வருகிற 21-ம்தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு; சேலத்தில் நடக்கிறது!
தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி நடத்தப்பட இருந்தது. முன்னதாக இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அந்த பேரணி 234 தொகுதிகளுக்கு சென்று வந்தது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இந்த மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, பிரமாண்ட ஏற்பாடுகளுடன் மாநாட்டு பந்தல்கள் அமைப்பது உள்பட அனைத்து பணிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ‘மிக்ஜம்’புயலால் பெய்த மழையாலும், அதற்கு வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வந்ததாலும் மாநில மாநாடு கடந்த மாதம் 24-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 16, 17, 18-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் வெளுத்துவாங்கிய பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் முறை மாநாட்டை தள்ளிவைத்த போது, மற்றொரு நாளில் நடைபெறக்கூடிய தேதி அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.