கட்சியின் இறுதி முடிவை என்னால் கூட சொல்ல முடியாது; ஜி.கே.வாசன்!
கோவை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 12-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கட்சி பணிகள், தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் வெளியிடப்படும். மற்ற கட்சிகளுக்காக நான் பேசுவதற்கு எந்த தேவையும், அதிகாரமும், அவசியமும் இல்லை. பா.ஜனதா கட்சியை பொருத்தவரை தேர்தல் மற்றும் கூட்டணி சம்பந்தமாக இந்தியா முழுவதும் பேசுவதற்கு பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். த.மா.கா.வின் தலைவர் என்ற முறையில் மற்ற கட்சி தலைவர்களை நட்பாக சந்தித்து நாட்டு நலன், மக்கள் நலன் குறித்து பேசுவதை வழக்கமாக வைத்து உள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சிகளுக்காவும் நான் யாரிடமும் பேசவில்லை. கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் என்னுடைய கட்சியின் இறுதி முடிவை என்னால் கூட சொல்ல முடியாது. செயற்குழு உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டுதான் முடிவுகளை கூற முடியும். பா.ஜனதா தலைவர்களை நாடாளுமன்றத்தில் பார்த்து பேசுவது வழக்கமான ஒன்று தான். அது புதிதல்ல. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜனதாவிடம் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள புதிய கட்சிக்கு வாழ்த்துகள். கட்சியை தொடங்குவதற்கு யார் வேண்டுமானாலும், எந்த துறையில் இருந்தும் வரலாம். அதற்கு ஜனநாயகத்தில் எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.