“ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீந்திக் கடப்பேன்” என நண்பர்களிடம் சவால் கல்குவாரி குட்டையில் மூழ்கி பெயிண்டர் பரிதாப பலி
குன்றத்தூர்: பல்லாவரம் அருகே நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றபோது, ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீந்திக் கடப்பேன் என்று சவால் விட்டுச்சென்ற பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.சென்னை கேகே நகர், சூளைப்பள்ளம், மொராஜ் தேசாய் தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி (35). இவர், அதே பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள தனது நண்பர்களை பார்க்க செல்வகணபதி சென்றிருந்தார். அங்கு, நண்பர்கள் அனைவரும் சந்தித்த பின்பு, ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, நண்பர்கள் அனைவரும் அதே பகுதியில் இருந்த கல்குவாரி குட்டையில் இறங்கி குளிக்க தொடங்கினர். அப்போது, நண்பர்கள் அனைவரும் கரையில் குளித்த நிலையில், செல்வகணபதி மட்டும் இக்கரையில் இருந்து அக்கரைக்கு எப்படி நீந்திச் செல்கிறேன் பாருங்கள் என்று நண்பர்களிடம் சவால் விட்டவாறு, ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்தத் தொடங்கினார். ஆனால், பாதி தூரம் சென்றதும் மேற்கொண்டு அவரால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை கண்ட அவரது நண்பர்கள், கரையிலிருந்து கூச்சலிட்டனர். இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி இறந்த நிலையில் செல்வகணபதி உடலை மீட்டனர். அதனை, சங்கர் நகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளித்த பெயிண்டர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் வந்தாலே இதுபோன்ற கல்குவாரி குட்டை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க இது போன்ற திறந்த நிலையில் உள்ள கல்குவாரி குட்டைகளை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைத்து, ஆபத்து குறித்த எச்சரிக்கை விளம்பர பதாகைகள் வைத்து, பெருகி வரும் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.