திருநங்கைகளுக்கு விருது-ரூ.1 லட்சம் பணம்!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதலமைச்சர் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ. 1,00,000 காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். மேலும் விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இந்த விருது பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 31.01.2024 வரை விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 31.01.2024 மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். விருது பெற தகுதியுள்ளவர்கள் இதற்கான தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் 04328-296209 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.