நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்; சீமான் திட்டவட்டம்!
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். இதனால் வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம். அதை எதுவும் சொல்ல முடியாது. பா.ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை துண்டு, துண்டாக உடைத்து விடும். இந்தியா கூட்டணியும் தொடர்ந்து நீடிக்காது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார். 2026-ல் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவார். 60 வயதானவர்களுக்கு அறுபடை வீடுகளுக்கு பயணம் செய்யலாம் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இதெல்லாம் ஒரு திட்டமா. யாரும் இதனை கேட்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று கூறுவதாக, அவரது மகள் ஐஸ்வர்யா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சங்கி என்பது இழிவான சொல் இல்லை.உங்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம் உண்மை இல்லை என்றால் நீங்கள் கோபப்பட தேவையில்லை. கலைஞர்களை சுதந்திரமாக விட வேண்டும். உங்கள் விருப்பு, வெறுப்புக்கு பொருத்தி பார்க்க வேண்டாம். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. நிச்சயமாக மாறுதல் இருக்கும் என்றார்.