ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆலயத்தின் முன்பாக நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 630 -க்கும் மேற்பட்ட காளைகளும், 125-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறி பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, குவளை, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும். காளையை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் பணப்பரிசு என 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்பட்டது என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட 300-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டில் விடப்பட்ட இடத்தில் ஒவ்வொரு காளைகளும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 25, 25 வீரர்களாக மாடு பிடிப்பதற்காக களம் இறக்கப்பட்டனர்.
வீரர்கள், பொதுமக்கள் காளைகளால் காயம் அடைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஜெயங்கொண்டம், சின்னவளையம், பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, ஆயுதகளம், புதுச்சாவடி, மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம், செந்துறை, இரும்புலிக்குறிச்சி, பரணம், ஆண்டிமடம், பெரிய கிருஷ்ணாபுரம், அழகாபுரம், திருக்களப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழப்பள்ளம் புனித செபஸ்தியார் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு விழாவில் மாடுபிடி வீரர்கள் 11 பேர் பார்வையாளர்கள் இரண்டு பேர் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் 12 பேர் என மொத்தம் 25 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் தஞ்சாவூர் மாவட்டம்அரசு மருத்துவமனை ரோடு மேல மனோஜ் பட்டியைச் சேர்ந்த மனோஜ் என்பவரது ஜல்லிக்கட்டு காளை வாடி வாசலில் இருந்து வெளியேறி வெற்றி பெற்று யாரிடமும் பிடிபடாமல் வெளியில் சென்று அதிக மூச்சிரைப்பு காரணமாக படுத்தது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.