சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டத்தின் தேவை
*சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டத்தின் தேவை அதிகரித்து வருகிறது*
*முதல்வர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்திடுக*
*தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
வலியுறுத்தல்*
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீவலூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தமிழ்நாடு முதல்வர் சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் தேவையில்லை என பதில் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் தனிச் சட்டத்தின் தேவை முன்பைவிட அதிகரித்து வருகிறது என்று
தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர்
கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் ஏற்பட்டு வரும் கல்வி மற்றும் முதலாளிய பொருளாதார வளர்ச்சிகள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்து வருவது இயல்பு தான்.முற்போக்கு மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளும்,
செயல்பாடுகளும் சமூகத்தை பண்படுத்தி வருவதும் மெய்யானது தான்.
ஆனால் சிந்தனை வளர்சிக்கான இந்த முற்போக்கு விழுமியங்களுக்கு எல்லாம் சவால் விடுத்து சாதிய வர்ணாசிரம சிந்தனைகள் தமிழ் சமூகத்தின் மீது வலிந்து திணிக்கப்படுவதும்,அதன் விளைவாக சாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுதும் உண்மையாகத் தானே இருக்கிறது.
குறிப்பாக சாதிய வர்ணாசிரம நிறுவனங்களின் மீது சாதி மறுப்பு திருமணங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அதன் காரணமாகவே சாதி மறுப்பு இணையர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.தம்பதியினர் அல்லது அவருடைய உறவினர்களை ஊரைவிட்டு வெளியேற்றுதல்,தண்டம் விதித்தல்,சமூகப் புறக்கணிப்பு செய்தல்,பொருளாதாரத் தடை விதித்தல், சொத்துக்கள் மீதான உரிமையை மறுத்தல் போன்ற கொடுங்குற்றங்களும்
அறங்கேற்றப்படுகின்றன.
பெற்றோர்களும்,உறவினர்களுமே இங்கே குற்றம் செய்கிற எதிரிகளாக இருக்கிறார்கள்.கொலைக்குற்றம் அல்லது கொடும் பாதகம் செய்த பெற்றோர்களையும்,உறுவினர்களையுமே எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டிய நிலையில் சாதி மறுப்பு இணையர்கள் இருக்கிறார்கள்.அல்லது அவர்களிடமிருந்து அஞ்சியே காலமெல்லாம் வாழவேண்டிய நிலையில் தள்ளப்படுகிறார்கள்.
சட்டவிரோதக் குற்றங்கள் உறவின் பெயராலாலும்,கூட்டாகவும் நடைபெறுவதால் நீதிக்கான போராட்டம் கடுமையாகிறது.உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை இடித்துரைத்ததை இங்கே கவனப்படுத்துகிறோம்.
“சட்டப்படி திருமண வயதை அடைந்த விமலா தேவி திலிப் குமார் தம்பதியினரை அழைத்து வருவதற்கு, கேரளாவுக்கு சிறப்பு குழுவை அனுப்பியது,அதையும் நாட்குறிப்பில் பதிவு செய்யாதது, கேரளாவில் இருந்து அழைத்து வந்த விவரத்தையும் பதிவு செய்யாதது, காவல் நிலையத்திலேயே கும்பலாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது” இது ஏதோ விமலாதேவி வழக்கில் மட்டும் நடைபெற்ற குற்றம் அல்ல.
ஏறக்குறைய அனைத்து சாதிமறுப்பு கொலைகளிலும் நடைபெறுகிற குற்றம்.
நீதி நிலைநாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வழக்கிலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற சமூக சீர்திருத்த அமைப்புகளின் பங்களிப்புகளும்,உழைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒன்றிய அரசின் போது இந்திய சட்ட ஆணையமே இத்தகைய ஒரு சட்டம் தேவை என்று பரிந்துரை செய்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநில அரசு சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றியுள்ளது. “ராஜஸ்தான் திருமண இணையர் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் பெயரால் தலையீடு தடுப்பு சட்டம் 2019 (The Rajasthan Prohibition of Interference with the Freedom of Matrimonial Alliances in the Name of Honour and Tradition Act 2019) .சாதிய ரீதியான திரட்டல் மூலம் ஒரு சமூக நிர்ப்பந்தத்தை பெற்றோர் உறவினர் மீதும் சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு எதிராகவும் ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கான அம்சங்களை கொண்டதாக அச்சட்டம் அமைந்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் சக்தி வாகினி வழக்கிலும் தரப்பட்டுள்ள வழிகாட்டல்கள் சட்ட வடிவம் பெற வேண்டும்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி அமைக்கப்பட்ட மாவட்ட சிறப்பு பிரிகளும் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.
உடுமலை சங்கர் துவங்கி பல்வேறு சாதி ஆணவப்படுகொலைகள் காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள படாததால் நடந்தவைகளே.
எனவே தான் சிறப்புச் சட்டம் அவசியமாகிறது. குற்றங்கள் நடைபெறவுள்ள சூழல்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவராக கருதப்படும் நபருக்கோ, அல்லது நபர்களுக்கோ தேவையான தடைகளை விதிக்கவும். தடையை மீறினால் அவர்கள் மீது சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கும் வகை செய்யப்பட வேண்டும்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதியினர் வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ காவல் நிலையத்திலோ அல்லது அரசு அதிகாரியிடமோ ஒரு உறுதிமொழியை தெரிவித்த பின்பு அவர்களை பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடக்கூடாது.மீறினால்o சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது அவதாரம் மற்றும் சிறை தண்டனை விதிப்பதற்கு வகை செய்யப்பட வேண்டும்.
குற்றவாளிகளில் கொலை செய்தவர்களை இ.பி.கோ 302 ன் படி தண்டிக்கப்படுவது போல் கொலை மற்றும் குற்றங்கள் திட்டமிடுகிற போது உடன் இருப்பவர்களும் கொலை குற்றவாளியாகவே கருதப்பட வேண்டும்.
கொலைக்குப் பிறகு அல்லது வன்முறைகளுக்கு பிறகு அதனை புகழ்கிற அல்லது பொதுவெளியில் பகிரங்கமா ஆதரிக்கிற நடவடிக்கைகளும் குற்றமாக கருதப்பட வேண்டும்.
இத்தகைய தன்மைகளோடு சிறப்பு பிரிவுகள் அமையவேண்டும். எனவே சாதிய ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட ,தமிழக அரசு உடனடியாக சிறப்பு பிரிவுகளுடன் கூடிய சிறப்பு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம்பரியம் மேலும் மெருகூட்டப்பட வேண்டும்.