பேய்
பத்மராஜன்– தமிழில் சுரா –
எட்டாவது மனிதனும் பதில் கூறினான்: ‘நான் அந்த வழியில் செல்லவில்லை’ அவனும் நடந்து சென்றான்.
சிறுவன் மீண்டும் சந்திப்பில் காத்து நின்று கொண்டிருந்தான். யாராவது வருவார்கள். வயலின் மத்தியில் நடந்து சென்று அக்கரையை அடைய வேண்டியவர்கள் யாராவது வராமல் இருக்க மாட்டார்கள்.
வீட்டிற்குச் சென்றால், அடி கிடைக்கும். ஆனால், அந்த நேரத்தில் அவனுடைய மனதில் அதைப் பற்றிய பதைபதைப்பு எதுவும் இல்லை. சாயங்காலத்திற்கு முன்பு கடைக்கு அனுப்பி வைத்தார்கள். மூலையில் நடைபெற்ற சைக்கிள் வித்தையைப் பார்த்துக் கொண்டு நின்று விட்டான். நன்றாக இருள் விழவும், சைக்கிள் வித்தையின் பார்வையாளர்கள் பிரிந்து செல்ல ஆரம்பிக்கவும் செய்தபோதுதான், பீடி வாங்குவதற்காக தான் வந்தோம் என்ற விஷயத்தையே அவன் நினைத்துப் பார்த்தான்.
இங்கு வரை பிரச்னையில்லை. ஒரு வாரத்திற்கு முன்பாக இருந்திருந்தால், கீழ் நோக்கி ஒரே ஓட்டம் ஓடியிருப்பான். ஆனால், இப்போது அதற்கான தைரியம் வரவில்லை.
வயல் தாண்டி ஏறிச் செல்லும் ஒற்றையடிப்பாதைக்கு அருகில்தான் அம்மை நோய் வந்து மரணமடைந்த தேவி என்ற வயதான பெண்ணை குழி தோண்டி புதைத்தார்கள்.
சென்ற வாரம்…….
இரவு வேளையில் அந்த வழியே நடந்து செல்லக் கூடாது. கெட்ட மரணம்….. அதுவும் அம்மை விளையாடி…….
இரவில் அந்த நிலத்தின் வழியாக அணையாத ஒரு பந்தம் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் என்ற விஷயத்தில் சிறுவனுக்கு சந்தேகமே இல்லை.
அந்த வழியே தனியாக நடந்து செல்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
வீட்டிற்குச் சென்று சேர்ந்தாலே போதும்…… அடியோ உதையோ எதை வேண்டுமானாலும், தந்தையின் விருப்பப்படி தரட்டும்……
ஒரு மனிதன் நடந்து வந்து கொண்டிருந்தான். கசங்கிப் போன ஆடைகள்…….
‘வயல் வழியாகவா? – அருகில் வந்தபோது, சிறுவன் தைரியத்துடன் கேட்டான்.
‘இல்லை…….’ – அவன் நடந்தான். நடந்து கொண்டிருப்பதற்கு மத்தியில் திரும்பிப் பார்த்து கேட்டான்: என்ன?’
‘ச்சே…….’ – சிறுவன் தன்னையே அறியாமல் கூறினான்.
‘ஒண்ணுமில்ல.’
அவனுக்கு அதிக ஏமாற்றம் உண்டானது
‘பையா, நீ அந்த வழியாக போகணுமா?’, அவன் அருகில் வந்து கேட்டான்.
சிறுவன் தலையை ஆட்டினான்.
‘பிறகு ஏன் போகவில்லை?’ – வாஞ்சையுடன் உள்ள விசாரிப்பு……
‘தனியாக போவதற்கு பயம்…..’
அவன் ஒரு நிமிடம் நின்று, என்னவோ யோசித்தான். தொடர்ந்து கேட்டான் : ‘இப்போது……. இந்த நேரத்தில் எங்கு போயிருந்தாய்?’
‘கடையில் பீடி வாங்குவதற்கு……..’
‘யாருக்கு?’
‘அப்பாவுக்கு……’
‘இந்த இரவு வேளையில் உன்னை தனியாக அனுப்பினார்களா?’, வேறு வழியில்லாமல் ஒரு பொய்யைக் கூறினான்.’ ‘ஆமாம்.’
அவன் நடந்து போய் விடுவானோ என்ற பயம் உண்டானது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சிறுவன் இடையில் புகுந்து கேட்டான் :
‘என்னை அந்த வயலின் அக்கரையிலிருக்கும் ஒற்றையடிப் பாதை வரை கொண்டு விட்டால் போதும்’.
‘சரி…’
அவன் முன்னால் நடந்தான்.
‘வா..’
அவனுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, அவன் கேட்டான்: ‘ஒற்றையடிப்பாதைக்கு அருகிலா வீடு இருக்கிறது?’
‘இல்லை.. அங்கிருந்து நீண்ட தூரம் போகணும்.’
‘பிறகு…. அங்கு வரை கொண்டு போய் விட்டு விட்டால்…?’
‘அங்கிருந்து நான் தனியாக போய் விடுவேன்’.
அவன் எதுவும் கூறவில்லை.
வயலின் மத்தியிலிருக்கும் வரப்பின் வழியாக அவன் முன்னாலும் சிறுவன் பின்னாலுமாக நடந்தார்கள்.
‘ஒற்றையடிப் பாதைக்கு அருகில்தான் தேவி கிழவியைப் புதைச்சிருக்காங்க’ – சிறுவன் கூறினான்.
‘எந்த தேவி கிழவி?’
‘அம்மை நோய் பிடிச்சு செத்துப் போனாளே!’
‘ம்……’ – அவன் அலட்சியமாக முனகினான்.
‘தலை இல்லாத தென்னை மரத்திற்கு அடியில்தான் அவளை புதைச்சிருக்காங்க’ – சிறுவன் விளக்கி கூறினான்: ‘அங்கு வரை கொண்டு போய் விட்டால் போதும், பிறகு எனக்கு பயமில்லை.’
‘பையா, செத்து போனவர்கள் மீது உனக்கு பயமா?’
‘ஆமாம்.’
அவன் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.
வயல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. வரப்பிற்கு மத்தியில் அந்த மனிதன் திடீரென்று நின்றான்.
‘இங்கு இல்லை…… இன்னும் கொஞ்சம் தாண்டி போகணும்’ சிறுவன் கூறினான்.
அந்த மனிதன் அதைக் காதில் வாங்காததைப் போல கூறினான்.
‘உன் கையில் இருக்குற காசை இங்கே எடு’.
அடி விழுந்ததைப் போல திகைத்துப் போய் நின்று விட்டான்.
‘ம்……’
அந்த ஆள் கையை நீட்டினான். சிறுவன் திகைப்படைந்து நின்றிருந்தான்.
‘மரியாதையா எடுத்துத் தா. இல்லாவிட்டால்……… உன் கழுத்தை நெறித்து, இருக்குற காசை எடுத்துக் கொண்டு நான் போய் விடுவேன்.’ அந்த மனிதனின் குரல் மாறியிருந்தது.
‘ஒரு ரூபாய்தான் கொடுத்து விட்டாங்க. மீதி எண்பது பைசா இருக்கு.’
அரைக்கால் சட்டையின் பைக்குள்ளிருந்து அதை எடுத்துக் கொடுத்தான். கை நடுங்கியது.
‘பீடி எங்கே?’
சிறுவன் கையைத் திறந்து காட்டினான்.
வேறு எதுவும் கூறாமல் அந்த மனிதன் அதை எடுத்துக் கொண்டான்.
‘ஓடிப் போ……. நான் இங்கு நின்று கொண்டு பார்க்கிறேன்.’
அவன் வரப்பின் ஒரு ஓரத்தில் நகர்ந்து நின்றான்.
அழுகை வந்தது. பயம், பதைபதைப்பு ஆகியவை நிறைந்த அடர்த்தியான காட்டுக்குள் தெரியாமல் வந்து சிக்கிக் கொண்டதைப் போல தோன்றியது.
கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் ஓடினான்.
கண்கள் நிறைந்திருந்தன.
ஒற்றையடிப் பாதையின் வழியாக ஓடினான். திரும்பிப் பார்ப்பதற்கு தைரியம் வரவில்லை. அந்த மனிதன் ஒருவேளை பின்னால் இருப்பானோ?
தேவி கிழவியின் ஆவியைப் பற்றியும், தலைப் பகுதி இல்லா தென்னை மரத்தைப் பற்றியும் ஞாபகம் வரவில்லை. அந்த இடத்தைக் கடந்து சென்ற பிறகுதான் அது நினைவில் வந்தது.
மேலும் சிறிது தூரம் ஓடி விட்டு, மேலும் கீழும் மூச்சு விட்டவாறு நின்றான். மிகவும் களைப்பாக இருந்தது.
அங்கு நின்றிருந்தபோது பயம் தோன்றவில்லை. அதற்குப் பதிலாக அந்த மனிதனிடமிருந்து தப்பித்து விட்டோமே என்ற நிம்மதி இருந்தது.
தேவி கிழவி…… என்ன அப்பிராணி !
திரும்பிப் பார்த்தான். யாரும் பின்னால் வரவில்லை.
இருட்டில்……. தூரத்தில்…… வயலுக்கு மத்தியில்…….. அணையாத ஒரு பந்தத்தைப் போல, பீடியின் சிவந்த கண் நீங்கி…… நீங்கி போய்க் கொண்டிருந்தது.