8 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை மையம் ‘குளிர்’ அறிவிப்பு
சென்னை: இன்று (மே 14) தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழையும், கன்னியாகுமரியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில்: இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது