“அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: அதிக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்”
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார்.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் செனட் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி(24) என்பவர் போட்டியிடுகிறார். இதன் மூலம் அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் செனட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘ஜென் ஸி’ (1997- 2012 காலத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையையும் அவருக்கு கிடைத்து உள்ளது. அஸ்வின் ராமசாமியின் பெற்றோர் 1990 ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை கோவையையும், தாயார் சென்னையையும் சேர்ந்தவர்கள். செனட் தேர்தலில் அஸ்வின் ராமசாமியை எதிர்த்து, ஷான் ஸ்டில் போட்டியிடுகிறார். தேர்தலில் களமிறங்கியதைத் தொடர்ந்து, நிதி திரட்டும் முயற்சியில் அஸ்வின் ராமசாமி ஈடுபட்டார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. ஏராளமானோர் நிதி அளிக்க துவங்கினர். பிப்.,01 முதல் ஏப்.,30 வரையிலான காலத்தில் அவர் 1,46,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டிய நேரத்தில், அவரை எதிர்த்து போட்டியிடும் ஷான் ஸ்டில் 6,500 டாலர் மட்டுமே நிதி திரட்டிஇருந்தார். தற்போதைய நிலையில் அஸ்வின் ராமசாமி 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார். அவரிடம் ரொக்கமாக 2,08,000 டாலர் உள்ளது.