சாட்ஜிபிடி மூலம் 3 மாதத்தில் ரூ.28 லட்சம் ஈட்டிய இளைஞர்
கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகமான சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என சொல்லித் தந்து 23 வயது இளைஞர் ஒருவர் 3 மாதத்தில் ரூ.28 லட்சம் வருவாய் ஈட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் சாட் ஜிபிடி. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம் கேள்விகளையோ, தகவல்களையோ தந்து நமக்கு தேவையானவற்றை பெறலாம்.
கூகுளிடம் நாம் ஒரு தகவலை கேட்டால் அது இணையத்தில் அது தொடர்பாக இருக்கும் அனைத்தையும் சேகரித்து வழங்கும்.
சாட்ஜிபிடி நாம் கேட்கும் விஷயம் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும். அதில் ஏதேனும் சந்தேகம் அங்கிருந்து துணைக் கேள்விக் கேட்டு மேலும் விரிவான தகவல்களை பெறலாம்.
சாட்ஜிபிடியை வைத்து பலர் விளையாடிக் கொண்டிருக்கையில், லேன்ஸ் ஜங்க் என்ற 23 வயது இளைஞர், யுடெமி எனும் ஆன்லைன் கோர்ஸ் நடத்தும் தளத்தில், “பிகினர்களுக்கான விரிவான சாட்ஜிபிடி கையேடு” என்ற பெயரில் 50 வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.
இதனை 15,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வியாளர்கள், ஐடி ஊழியர்கள் என பல துறையினரும் பணம் செலுத்தி பார்த்தனர். இதன் மூலம் 3 மாதத்தில் லேன்ஸ் ஜங்க் 35 ஆயிரம் டாலர்கள் லாபம் பார்த்துள்ளார். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு சுமார் ரூ.28 லட்சம்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், கனடா மற்றும் பல நாட்டவர்கள் இந்த வீடியோவினை பார்த்துக் கற்றுக்கொண்டுள்ளனர். மேலும் இவரது விரிவுரைக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங்கும் தந்துள்ளனர்.
சாட்ஜிபிடி பலரது வேலையைப் பறித்துவிடும் என விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சாட்ஜிபிடி மூலம் தனக்கான புதிய வேலையை உருவாக்கிக் கொண்டு சாதித்துள்ளார் இந்த இளைஞர்.