ரூ.1,200 கோடியில் புதிய விமான முனையம்; திருச்சிக்கு வந்த மோடிக்கு முதல்வர் வரவேற்பு!
சென்னையை அடுத்து வளர்ந்துவரும் பெருநகரமாக திருச்சி திகழ்கிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் நாளுக்குநாள் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதனால் இந்த விமான நிலையத்தை ரூ.1,200 கோடியில் மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. இந்த புதிய விமான முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய விமான முனைய திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைத்து, ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர், கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை
வழங்கினார். பின்னர் அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இந்த விழாக்களில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய மந்திரிகள், தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பகல் 1.05 மணிக்கு பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணிக்காக 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.