தாயையும், 2 மகள்களையும் கற்பழித்த மத போதகர் மீது வழக்கு!
மும்பை அந்தேரி பகுதியில் 60 வயது மதபோதகர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 38 வயது பெண் தனது 14, 13 வயதுடைய 2 மகள்களின் படிப்பிற்காக மதபோதகர் வீட்டில் வந்து தங்கி இருந்தார். மேலும் அப்பெண் மதபோதகர் வீட்டில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அப்பெண்ணிடம் 2 மகள்களையும் கொன்று விடுவதாக மிரட்டி மதபோதகர் கற்பழித்துள்ளார் என கூறப்படுகிறது. இதுபோல் பலமுறை மிரட்டி அப்பெண்ணை கற்பழித்துள்ளாராம். இந்தநிலையில் மதபோதகர் அப்பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது 2 மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அப்பெண் கடும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 2 மகள்களுடன் அப்பெண் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடி தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தார். இதன்பேரில் தொண்டு நிறுவனத்தினர் அப்பெண்ணுடன் சென்று டி.என். நகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் மதபோதகர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.