் (வயது 19) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர். தொடர்ந்து அச்சிறுவனை அவனது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். காணாமல் போன மகன் கிடைத்த மகிழ்ச்சியில் போலீசாருக்கு நன்றி தெரிவித்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.