வன்கொடுமைகளும்,சாதிக்கொடுமைகளும் தாண்டவமாடுகின்றன! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்க! தமிழ்நாடு அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்-
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், அரியநாயகபுரம் பட்டியலினத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் தேவேந்திர ராஜ் பங்கேற்ற கபடி அணி,போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சாதியவாத கும்பல்
10.03.2025 அன்று பேருந்தில் பள்ளிக்கு செல்லும் வழியில் தேவேந்திர ராஜை கொடூரமாக தாக்கியுள்ளனர.தலையில் மண்டையோடு வரை பாயந்துள்ள அரிவாள் வெட்டுக்காயங்களுடன், இடது கையில் அனைத்து விரல்களும் துண்டிக்கப்பட்டு வலது கையில் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டு,முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே விசாலையன் கிராமம், திருவள்ளுவர் நகர் பட்டியலின இளைஞர்கள் ஆதிகேஸ்வரன், மாதங்கன் ஆகியோர் 04.03.2025 அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சாதியவாதிகளால் கடத்தப்பட்டு கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.மறுநாள் 05.03.2025 அன்று மாதங்கன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தப்பித்து வந்த ஆதிகேஸ்வரன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சோமனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 05.03.2025 அன்று ஆண்டு விழாவின்போது அப்பள்ளியின் மாணவர்கள் சாதி உணர்வை தூண்டும் பாடல்களை பாமக கட்சியின் துண்டுடன் நடனமாடிய விதி மீறல் நடந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலுள்ள குழாயில் ஏழாம் வகுப்பு பட்டியலின மாணவர் சாப்பிட்ட பின் கை கழுவ சென்ற போது தாக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்கொடுமைகளுக்கும்,
சாதிக்கொடுமைகளுக்கும் எதிராக தீவிரமான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அரசு தீவிரப்படுத்த வேண்டிய நிலலை ஏற்பட்டுள்ளது.வழக்கமான நடவடிக்கைகளுக்கு மாறாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தெரிவித்துள்ளனர்.