“அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தலைமை உரை”
ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூகநீதி, நம்மை எல்லாம் இணைத்துள்ளது,
மாநிலத்தின் முதலமைச்சர்கள் – அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் – மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – முன்னாள் நீதியரசர்கள் – மூத்த வழக்கறிஞர்கள் – இணைந்துள்ளோம்.
சமூகநீதியைக் காக்கும் கடமை, நமக்குத்தான் இருக்கிறது! அதனால்தான் இணைந்துள்ளோம்.
The struggle for attainment of Social Justice is not an issue of a single state. It is not an issue of a set of few states. It is an issue concerning all states, and it is associated with the structure of Indian Society. There might be differences in the degree of problems along caste and class lines in each state. But the core of the issue is the same. That is gross discrimination! Wherever there is discrimination – exclusion – untouchability – slavery – injustice, the medicine that can cure of these poisons is Social Justice. Like how the toxin of the snake is treated with anti-toxin prepared with the same snake toxin, people discriminated by caste are uplifted by the same caste. That is the social justice ideal of reservations!
(சமூகநீதியை அடையவேண்டும் என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒருசில மாநிலங்களின் பிரச்னையும் அல்ல. இது, இந்திய சமூக அமைப்புமுறைச் சார்ந்த அனைத்து மாநிலங்களின் பிரச்சினை!
ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி – வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்னை ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு! எங்கெல்லாம் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை – அடிமைத்தனம் – அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.
பாம்பின் விஷத்தை நீக்க விஷமுறிவாக அந்த விஷமே பயன்படுவதைப் போல, சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை உயர்த்த அந்தச் சாதியே பயன்படுகிறது.
அதுதான் இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதிக் கருத்தியல்!)
இந்தச் சமூகநீதிக் கருத்தியலும் யார் எந்த நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் வெற்றியும் பலனும் இருக்கும்.
சமூகரீதியாக – கல்விரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதி!
சமூகரீதியாகவும் – கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவில் ‘socially and educationally’ என்பதுதான் வரையரையாக உள்ளது. அதே சொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது.
அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை!
இந்தத் திருத்தத்துக்கு காரணமான மாநிலம் அன்றைய சென்னை மாகாணம்!
இந்தத் திருத்தத்துக்குக் காரணமான தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும்!
”சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது” என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம்!
இந்த திருத்தத்துக்குக் காரணம், ”happenings in madras தான்” என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு அவர்கள். அதனால்தான் சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
‘Socially and educationally’ என்பதில் economically என்பதை வஞ்சமாக சேர்த்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
Economically – அதாவது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்துவிட்டார்கள் பா.ஜ.க.வினர்.
பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல.
இன்று ஏழையாக இருப்பவர் – நாளை பணக்காரர் ஆகலாம்.
இன்று பணக்காரராக இருப்பர் – நாளையே ஏழை ஆகலாம்.
பணம் இருப்பதையே ஒருவர் மறைக்கலாம்.
எனவே இது சரியான அளவுகோல் அல்ல.
உயர்சாதி ஏழைகள் என்று சொல்லி இடஒதுக்கீடு தருகிறது பா.ஜ.க. அரசு. இது சமூகநீதி அல்ல.
ஏழைகளுக்காக எந்த பொருளாதார உதவியையும் செய்வதை நாங்கள் தடுக்கவில்லை.
அது பொருளாதார நீதியாகுமே தவிர – சமூகநீதியாகாது.
ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகளும் தானே இருக்க முடியும்? அதில் என்ன உயர்சாதி ஏழைகள்?
ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா?
அதனால்தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம்.
உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம்.
இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரைச் சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.
இதன் வன்மமான எண்ணத்துக்கு அதிகம் விளக்கம் சொல்லத் தேவையில்லை.
இடஒதுக்கீடு மூலமாக அனைத்து சமூக மக்களும் படித்துவிடுகிறார்கள் – வேலைக்கு போய்விடுகிறார்கள் என்ற வன்மம்தான் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று சொல்ல வைக்கிறது.
10 விழுக்காடு இடஒதுக்கீடு தருவதால் தகுதி போகாதா? திறமை போகாதா?
100 ஆண்டுகளுக்கு முன்னால் – 200 ஆண்டுகளுக்கு முன்னால் – உயர்சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற காலம் இருந்தது அல்லவா? அதனை உருவாக்க நினைக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும்.
சமூகநீதி என்ற பெயரால் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் செய்யப்பட்ட செயல்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இசுலாமியர்களுக்கான தனி இடஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களை உயர்சாதி ஏழைகள் என்ற பிரிவில் சேர்த்துள்ளார்கள்.
இசுலாமியர்களிடம் இருந்து பறித்து வேறு இரண்டு சமூகத்துக்கு பிரித்துக் கொடுத்து இசுலாமியர்களுக்கும் அந்தச் சமூகத்துக்கும் மோதலை உருவாக்கி இருக்கிறார்கள்.
அதேபோல பட்டியலின மக்களுக்குக்குள் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.
நடக்க இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இதனை செய்துள்ளார்கள்.
பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள் – வாக்களிக்காதவர்கள் என்று நினைத்து இந்த பாகுபாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படையாகவே சமூகநீதி கொலை செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில்!
பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வர வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்தி- அதன் தரவுகளை வெளியிட வேண்டும்.
இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். மாநில அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது.
இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்! வழிகாட்டும்! செயல்படுத்தும்!
இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்த வகையில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
Such committees should be established in all the states. I appeal to political leaders in all states to take up this initiative. We should collectively spearhead the resolutions to be passed in this meeting.
(இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.)
தி.மு.க. சார்பில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமூகநீதி வரலாற்றை எடுத்துச் சொல்லும் வகையில், Study Circles ஆரம்பித்து, கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இணைய மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும், அவரவர் மாநிலங்களில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் – மகாத்மா ஜோதிராவ் புலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்களில் Study Circles துவங்கி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குச் சமூகநீதிப் பற்றிய புரிதலையும் – விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்.
இந்தியா முழுமைக்கும்
“கூட்டாட்சியை ,மாநில சுயாட்சியை ,
மதச்சார்பின்மையை,சமத்துவத்தை,
சகோதரத்துவத்தை,சமதர்மத்தை
சமூகநீதியை” – நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும்.
அது வெறும் குரலாக மட்டும் இருக்க முடியாது. தனித்தனி குரலாக மட்டும் இருந்தால் பயனில்லை. கூட்டுக் குரலாக – கூட்டணிக் குரலாக அமைய வேண்டும்.
However idealistic an ideology may be, for it to succeed, the unity among the parties which has accepted the ideology is of great importance. Such a unity is not enough, if it is in only few states. It has to happen in every state. It has to be for the whole of India. It is for that unity, federations like this will serve as the foundation. Let’s fight together to create, an India of Social Justice, an India of Equal Justice, an India of Brotherhood.
(எத்தகைய உன்னதமான கருத்தியலாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கு – அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட சக்திகளின் ஒற்றுமை என்பது மிகமிக அவசியம்.
அத்தகைய ஒற்றுமை ஓரிரு மாநிலத்தில் மட்டும் உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அது அகில இந்தியா முழுமைக்குமானதாக ஒன்றாதல் வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டமைப்புகள் அடித்தளம் அமைக்கும்.
சமூகநீதி இந்தியாவை உருவாக்க – சமதர்ம இந்தியாவை உருவாக்க – சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.)