ரெட் அலர்ட்! 7 மாவட்டங்களில் மிக மிக கனமழை வெளுத்தெடுக்கப் போகுது.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கு மத்தியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை தொடர்கிறது. தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக நேற்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்நிலையில், தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த 7 மாவட்டங்களில் இன்று 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்: அதேபோல, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும் மழை: நாளை (மே 17) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.