“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..!” என்றவர் வள்ளலார். “பசி பிணியை போக்கியவர் வள்ளலார்..!”
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..!” என்றவர் வள்ளலார்.
“பசி பிணியை போக்கியவர் வள்ளலார்..!” இப்படித்தான்
வள்ளலார் நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறார். வள்ளலாருக்கு மற்றொரு முகமும் உண்டு. வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் பிறந்தது 1823 ஆம் ஆண்டு. தந்தை பெரியார் பிறப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே பிறந்து மறைந்தவர் வள்ளலார்.
தில்லை நடராஜரின் பக்தராக இருந்து ஏராளமான பாடல்களை சிறு வயதிலேயே மனமுருகி பாடியவர் வள்ளலார். எந்த கடவுளுக்காக உருகி உருகிப் பாடினாரோ அவன் சன்னதியிலேயே பார்ப்பனர்களின் தீண்டாமை கொடுமைக்கு ஆளானவர் வள்ளலார். நடராஜன் சன்னதியில் தன்னை அனுமதிக்க தீட்சதர்கள் மறுத்தபோது, வெகுண்டெழுந்தார் வள்ளலார். பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த அந்த நேரத்தில் தில்லை நடராஜ சன்னதிக்கு மாற்றாக தாமே “ஒரு தலத்தை உருவாக்கி” அங்கே நடராஜரை தருவிக்கப்போவதாக வள்ளலார் அறிவித்திருக்கிறார். இதை பாலசுந்தர நாயக்கர் – தான் எழுதிய இராமலிங்க பிள்ளை பாடலில் குறிப்பிடுகிறார்.
1865 -ல் சமரச சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த வள்ளலார் வடலூரில் சத்திய தரும சாலையை 1867ல் உருவாக்கினார். பின்னர் 1872ல் சத்திய ஞானசபையை தோற்றுவித்தார்.
வள்ளலார் தனது முதல் பாமாலையிலேயே
“பெருநெறி பிடித் தொழுக வேண்டும்!
மதமான பேய் பிடிக்காதிருக்க வேண்டும்!!”
என்று எழுதினார் .
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
கள்ளப்புலனனைந்தும் காடாமணி விளக்கு”
என்று “கோயில் விக்ரகங்களை” வழிபடுவதை மறுத்து வைதீகத்திற்கு எதிராக….பார்ப்பனர்களுக்கு எதிராக….கருத்துகளை வெளிப்படுத்திய ‘திருமூலரின்’ வழிவந்தவர் வள்ளலார். மாறாக எந்த சைவ மடாதிபதிகளிடமோ, சங்கராச்சாரிகளிடமோ தீட்சதை பெற்றவர் இல்லை.
இளமைப் பருவத்தில் சைவ மரபில் ஊறித் திளைத்தவர் பின்னாளில், ‘அதை அறவே நம்பவேண்டாம் என்றார்’ 1873-ம் ஆண்டு சித்தி வளாகத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றி பேசிய வள்ளலார், தான் முதலில் சைவ சமயத்தின் மீது கொண்டாடிய லட்சியத்திற்கு அளவே இல்லை என்றும் அதற்குப் பாடிய அருட்பாக்களே இப்போது எப்படிப் போய்விட்டது. .?
என்றும் கேட்கிறார். மேலும் அவர் அப்படிப்பட்ட அழுத்தம் அப்போது தனக்கு இருந்ததென்றால் அதற்குக் காரணம் அந்த வயது தனக்கிருந்த அற்ப அறிவுதான் என்று தன்னையே குறைபட்டுக்கொள்கிறார்.
தில்லை நடராஜர் சன்னதியில் தீட்சதர்களால்- அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. ஜாதி, மத, சம்பிரதாய, சாஸ்திரங்கள் அடியோடு ஒழிய வேண்டும் என்றார்.
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே நீர் அமிதல் அழகலவே…!” என்றும்,
“ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்” என்றும்,
“இச்சாதி சமய விகற்பங்களெல்லாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்” என்றும் பாடியவர்.
“பேருற்ற உலகில் உறு சமய மதநெறி எல்லாம்
பேய்ப்பிடிப்பு உற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது
உயிர்கள் பல பேதம் உற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீணே போயினர்…!” என்றும்,
“மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனதை வைத்து வீண்பொழுது
கழிக்கின்றார்..!” என்றும்,
“எய்வகை சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர்…!” என்றும்,
“கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக் கூவுகின்றார்;
பலன் ஒன்றும் கொண்டறியார்; வீணே நீறுகின்றார்; மண்ணாகி நாறுகின்றார்…!”
என்றும் சமயகோட்பாடுகளையும், மதகோட்பாடுகளையும் சாடுகிறார்கள்.
“கலையுரைத்த கற்பனையே
நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எல்லாம்
மண்மூடிப் போக…!”
என புராணக்கதைகளை விமர்சித்த வள்ளலார் அதை உருவாக்கிய கூட்டத்தையும் தோலுரிக்கத் தவறவில்லை.
“கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்
காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும்
எல்லாம் பிள்ளை விளையாட்டு…!”
என்றார்.
ஜாதி, மதங்களை சாடிய வள்ளலார் அதோடு விட்டுவிடவில்லை. பிறப்பால் பிராமணன், சூத்திரன் என்றுரைத்த வருணாசிரமத்தை “சநாதனதருமத்தை” குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றார்.
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
இருட்சாதி தத்துவ சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செயல் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரமம்
வழக்கெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி…!”
என்றார். பார்ப்பனர்களின் வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட சூது- என்று ஓங்கி அடித்தார் வள்ளலார்.
சாதாரண எளிய வகுப்பில் பிறந்தவர். பார்ப்பனர்களின் எதிர்ப்பை மட்டுமின்றி அவர்களால் தூண்டிவிடப்பட்ட உயர் ஜாதி இந்துக்களின் எதிர்ப்பையும் சந்தித்தார். வள்ளலார் இயற்றிய அருட்பாவிற்கு எதிராக ஏராளமான கண்டன நூல்களும் இயற்றப்பட்டது. அவர் வாழ்ந்த காலத்திலேயே ஆறுமுக நாவலர், சண்முகம் பிள்ளை போன்றவர்கள் வள்ளலாருக்கு எதிராக செயல்பட்டனர். ‘திருவருட்பா தூஷண பரிகாரம்’ என்று எழுதினார் சண்முகம் பிள்ளை. வள்ளலாருக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் ஆறுமுக நாவலர். ‘வள்ளலாரின் அருட்பா, போலி அருட்பா’ என்றும் ‘மருட்பா’ என்றும் பல்வேறு வகைகளில் தூற்றப்பட்டது. வள்ளலார் மறைந்த பின்னரும் அவர் மீதான விமர்சனங்கள் நிற்கவில்லை. ‘இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம்’ என்று எழுதினார் கதிரைவேற்பிள்ளை.
திருக்குறளை தூக்கிப் பிடித்தவர் வள்ளலார். சமஸ்கிருதத்தைவிட தமிழே உயர்ந்தது என வாதிட்டவர். சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தை மாத்ரு பாஷா (தாய் மொழி) என்று சொன்ன நேரத்தில் அப்படியானால் எங்கள் தமிழ் பித்ரு பாஷா (தந்தை மொழி) என்று குறிப்பிட்டவர் வள்ளலார். பெண் கல்வியை வலியுறுத்தியவர் வள்ளலார். கணவன் இறந்த பின் மனைவி தாலி அறுக்கத் தேவையில்லை என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட சூத்திர இழிவுக்கு எதிராக குரல் கொடுத்தவர் வள்ளலார் என்பதே தனிச்சிறப்பு. அதனால்தான் அப்படிப்பட்ட அருங்கருத்துகள் அடங்கிய அவரது ஆறாம் திருமுறையை பெரியார் தனது குடிஅரசு பதிப்பகத்தின் மூலம் தொகுத்து ‘இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ என்ற பெயரில் வெளியிட்டார்.அதை தொகுத்தவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம்பரனார் ஆவார்.ஒருமுறை வடலூர் சென்ற பெரியார் வள்ளலார் மீது கொண்ட மதிப்பால் அவரது சபையை காண விரும்பி அங்கே சென்றிருக்கிறார்.
இன்றளவும் அது மடம் கிடையாது. பீடம் கிடையாது. பீடாதிபதி கிடையாது. ஒரு பீடாக்கடை அதிபதி கூட அங்கு கிடையாது. அது சபை. யாரும் கூட சபைக்கான. உள்ளே நுழைய யாருக்கும் தடையில்லை. பந்தா பகட்டு இல்லை. துதிக் கூவல்கள் இல்லை. அது சபை. அய்யன் வள்ளலார் கட்டிய எண் கோண மாட அரங்கில் காற்று மட்டுமே சரளமாய் புகுந்து விளையாடிச் செல்லும். தொந்தி பெருத்த ஆச்சார்யர்கள் இல்லை. டிக்கட் வாங்கி தேவுடு காக்க வேண்டியதில்லை. சிறு கண்ணாடிக் கூண்டில் அய்யன் ஏற்றி வைத்த விளக்குண்டு சிறு குழந்தையின் கண்ணென சுழன்று ஒளிரும் சுடருண்டு. அரங்குக்கு வெளியே மக்களின் காசு பணத்தைப் பறித்துப் போக எந்தக் கொள்ளை வணிகமும் இல்லை. எளிய மக்களுக்கென மூலிகை, பல் பொடிகள், கையடக்க திருவருட்பா மட்டுமே அடக்க விலையில் அமைதி காக்கிறது.
கடவுள் வழிபாடு என்பது, சடங்குகள், யாகங்கள், வேண்டுதல்களில் இல்லை. மனிதர்களுக்கு மனிதர்கள் உதவும் ‘ஜீவகாருண்யம்’ தான் கடவுள் வழிபாடு. அதுதான், சன்மார்க்கம்” என்றார். தமிழ் சிந்தனை மரபில் இப்படி மனிதனை கடவுளாக்கிய வேறு சிந்தனையாளர் ஒருவர் கூட இல்லை. அதே போல் ‘பசித்த வயிற்றுக்கு உணவு இடு’ என்று வேத மத மரபில் எந்த ரிஷியும், அவதாரமும், எந்த வேதமும், புராணமும், மகான்களும் கூறிய சான்றுகளே இல்லை.
இந்த ஒரு படி மேலே போய் தனது சன்மார்க்க நெறிக்கு அவர் தரும் விளக்கம் கடவுள், மதம் மறுப்பாகவே இருக்கிறது. உபதேசக் குறிப்புகளில் அவர் இவ்வாறு எழுதுகிறார்.
சமய மறுப்பு, தெய்வ உருவம், சடங்கு மறுப்பு சன்மார்க்கத்தின் கோட்பாடு. என்று 1872 -லேயே துணிவோடு அறிவித்த வள்ளலாரை வைதீகம் எப்படி ஏற்கும்…?
வள்ளலார் தனது பாடல் தொகுப்புக்கு பெயர் எதுவும் சூட்டவில்லை; அவரது முதன்மை சீடரான வேலாயுத முதலியார் தான் ‘திருவருட்பா’ எனப் பெயர் சூட்டினார். தெய்வத் தன்மை கொண்ட பாடல்கள் என்ற பொருளிலே அப்பெயர் சூடப் பெற்றது. ஆறு – திருமுறைகளாகத் தொகுத்ததும் அவரே; ‘திருமுறை’ என்றால் ‘பகுதி’ என்பது பொருள். இதில் தனது புரட்சிகரக் கருத்துக்களை பதிவு செய்த இறுதிக்கால பாடல்கள் ஆறாம் திருமுறையாக தொகுக்கப் பெற்றாலும், அதை உடனடியாக வெளியிட வேண்டாம் என்பதே அடிகளாரின் கருத்து.
ஐந்து – திருமுறைகளை வெளியிட்ட வேலயாயுதம் முதலியார், ஆறாம் திருமுறையை வெளியிட ஆர்வம் காட்டமைக்குக் காரணம், அவரது பழமையில் ஊறிய சைவப்பற்று தான். அது மட்டுமல்ல, முதல் 5- தொகுதிகள் வெளிவருவதில் பேரார்வம் காட்டிய இறுக்கம் இரத்தினம், புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், பொருள் உதவி செய்த சோமசுந்தரம் செட்டியார் ஆகியோரும் 6-ஆம் திருமுறை வெளிவருவதில் ஆர்வமின்றி ஒதுங்கிவிட்டனர். ஏதோ, வள்ளலார் கேட்டுக் கொண்டதற்காக அவருக்கு அஞ்சி….வேலாயுத முதலியார் – அவர் உயிருடன் இருக்கும் வரை வெளியிடவில்லை என்று ம.பொ.சிவஞானம் (மாபொசி) எழுதுவது உண்மைக்கு மாறானது என்கிறார் ஆய்வாளர் சரவணன். வள்ளலாருக்கே 6-ஆம் திருமுறையில் உடன்பாடு இல்லை என்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்குவதே ம.பொ.சி.யின் உள் நோக்கம்.உண்மை என்னவென்றால்…..வேலாயுத முதலியார் வாழ்ந்த காலத்திலேயே 1885-இல் ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டு விட்டது. 1889-இல் தான் முதலியார் மரணமடைகிறார்.
இந்தப் பின்னணியில் அடிகளாரின் திருவருட்பாவிற்கு பழமையில் ஊறிப்போன தீவிர சைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது, அதில் முதல் வரிசையில் நின்றவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர்,
நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே – தவிர மற்றவை அல்ல என்றார், வள்ளலார் பாடல்களை நேரடியாக கண்டித்து மருட்பா என்றார், பார்ப்பனர்களை கடுமையாக சாடும் திரு மந்திரத்தையே – அருட்பா பட்டியலில் சேர்க்காதவர், அவர்.
அருட்பா – மறுட்பா விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கின; அடிகளாருக்கு ஆதரவாக, அட்டாவதனம் வீராசாமி செட்டியார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பூவை கல்யாணசுந்தர முதலியார், செய்கு தம்பி பாவலர் உள்ளிட்ட சுமார் 23- பேர் களமிறங்கினர்.
மருட்பாவுக்காக- களமிறங்கி யவர்களில் திருவாடுதுறை வேதாரண்யம், திருவண்ணா மலை மற்றும் தருமபுரம் ஆதீனங்கள் உ.வே. சாமிநாதையர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நா. கதிரைவேற் பிள்ளை, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் உள்ளிட்ட சுமார் 15 பேர்.
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, “திருவருட்பா” என்று குறிப்பிடுகிறார். இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்க அடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
எதிரில் பசித்திரு, விழித்திரு, தனித்திரு- என்று சொன்ன அய்யனே….மறுபுறம் பசியைப் பிணி என்று அதனைப் போக்க ஏற்றி வைத்த அணையா அடுப்பு கண்ணெரிகிறது.
தீ யேந்தும் பாத்திரத்தில் கொட்டுவதற்கு அரிசி எந்தக் கனவானும் அளிப்பதல்ல..! அங்கு கையேந்தி நிற்கும் ஒருவரைப் போன்ற எளிய மனிதர்கள் கொண்டு வந்து அளிப்பதுவே..!!
“சனாதனிகளைப் போல” பருப்பும், நெய்யும் பிசைந்துண்டதை வாழை இலையில் பேண்டு வைத்தவரல்ல வள்ளலார்.
கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப்போக
காற்றை உண்டு, நீரைத் தின்ற ஒளிப்பிழம்புடா அது..? சனாதனத்தைச் சாய்க்க வந்த சித்தர் மரபின் தொடர்ச்சிடா வள்ளலார்…??
தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்……என்றாவது ஒரு நாள்,
தேடுங்கள் கிடைக்கப்பெறும்……தட்டுங்கள் திறக்கப்பெறும்.
தொகுப்பு,
×வடலூர்சோதிகுமரவேல்,