இந்தியா டெல்லியை அதிகாலையில் குலுக்கிய மிதமான நிலநடுக்கம்-
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். டெல்லி புறநகர் பகுதிகளான நொய்டா, குர்கானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் உருவானது.
டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தன; சில பகுதிகளில் இந்த நிலநடுக்க அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதுவரை பாதிப்பு தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
டெல்லி நிலநடுக்கம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி தமது எக்ஸ் பக்கத்தில், அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்க அதிர்வுகளானது டெல்லியை சுற்றிய புறநகர் பகுதிகளான நொய்டா, குர்கானிலும் உணரப்பட்டது.
மேலும் டெல்லி போலீசார் தரப்பில் அவசர உதவிக்காக 112 என்ற எண்ணில் அழைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி நிலநடுக்கம் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் அமைதி காக்க வேண்டும். அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
More From