தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தா.பழூர், மே.20-
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மாத கார்த்திகை யை முன்னிட்டு வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தார்.வில்லேந்தி வேலவருக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. வள்ளி, தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது. இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தர நாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலிலும், கோடாலி கருப்பூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் உள்பட தா.பழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.