வடலூரில் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழியேற்பு விழா.
கடலூர் மாவட்டம், வடலூர் ஓ.பி.ஆர் நினைவு செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழியேற்கும் விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலை அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி லதா ராஜவெங்கடேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக என்எல்சி இந்தியா மருத்துவமனையின் பொது கண்காணிப்பாளர் சி.தாரணி மௌலி, கடலூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சி.என்.ரமேஷ்பாபு, கடலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மீரா, என்எல்சி மருத்துவமனை கூடுதல் பொது துணைப்பொது கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.நளினி ஆகியோர் பங்கேற்றுப் செவிலியர்களின் கடமை, பொறுப்பு, சேவைகள் குறித்துப் பேசினர்.
நிகழ்ச்சியில் ஓ.பி.ஆர் நினைவு செவிலியர் கல்லூரியின் முதல்வர் எஸ்.சுகந்தரா தேவி உறுதிமொழி வாசிக்க, முதலாமாண்டு செவிலியர் மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நல்ல செவிலியர்களாகப் பணியாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். பின்னர். அனைவரும் வரிசையாகச் சென்று விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் படத்தின் அருகே மெழுகுவர்த்தியை வைத்து மரியாதை செலுத்தினர். விழாவில் செவிலியர் பள்ளி முதல்வர் சண்முகவடிவு, என்எல்சி மருத்துவமனையில் முதன்மை செவிலியர் கண்காணிப்பாளர் ஜி.பிரபாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.