சனிப்பெயர்ச்சி விழா; திருநள்ளாறு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் கடந்த 1 டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை இரவு முதலே திருநள்ளாறு கோயிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் கூடத்திலும், பிற தனியார் விடுதிகளிலும் தங்கினர். சனிக்கிழமை அதிகாலையில் கோயில் திறக்கப்படும் முன்னரே ராஜகோபுரம் எதிரே உள்ள சன்னிதி தெருவிலும், தெற்குத் தெருவிலும் திரளான பக்தர்கள் காத்திருந்தனர். பெரும்பான்மை பக்தர்கள் நளன் தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். போலீசார், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் பக்தர்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டுடனர். எனினும் பக்தர்கள் தரிசனத்துக்கு சில மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. பக்தர்கள் வருகை அதிகமான தால், திருநள்ளாறு நகரப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.