“போக்குவரத்துத் துறையின் சீரழிவுக்கு” இந்த இரு கட்சிகள் தான் காரணம்; சொல்கிறார் சீமான்!

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 10,000 வழித்தடங்களில், 1,30,000 தொழிலாளர்களுடன், 2 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வந்த அரசுப் போக்குவரத்துத்துறை இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முற்று முழுதாக சீரழிக்கப்பட்டுள்ளது. தங்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு போக்குவரத்து ஊழியர்களைத் தள்ளியுள்ள திமுக அரசின் கொடுங்கோன்மை மனப்பான்மை வன்மையான கண்டனத்துக்குரியது. 2017ம் ஆண்டு வரை 23000 பேருந்துகள் இயங்கி வந்த அரசுப் போக்குவரத்துத்துறையில், கடந்த 7 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 19000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இலவசப் பேருந்துகளால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட திமுக அரசு ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் சேவையை நிறுத்தியுள்ளதும் பெருங்கொடுமையாகும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான 15வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை இன்று வரை தமிழ்நாடு அரசு தொடங்காதது ஏன்? போக்குவரத்துத் துறையில் காலியாகவுள்ள 20000 பணியிடங்களுக்கு, கடந்த 8 ஆண்டுகளாகப் புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படாதது ஏன்? பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகள் 8000 பேருக்கு, கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வாரிசு வேலையை வழங்க மறுப்பது ஏன்? 90,000 போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்காதது ஏன்? நிதிநிலையைக் காரணம் காட்டி பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி 13000 கோடி ரூபாயை சிறிதும் மனச்சான்று இன்றி தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்டது ஏன்? இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது ஏன்?மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பினை ஒவ்வொரு ஆண்டும் ஈடுகட்டும் தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் இழப்பினை மட்டும் ஈடுகட்ட மறுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன்? பேருந்துகள் தனியார் மயம், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பது என போக்குவரத்துக் கழகங்களைச் சீர்குலைக்க முயல்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? உலக முதலீட்டாளர்களையெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்துவந்து, தனியார் பெருநிறுவனங்கள் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளதாக பெருமை பேசும் திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட வழங்க மறுப்பது ஏன்? இதுதான் திராவிட மாடல் அரசு ஏற்படுத்திய முன்னேற்றமா?திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துவிட்டதாகக் கூறும் திராவிடத் திருவாளர்கள் போக்குவரத்து ஊழியர்களின் உரிமைகளை மட்டும் மறுப்பது ஏன்? பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தையே குறையின்றி நடத்த திறனற்ற திமுக அரசு, பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டு அதன்மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மக்களின் வறுமையைப் போக்கும் என்பது வெற்று விளம்பரமே அன்றி வேறில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவை யிலுள்ள அகவிலைப்படி முழுதாக வழங்கப்படும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து அதிகாரத்தை அடைந்த திமுக அரசு, தற்போது பேச்சுவார்த்தை நடத்தக் கூட முன்வராமல் கண்டுங்காணாமலிருப்பது போக்குவரத்து ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.அரசுப் பொதுப் போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ள ஏழைஎளிய தொழிலாளிகள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினரும் தற்போதைய முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல்விழாவினை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டிய மக்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழல்களில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாநில போக்குவரத்து ஊழியர்களிடம் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தந்து பாமர மக்கள் பாதிப்படையாமல் காத்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்துவதைக் கைவிட்டு, பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து ஊழியர்களுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தம், நிலுவையிலுள்ள 96 மாதங்களுக்கான அகவிலைப்படி வழங்குதல், பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க முன்னுரிமை, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டுதல், இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மருத்துவக் காப்பீடு, பணப்பலன் வழங்குதல், பேருந்துகளையும், போக்குவரத்து பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுதல் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.மாறாக அவசர கதியில் அனுபவமற்ற ஓட்டுநர்களை வலிந்து நியமித்து, பேருந்துகளை இயக்குவதென்பது விபத்துகள் ஏற்படவே வழிவகுக்கும். ஆகவே, பொதுமக்கள் உயிருடன் விளையாடும் அதுபோன்ற விபரீத முயற்சிகளை திமுக அரசு கைவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, தற்காலிக ஓட்டுநர்களின் எதிர்காலமும் பணி நிரந்தரமின்றி, அவர்களுக்கு வாழ்நாள் போராட்டமாக மாறக்கூடிய பேராபத்தும் உள்ளது என்பதையும் முன்னெச்சரிக்கை விடுக்கிறேன். மேலும், அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகள் வெல்லும்வரை அவர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்த அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதோடு, நாம் தமிழர் கட்சியின் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கம் போராட்டக்களத்தில் முழுமையாகப் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *