கோயில்களில் மாங்கல்யம் சூட்டிக் கொள்வதால் உண்டாகும் பயன்கள்
“கோயிலில்,திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது.
ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.
மேலும், கோயிலில்/வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
கடந்த வருடம் என்நண்பனிடம் வந்த ஒரு பெற்றோர், தங்கள் மகளின் திருமணத்திற்காக நீங்கள் ஏற்கனவே குறித்துத் தந்த தேதியில் மண்டபம் கிடைக்கவில்லை என்று கூறினர். அதனால் என்ன திருமணத்தை கோயிலில் வைத்துக் கொள்ளுங்கள், வரவேற்பு நிகழ்ச்சியை உங்கள் அந்தஸ்திற்கு ஏற்ற வகையில் ஏதாவதொரு நட்சத்திர விடுதியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றான்.
அதற்கு அந்தப் பெற்றொர் முதலில் மறுப்பு தெரிவித்தனர். எனது மகளுக்கு கோயிலில் திருமணம் செய்யும் அளவுக்கு என்ன வசதி இல்லாமல் போய்விட்டது என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினர்.
அவர்களை சாந்தப்படுத்தி விட்டு பேசிய நண்பன், கோயிலில் திருமணம் வைத்துக் கொள்வதால் உங்கள் கௌரவம் ஒன்றும் குறைந்துவிடாது. உங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றேன். மேலும் அந்தத் தேதியும் திருமணத்திற்கு சாதகமாக உள்ளதை மீண்டும் நினைவுறுத்தினான்.
இதன் காரணமாக மனமாற்றம் அடைந்த பெற்றோர், மகளின் திருமணத்தை நிர்ணயித்த தேதியில் கோயிலில் வைத்து நடத்தினர். இன்று அத்தம்பதியர் ஈருடல் ஓர் உயிர் என்ற வாக்கிற்கு ஏற்ப மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே கேள்விக்குறியாக இருக்கும். அதையும் தாண்டி வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டால், அவர்கள் எத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்வார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கும். எனவே, அதுபோன்ற ஜாதக அமைப்பை உடையவர்கள், கடுமையான தோஷங்கள் உடையவர்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் ஜாதகதாரர்கள் கோயிலில் திருமணம் செய்து கொள்வது நல்லது.
கோயில்களில் மாங்கல்யம் சூட்டிக் கொள்வதால் சில பயன்களும் உண்டு. கோயிலில் தாலி கட்டிக் கொண்ட தம்பதிகள், முதலில் அக்கோயிலில் உள்ள மூலவரிடம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் கிடைக்கிறது. இது மிகப்பெரிய நல்ல நிகழ்வு. தனியார் மண்டபங்களில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது.
எனவே, கோயில்களில் மாங்கல்யம் சூட்டிக்கொள்வதே மிகச் சிறந்தது.