தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? ”இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!”
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.ஏமாற்றத்தையே பரிசளித்துள்ள பட்ஜெட்: இந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை! மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.