கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் பிணமாக மீட்பு வாங்கல் போலீசார் தீவிர விசாரணை
கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் பிணமாக மீட்பு வாங்கல் போலீசார் தீவிர விசாரணை..
கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் உள்ள சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (63),மனைவி ஜானகி (60) ஆகியோரின் மகள் சுகுணா (35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணமாகி, சிவானி (10), ஆதிரன் (4)என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சுகுணா மற்றும் கணவர் பிரபு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்(நவ.18) இரவு சின்ன காளிபாளையம் பகுதியில் ராமசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில்,ராமசாமி, ஜானகி,மகள் சுகுணா மற்றும் இரண்டு குழந்தைகள் என 5பேரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.
இதனை பக்கத்து தோட்டத்தக்காரர் கருப்பண்ணன் என்பவர் பார்த்து உடனடியாக வாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் 5 பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடைபெற்றது.
5 பேரும் ஒருவரை ஒருவர் துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் உயிரிழந்த ராமசாமியின் மகன் கண்ணன் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.மேலும் ராமசாமி தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் இந்த தற்கொலை முடிவுக்கு தாங்கள் மட்டுமே காரணம் வேறு யாரும் காரணம் இல்லை. நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்து உள்ளோம் என உருக்கமாக கடிதத்தில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் உயிரிழந்த இச்சம்பவம் கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.