“என் தலைவர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி”அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை
“என் தலைவர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி”அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் (’21 – ’22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் (’22 – ’23, ’23 – ’24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்ற போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பாகக் கருதுகிறேன்.
நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவை ஆகும்.
உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான #1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எனக்கு தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த திரு. மனோ தங்கராஜ் @manothangaraj அவர்களின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை திட்டமிட்டுள்ளேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகத்தின் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பயனளிக்கும்.
இன்று பொறுப்பேற்கும் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைத்தார் என்பது உறுதியாகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்