கரைவெட்டி பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதியாக அறிவிப்பு!
புயல், வெள்ளப்பெருக்கு. சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து நிலப்பகுதிகளைகாப்பதில் முக்கிய பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்ப தற்காக சர்வதேச அளவில் ராம்சார் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாநில, தேசிய அளவில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் செயல்படும் 14 பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலபகுதியாக அதாவது ராம்சார் தளங்களாக கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி லாங்வுட் சோழா வனப்பகுதி ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதிகளாக அறிவிக்க மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு தமிழக அரசு கோரியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் தமிழகத்தில் 16 பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள், வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதிகள் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.