செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் உணவகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி!
தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மே 26-ந்தேதி அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அமைச்சரின் தம்பி அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். பின்னர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தொடர்ந்து 8 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற சோதனையின் போது கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் உணவகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 2 நாட்கள் நடைபெற்றது. பின்னர் மீண்டும் 3வது முறையாக கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் கொங்கு மெஸ் சுப்ரமணிக்கு சொந்தமான உணவகம் கரூர்-கோவை சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கோவையில் இருந்து 2 கார்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையின் மதிப்பீட்டுக்குழு அதிகாரிகள் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவகத்தை ஒட்டிய பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 4 மாடி கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வை முடித்த அதிகாரிகள் சுமார் மதியம் 1.25 மணியளவில் அவர்கள் வந்த கார்களில் ஏறி சென்றனர். வருமான வரித்துறையின் மதிப்பீட்டுக்குழு அதிகாரிகள் கொங்குமெஸ் உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.