“126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு”: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
நீலகிரி: நீலகிரியில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய மே 18ம் தேதி பணி நாள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடைகாலம் சீசன் ஆகும். இந்த மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்கள் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா செல்வது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.கோடை சீசனை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறையின், சுற்றுலா துறையின் சார்பில் மே மாதம் முழுவதும் கோடைவிழா நடத்தி வருகின்றனர். இதில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழங்கள் கண்காட்சி, வாசனை திரவியம் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி ஆகியவை நடத்தப்படும்.இந்நிலையில், இந்தாண்டுகான கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகின்ற மே 10-ம் தேதி அன்று மலர் கண்காட்சி தொடங்கி பத்து நாட்கள் என மே 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறையின் சார்பில் துவங்கப்பட்டுள்ளது. மலர் காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரம் தொட்டிகள் மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்படவுள்ளது.மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்படவுள்ளன.இந்நிலையில் மலர் கண்காட்சியை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிந்து வருவார்கள். இதனால் அந்த மாவட்டமே திருவிழா போன்று காட்சியளிக்கும். இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய மே 18ம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளார்.