டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் என்ன?
புதுடெல்லி:டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கு மதுபான கொள்கை ஊழல் முதல் முதல்வர் இல்லத்தை ரூ.33 கோடியில் ஆடம்பர மாளிகையாக மாற்றியது வரை பல விஷயங்கள் காரணமாக கூறப்படுகின்றன.
டெல்லியில் கடந்த 2015 மற்றும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. ஆரம்பத்தில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் ஆம் ஆத்மி கட்சி அக்கறை செலுத்தியது. அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன, தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றில் மக்களுக்கு மானியம் அளிக்கப்பட்டன. இதனால் டெல்லி வாக்காளர்கள் மிகழ்ச்சியடைந்தனர்.
டெல்லியில் மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தி மதுவிற்பனையை தனியாரிடம் ஒப்படைத்த ஆம் ஆத்மி அரசு அதன் மூலம் அடைந்த ஆதாயத்தை கோவா தேர்தலில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஆம் ஆத்மி மறுத்தது. இந்த ஊழல் வழக்கில் சிக்கி டெல்லி துணை முதல்வராக இருந்து மணீஷ் சிசோடியா கைதாகி சிறை சென்றார். அதன்பின் இந்த வழக்கில் முதல்வராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கைதாகி சிறை சென்றார்.
மேலும் அர்விந்த் கேஜ்ரிவால் தான் குடியிருந்த அரசு இல்லத்தை பொதுப் பணித்துறை மூலம் ரூ.33.66 கோடிக்கு புதுப்பித்து ஆடம்பர மாளிகையாக மாற்றினார். இதை பாஜக படம் பிடித்து ராஜ் மஹாலில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆடம்பரம் வாழ்க்கை என பிரச்சாரம் செய்தது. டெல்லியில் முக்கிய பிரச்சினையாக காற்று மாசு உருவெடுத்தது. டெல்லி வளர்ச்சிக்கு பாஜக முட்டுக் கட்டை போடுவதாக ஆம் ஆத்மி தொடர்ந்து கூறிவந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் நொண்டிச் சாக்குகளாக வாக்காளர்கள் பார்த்தனர்.
ஆம் ஆத்மியின் எளிமை என்ற முத்திரை, மதுபான கொள்கை ஊழல், ராஜ்மஹால் சம்பவங்களால் மறைந்தது. வாக்காளர்களுக்கு இரட்டை இன்ஜின் வளர்ச்சி வாக்குறுதியை அளித்தது பாஜக. பெண்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது. பிப்ரவரி 8-ம் தேதி பாஜக வெற்றி பெறும். மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தில் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.2,500 உதவித் தொகை செலுத்தப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
மேலும் மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டதும், டெல்லி வாக்காளர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இது டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியை கைப்பற்ற வழிவகுத்தது.